புற்று நோயும் பசுமைக் கிராமங்களும் !

– பேராசிரியா் கு.மிகுந்தன்

ல்ல செய்தியொன்றுடனும் மனதை நெருடிய திடீர் இழப்பொன்றுடனும் எழுதும் கைகள் உங்களைச் சந்திக்கின்றன. நல்ல செய்தியென்றால் துணிச்சலான சில முடிவுகள் அநேகமாக நாம் என்றோ சாதிக்க நினைத்ததை, முடியவில்லையே என தளர்வடைந்த காலங்களில் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்துவிடுகின்றன. அந்த வகையில் தற்போது வந்திருக்கின்ற செய்தியாக சூழலுக்கிணைவான பத்தாயிரம் பசுமைக்கிராமங்களை உருவாக்குதல் என்னும் முடிவு நாட்டின் தலைமை ஆட்சியாளரிடமிருந்து வந்திருக்கின்றது. விவசாயத்தில் முழுமையான ஈடுபாடுடையவரால் எடுக்கப்படுகின்ற நாளைய உலகம் நோக்கிய இவ்வாறான முடிவுகள் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் சுகாதாரத்திற்கும் நிச்சயம் வலுவூட்டும் என நம்பலாம். சூழலை விரைந்து மாசுபடுத்தும் பீடைநாசினிகளை குறிப்பாக களைநாசினிகளை தடைசெய்வதற்கு எடுக்கப்படும் முடிவுகள் முன்பிருந்தே தீட்டப்பட்டிருந்தால் நாம் சந்திக்கும் அவலம் தற்போது நடந்திருக்காது. பல உயிர்களையும் நாம் அனாவசியமாக பறிகொடுத்திருக்க வந்திருக்காது. ஒரு தேசத்தின் அபிவித்தியென்பது வளர்ந்திருக்கும் பெரிய மாடிக்கட்டடங்களில் இல்லையென்றும் அத்தேசத்திலிருக்கும் கிராமங்களின் வளர்ச்சியென்பது நன்றாகவே எமக்கு பொருந்தியிருக்கின்றது. கிராமங்கள் தேசத்தின் வளர்ச்சியில் வைத்துக்கட்டப்படும் செங்கற்களாகும். அவற்றினை பசுமையாக்கி அதிலிருந்து பயனை பெற முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.

Prof.G.Mikunthanமேற்கூறியவற்றுடன் தொடர்பு பட்ட ஆனால் உள்ளத்தை நெருடவைத்த செய்தியாக இழப்பொன்றை மையப்படுத்திய செய்தியது. வடபுலத்தில் அவசியமாக கருத்தில் கொள்ளவேண்டிய உயிர்பறிக்கும் நோய்களுள் புற்றுநோயும் ஒன்று. என்னவோ தெரியவில்லை புற்று நோயினால் கண்முன்னே அவலப்பட்டு அவதிப்பட்டு அல்லலுற்று பல உயிர்கள் எம்மை விட்டு பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பெண்களை மையப்படுத்திய புற்று நோயின் தாக்கத்தினை நேரடியாக கண்டும் கேட்டும் அனுபவப்பட்ட நிலையில் இதனை இங்கே பதிவு செய்ய எழுதும் இக்கைகள் உந்தப்பட்டன. புற்றுநோயெனும் கொடிய நோயினால் வதைபட்டுப்போனவர்களுள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் உயிர்விஞ்ஞான துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னைநாள் தலைவியுமாக இருந்த திருமதி புவனேஸ்வரி லோகநாதன் அவர்களும் ஒருவராவர். பேராதனைப் பல்கலைக்கழக விவசாயப் பட்டதாரியாகி, முதுகலைமாணி பட்டதாரியாகியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடம் ஆரம்பித்த காலங்களில் தற்காலிக விரிவுரையாளராகி பின் வவுனியா வளாகத்தில் உயிர்விஞ்ஞான துறையில் விரிவுரையாளராகி, சிரேஷ்ட விரிவுரையாளராகி சிறந்த ஆசிரியப் பணி செய்து மேலும் பல சமூகப் பணிகள் புரிந்தவர். வீட்டுத்தோட்டம் பற்றிய நூலும் விவசாயிகள் வாசித்து அறிந்து கொள்வதற்காக எழுதிவெளியிட்டு நூலை வெளியிட்டபோது கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிய இயற்கையை விரும்பியவர். சேதன விவசாயத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் அதற்காக தனது ஆய்வுகளை முழுமையாக செய்தவருமாவர். வீட்டுத்தோட்டம், கழிவு முகாமைத்துவம் என்பனவற்றில் மக்களோடு ஒன்றுபட்டு பல செயற்பாடுகளை முன்னின்று செய்து அவற்றில் வெற்றியும் கண்டவர். நஞ்சற்ற விவசாயம் என்பது எம்மால் செய்யக்கூடிய ஒன்று என்பதனை அனுபவமூடாக எடுத்துக்கூறி அதில் மக்களை இணைக்க வேண்டுமென்ற அவா கொண்டு தனது ஆய்வுளை அதில் செய்து காட்டிய துணிச்சலான பெண்மணி இவர் என்றால் மிகையாகாது.

