பஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி?

– பேராசிரியா் கு.மிகுந்தன்

ன்றைய தலைப்பு பலருக்கு அருவருப்பையும் வெறுப்பையும் தரும் என்றால் அது உண்மையே! பூச்சிகளை நாம் உணவாக்கலாமா என்னும் போதே மனதுக்குள் ஒரு நெருடல், புலால் உண்பதுவே பாவம் என நினைக்கும் பூமியிலிருந்து இப்படியொரு விடயம் பற்றி கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதா என எண்ணத்  தோன்றுகின்றது. ஆனால் உலகளாவிய நடப்பினை எம்மக்களுக்கு தெரியப்படுத்துவதே எழுதும் இக்கைகளின் நோக்கமாக இருப்பதனால் இது பற்றி கலந்துரையாட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. பூச்சிகள் என்பவை ஒரு வகை விலங்குகளாகும். ஆதலால் இங்கே பூச்சியுணவென்பது விலங்குணவாகும். ஆதலால் ஒரு பக்கம் விலங்குணவு என்பதனால் உண்ணுவதில் தவறில்லை என்பதும் மாறாக அருவருக்கத்தக்க பூச்சிகளை எப்படி நாம் உணவாக்கலாம் என்பதிலிருந்து அதற்கான வாய்ப்பே இல்லை என்பதும் தெளிவாகின்றது. ஆனாலும் உலக நடப்பினை சற்று உள்வாங்கினால் பூச்சிகளை உணவாக்கும் தன்மை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

Prof.G.Mikunthanஏதோ விலங்குணவு, பூச்சியுணவு என மேலே கூறினாலும் இந்த பூச்சிகளை வளர்த்து உணவாக்குவது பற்றி உலகளாவிய ரீதியில் ஆய்வுகள் பல நடந்து கொண்டிருப்பதும் நடந்து முடிந்த ஆய்வுகளின்படி அதிகூடிய விலங்குணவை குறிப்பாக புரதத்தை பெறுவதற்கு பயிர்களை விடவும் இன்னும் கால்நடைகளை விடவும் பூச்சிகளை வளர்த்து உணவாக்குவது சிறந்ததாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறாக பூச்சி, பூச்சிகளை வளர்ப்பது செலவு குறைவென்பதாலும் அவற்றில் அதிகமான புரதம் காணப்படுவதும் இதற்கு காரணமாகும். காலம் மாறி கோலமும் மாறும் என எண்ணுகின்றீர்களா? உலக உணவு தாபனத்தின் தரவுகளின் படி பூச்சியுணவுக்கான மவுசு மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டு செல்வதாக குறிப்பிடப் படுகின்றது.

பூச்சிகளின் சுரப்புக்களை இன்னும் அவற்றுக்காக சேமிக்கப்படும் உணவை குறிப்பாக தேனை நாம் உண்ணுவது தவறாகத் தெரியவில்லை. இங்கே பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன்சுரப்பு மிகவும் ஜதானதாக இருப்பதனலால் அவற்றை தேனீக்கள் தமது வாயுறுப்பினால் உறுஞ்சி அவற்றினது உமிழ்நீர்ச் சுரப்பினால் கலந்து சற்று இறுக்கமானதாக்கி தேன்வதைகளிலே தமது இளம்பூச்சிகளுக்காக சேமித்து வைக்கின்றன. இவற்றினது உமிழ்நீர் கலப்பதனாலும் நீர்த்தன்மை வெகுவாக குறைந்து இறுக்கமானதாக இருப்பதனாலும் அதிக இனிப்பினைக் கொண்டிருப்பதனாலும் தேன் எப்போதும் கெட்டுப்போவதில்லை. நாம் தற்போது பயன்படுத்தும் தேனை பெறுவதற்கு சாதாரணமாக தேன்வதையை பிழிந்து எடுப்பார்கள். மலைத்தேனாக இருந்தால் தேனீயை புகையூட்டி அல்லது தேன்வதையை எரியூட்டி இறக்கச்செய்து தேனை பிழிந்தேடுப்பார்கள். இவ்வாறு செய்யும் போது இளம் தேனீக்களும் அவற்றினது புழுக்களும் சேர்ந்தே பிழியப்பட்டு தேனில் வரும். ஆக மொத்தத்தில் சுத்தமான தேன் என்றாலும் அது தேன்வதையை பிழிந்தெடுத்த தேனாகத்தான் இருக்குமே தவிர சுத்தமானதாக இருக்காது. ஆனால் அண்மையில் கண்டுபிடிப்பொன்றில் தேன்வதையை பிழிந்தெடுக்காது தேனீக்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காது தேனை புத்திசாதுரியமான முறையில் இலகுவாக பெறுப்படுகின்றது. இதற்கான தேன்பெட்டியுடனான சிறப்பாக உருவாக்கப்பட்ட தேன்வதை ரூபா 60.000 – 80.000 வரை விலைபோகின்றது.

