கடலின் அருகாகத் தானிருக்கிறோம்

– கருணாகரன்

“கடலின் அருகாகத் தானிருக்கிறோம்
நமது பேச்சொலிக்கும் மூச்சொலிக்கும் அப்பால்
கடல் தொலைவில் உள்ளது“ என்கிறோம்

கடலும் அப்படித்தான் வருவதும் போவதுமாக

“ஒவ்வொரு அலையையும் திறந்து பார்த்தால்
எப்படியிருக்கும்?” என்று ஒரு காகம் கேட்கிறது

“இத்தனை காலமாக அருகிருந்தும்
ஒரு பொழுதும் கடலில் குளித்ததில்லை
நீந்தி ஒரு பயணம் சென்றதில்லை
மீன்களோடு விளையாடியதில்லை” என்று
துக்கித்தது தென்னை

தோணிகளை நெருங்கி நின்று
வேடிக்கை பார்க்கின்றன மீன்கள்.
“இந்தத் தோணிகளில் ஏறிப் பயணம் செய்தால் என்ன?“
என்றது ஒரு மீன்
“படகோட்டுவதற்காக எத்தனை காலமாகக் காத்திருக்கிறேன்“
என்றது இன்னொரு மீன்.
“கரையில் நடந்து காற்று வாங்க வேண்டும்“ என்றது இன்னொன்று.

அது மீன்களின் வேடிக்கையா கவலையா விருப்பமா
என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

தோணிகளில் இருந்தபடியே
மீன்களின் விளையாட்டை ரசிக்கின்றன
காக்கைகளும் கடற்பறவைகளும்

கடலை விட்டு நீங்கிச் செல்லும் சூரியன்
மீண்டும் தான் வரும்வரையில் இருளை நிரப்புவதேன்?

நிரம்பிய இருளைக் கரைத்து விடுவதற்காக
ஓயாது முயல்கின்றன அலைகள்.
கடலுக்கும் சூரியனுக்குமிடையில்
இருளுக்கும் அலைகளின் ஒளிக்குமிடையில்
தொடரரும் மோதல்
அலைகள் ஓய்ந்தால் களைப்பின்றித் தூங்கலாம்
என்றிருக்கிறது கரை

அலைகள் மோதிக்கொண்டிருக்கும் கரையில்
காற்றும் கடல் நீரும் மணலும்
கடலின் மணமும் மிக நெருக்கமாக
அங்கே ஒரு பள்ளிவாசல்
அதற்கப்பால் ஒரு தேவாலயம்
அதற்குமப்பால் கோபுரம் நிமிர்ந்தவொரு கோயில்
நாமோ தொலைவில்

நீ எப்படி யாரோவாகினாய்?
எப்படி நாம் யாரோவாகினோம்?

Related posts

*

*

Top