பெற்றெடுத்த மகவையும் நீண்டநாள் அணைத்து வைத்திருக்க கொடுத்து வைக்கவில்லை. அந்த வலி மாறமுன்பு பெண்மைக்குள்ளே புற்றுநோய் இடங்கண்டு கொண்டது. புற்று நோய் என்பது கொடிய நோய். நோயுற்றவருக்கும் அவருடன் வாழ்பவருக்கும் நிறைந்த துன்பத்தை தரும் ஈவிரக்கமற்ற கொடிய நோய் என கூறலாம். ஒருவருக்கு புற்று நோய் என முடிவாக்கப்பட்ட பின் அதற்கான பரிகாரங்களில் தலைமயிர் கொட்டுப்பட்டு உருவம் சிதைந்து தினந்தினம் தனது உருவத்தை தானே பார்த்து சகிக்க முடியாமல் உளமும் உருக்குலைந்து அவதிப்படுவதை காண்பவரையும் உலுப்பிவிடும் நோயிது. ஜம்பது வயதுகளில் இப்படிப்பட்ட வலிசுமந்து வாழ்ந்து பிரிந்திருக்கின்ற ஆத்மாக்களை அவர்கள் எண்ணிய விடயங்களை நாம் செய்து முடிப்பதொன்றே அவர்களுக்கான சாந்தியாக அமையும். கூடிப்பிறந்த உறவுகளை விட கூடிப்பழகிய நண்பர்களுக்கு தினந்தினம் துடித்து அதன் வலிதாங்கிய கொடுமையை தந்த வலிதந்த நோயிது. இந்த நிலை எவருக்குமே வரக்கூடாது என நோய்வந்தவர்கள் அதனால் அவதிப்பட்டவர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள். பரிகாரங்கள் பல இருந்தும் பாதி வழியில் அவர்களை நாம் பிரிந்துவிட்ட செய்திகள்தான் அதிகமாக இருக்கின்றன. இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானமும் முயன்று கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் பயன்படுத்தும் அசேதன நச்சு இரசாயன பதார்த்தங்களால் அவை எமது உடலுக்குள் மெதுவாக செறிவடைவதனால் இந்த பிரச்சனை ஏற்படுவதாக நம்பப்படுகின்றது. இன்னும் விஞ்ஞானத்தின் ஆய்வுப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டு இதற்கான துல்லியமான இனங்காணலும் தீர்வும் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