ஆனால் பூச்சிகளை வளர்த்து உணவாக கொள்வது எமது கலாச்சாரத்தைப் பொறுத்தவரையிலும் இன்னும் எமது மக்களைப் பொறுத்த வரையிலும் ஒரு அருவருக்கத்தக்க விடயமாக கருதப்படுகின்றது. ஆபிரிக்க நாடுகளில் இந்த நடைமுறை இருப்பதாக தெரியவந்தாலும் பல பூச்சிகள் உணவாக உட்கொள்ளக்கூடியன என ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இவ்வாறான பூச்சிகளின் உணவின் நம்பகத்தன்மை பற்றியும் அவற்றினால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் பற்றியும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். பூச்சிகளால் மனிதனுக்கு நோய் ஏற்படுவதற்கான பல வாய்ப்புக்கள் இருந்தும் வேறுவகையான உணவாக உட்கொள்ளக்கூடிய பூச்சிகளை பற்றிய ஆய்வினை முன்னெடுப்பதன் நோக்கம் இலகுவான, விலைகுறைவான, சிறந்த புரதச்சத்தை பெறுவதற்காக ஆகும். பயிர்ச்செய்கைக்கு, கால்நடைவளர்ப்பிற்கு ஏற்படும் செலவினத்தை விட பூச்சிகளை வளர்ப்பது குறைவாக இருக்கும் என்பதும் ஒரு காரணமாகும்.

பூச்சிகளை உணவாக கொள்ளும் போது நுண்ணங்கிகளினால் மனிதனுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கின்றது என ஊகிக்கப்படுகின்றது. குறிப்பாக கால்நடைகளில் பிறையோன் எனப்படும் சமநிலையற்ற புரதத்தினால் போவைன் ஸ்பொன்ஜிபோம் என்செபலோபதி (Bovine spongiform encephalopathy)  எனும் நோயும் மனிதனில் கிறெயெற்ச்பெல்ட் – ஜகோப் (Creutzfeldt – Jakob Disease) நோயும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. மேலும் உணவு மாசடைதல் பற்றிய ஆய்வில் பூச்சிகளை பதப்படுத்தியோ அல்லது பதப்படுத்தாமலோ பயன்படுத்தும் போது உயிரியல் மற்றும் வேதியல் சார்ந்த மாசாக்கிகளின் பாதிப்பு மனிதனுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகின்றது. இது பற்றி விஞ்ஞான உலகம் இன்னும் அலசிஆராய வேண்டும். இது தவிர பூச்சிகளை வளர்த்து உணவாக்கல் என்பதனை மாற்றி பூச்சிகளை வளர்த்து அவற்றிலிருந்து பெறக்கூடிய நன்மைகளை மட்டுமே உற்றுநோக்கினால் பட்டுப்பூச்சி வளர்ப்பு, தேனீவளர்ப்பு, ஒட்டுண்ணிகள் மற்றும் இரைகௌவிகள் வளர்ப்பு, இன்னும் மகரந்த சேர்க்கையாளர்களை வளர்த்தல், ஏனைய நன்மை தரும் பூச்சிகளை வளர்த்து பயன்பெறுதல் அனைத்தும் இதிலடங்கும்.

கோதுமைமாவில் தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்களில் பூச்சிகளின் முட்டைகள் புழுக்கள் கலந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. சரியான முறையில் களஞ்சியப்படுத்தாத உணவுப் பொருட்களில் இந்த பிரச்சனை எழ வாய்ப்பிருக்கின்றது. கோதுமை மாவினை அரிக்கும் போது சிவப்பு நிற வண்டு ஒன்று அரிதட்டில் தட்டுப்படும். அதனை என்னவென்று நினைக்கின்றீர்கள். ஒரவகை கோதுமைமாவை உண்ணுகின்ற பூச்சியே அதுவாகும். இவ்வாறு பூச்சிகள் அதிகமாக இருந்தால் நிச்சயமாக அவற்றினது முட்டைகளும் அந்த மாவில் இருக்கும். அப்படியாயின் பாணும் கொத்து ரொட்டியும் பணிசும் இப்பூச்சிகளின் முட்டைகள் மற்றும் இளம்பருவங்களை சேர்த்து அரைத்தெடுத்ததாக இருக்கும் என உங்களது ஊகத்தை எவரும் மறுப்பதற்கில்லை. இது பற்றிய விரிவான ஆய்வுகள் பலநாடுகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அவை பற்றிய முடிவுகள் வரும்போது தெரிந்து கொள்வோம். அதுவரை பூச்சிகளை உணவாக உட்கொள்ளுவது பற்றி நாம் அவசரமாக முடிவெடுக்க தேவையில்லை.

Related posts

*

*

Top