சேதன விவசாயத்தினை நோக்கிய நகர்வு தேசத்தின் விருத்திக்கு நல்லதொரு சகுனமென்றே கூறலாம். சேதன விவசாயம் சாத்தியமா இல்லையா என்பதல்ல வாதம். சேதன விவசாயத்தை நோக்கியதான எமது பயிர்ச்செய்கை நிச்சயமாக எமது வளமான சந்ததியை கட்டியெழுப்ப உதவும். இதற்கான ஒரு அடித்தளமாகவே வீட்டுத்தோட்டத்தை காண்கிறோம். வீட்டுத்தோட்டம் என்பது வீடும் வீடுசார்ந்த நிலப்பரப்பில் வளர்க்கப்படும் தாவரங்கள் அல்லது பயிர்களைக் குறிக்கும். இங்கே ஆண்டுப்பயிர்கள்,ஈராண்டு மற்றும் பல்லாண்டுப் பயிர்களும் உள்ளடக்கம். வீடு அமைந்திருக்கும் நிலப்பரப்பில் அமைக்கப்படும் அல்லது வளர்க்கப்படும் தாவரங்களடங்கிய தொகுதியினை வீட்டுத்தோட்டம் என கொள்ளலாம். வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் நாம் உற்பத்திசெய்து பெற்றுக்கொள்ளுதல் இந்த வீட்டுத்தோட்டத்தினுள் பொதிந்திருக்கும் உண்மையாகும். இது சாத்தியமா இல்லையா என்பது பற்றிய வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் நாம் செய்ய முடியும் என முடிவெடுத்து விட்டால் முடியாதா என்ன? இதற்கெல்லாம் கூட்டம் கூட்டி அளவளாவி செய்யலாமா இல்லையா என முடிவெடுக்க வேண்டுமா?

மாறாக பட்டினிச்சாவிலிருந்து மக்களை காப்பாற்றுதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு என்பனவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து இவ்வருடத்திற்கான இரண்டுநாள் ஆய்வு மாநாடு இலங்கை விஞ்ஞான மன்றத்தினால் கடந்த இரு தினங்களாக நடந்து முடிந்திருக்கின்றது. பலவிடங்களைப்பற்றி நடைபெறும் ஆய்வுகளைப் பற்றி கலந்துரையாடப்படுகின்ற இவ்வாய்வு மாநாடு உணவும் விவசாயமும், சூழலும் மாற்றுச்சக்தியும், சுகாதாரம் குறிப்பாக நீரிழிவு, காலநிலை மாற்றமும் இயற்கை பேரிடரும், டெங்கு, இயற்கையான விளைபொருட்கள், திண்ம கழிவு முகாமைத்துவம், இனந்தெரியாத சிறுநீரக நோய், விவசாய தொழில்நுட்பம், நீர் பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் என்பவற்றுடன் தொழிற்றுறை சார்ந்து அவற்றின் பங்களிப்பையும் இந்த ஆய்வு மாநாட்டில் ஆராயப்பட்டுள்ளன. புற்றுநோயைப் பற்றி பாரியளவில் கலந்துரையாடப்பட்டிருக்கும் இம்மாநாட்டில் அதற்கான தீர்வுகளும் திட்டங்களும் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. இம்மாநாட்டில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் தொழிற்றுறையாளர்களையும் அழைத்திருந்தமை சிறப்புக்குரியதாக இருந்தது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு என்பதனை வீடுசார்ந்த பிரச்சனையாக உள்வாங்கினால் அதற்கான தீர்வினை கண்டுகொள்ளல் இலகுவானதாகும். நஞ்சற்ற உலகம் மற்றும் நஞ்சற்ற தேசம் என்பதனை கொள்கையாக கொண்டால் இந்த அவலநிலைக்கு நாம் அனைவரும் இணைந்தே முற்றுப்புள்ளி வைக்கலாம். அந்த வகையில் வீட்டுத்தோட்டங்கள் இணைந்த கிராமத்தை வளர்த்தெடுப்பதே இங்கு முன்வைக்கப்பட்டுள்ள முன்முயற்சியாகும். அந்த வகையில் பத்தாயிரம் பசுமைக் கிராமங்கள் என்பது நல்ல முயற்சியாக இருக்கும் அதே நேரத்தில் கிராமத்தை நோக்கிய தொழில்நுட்பத்தின் வருகையும் தொழிற்சாலைகளை கிராமம் நோக்கி நகர்த்து அங்குள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டால் இவையனைத்தும் சாத்தியப்படும் காலம் உண்டு என நம்பலாம். முயற்சி தானே வாழ்க்கையின் வெற்றி, நாம் அனைவரும் இணைந்து இந்த வெற்றிக்காக பாடுபடுவோம்.

Related posts

*

*

Top