வீட்டுத்தோட்டத்தினூடாக சூழலை பாதுகாக்கும் பொறிமுறை

Barack Obama

- பேராசிரியா் கு.மிகுந்தன்

ஞ்சம் பட்டினி என்பன அவரவருக்கு வந்தாலேயே தெரியும் என்பார்கள். ஆனால் இந்த மண்ணுக்குரியவர்களுக்கு இவை ஒன்றும் புதிதானவையல்ல. இலங்கையில் நாம் நெல்லுற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளதாக செய்திகள் வந்தாலும் அது குறிப்பிட்ட போகத்துக்கானது என்பது நிபுணர்களின் கருத்தாகும். உற்பத்தியை விரைந்து பெருக்குவதற்கு பல வழி வகைகள் இருக்கின்றன இன்னும் அவற்றை கடைப்பிடித்து உற்பத்தி பெருக்கமடைகின்ற போது ஊட்டச்சத்து பிரச்சனை எழுகின்றது. நாம் தற்போது உண்ணுகின்ற உணவு சுகாதாரமானதாக எமது உடலுக்கு தீங்கு விளைவிக்காதது என எவரும் சான்றிதழ் தர முடியாதிருக்கின்ற நிலை தற்போது காணப்படுகின்றது. உணவுற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் உண்ணுகின்ற உணவுஊட்டச்சத்து உள்ளதாக சமநிலையான உணவாக இருக்க வேண்டும் என்பது அவசியமானதாகும். ஊட்டச்சத்து இன்மையால் பல பிரச்சனைகள் உருவாவதாகவும் அறிய முடிகின்றது.

Prof.G.Mikunthanஇப்பூமியில் ஏறக்குறைய 795 மில்லியன் மக்கள் தேகாரோக்கியமாக வாழ தேவையான உணவில்லை என அறியப்படுகின்றது. இது இப்பூமியில் ஒன்பதில் ஒருவருக்கு என்னும் புள்ளிவிபரவியல் ஆகும். இதில் அநேகமானவர்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இதிலும் 12.9 சதவீதமானவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாவர்.

இனியொரு பசுமைப்புரட்சியென்பது பலரும் எதிர்பார்ப்பதைப்போல வெறுமனே உணவுற்பத்திப் பெருக்கத்துடன் முன்னிற்காது வேறு பலவற்றையும் விரைந்து பெற்றுக்கொடுக்கும் மக்களிணைந்த கூட்டு முயற்சியாகவே நாம் கருத முடியும். நடந்தேறிய பசுமைப்புரட்சியின் பலன்களை நாம் உணவில் அதன் உற்பத்தியில் பெற்றிருக்கின்றோம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எந்தவொரு தொழில்நுட்பமாயினும் அதனை தவறான வழியில் பிரயோகிக்கும் போது நாம் எதிர்பார்த்த பலன்களுக்கு மேலாக பாரதூரமான விளைவுகளையும் நாம் சந்திக்க வேண்டியேற்படுகின்றது. இது தவிர்க்க முடியாததாக இருப்பினும் பசுமைப்புரட்சியின் விளைவாக திருந்திய கலப்பின பயிரினங்களை பயன்படுத்தியபோது அவை உள்ளீடுகளில் முழுக்க முழுக்க தங்கியிருந்ததாலும் உள்ளீடுகளின் பாவனை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு பெருகியதாலும் எமக்கும் சூழலுக்கும் இதனால் பாதகமான விளைவுகள் ஏற்பட காரணமாயிற்று. இதனால் தற்போது நாம் இதிலிருந்து வெளியேறவும் முடியாமல் அதனை முழுமையாக உள்வாங்கவும் முடியாமல் தவிக்க வேண்டியாயிற்று.

உணவுற்பத்திக்கான அடித்தளம் நிறைவாகவே பசுமைப்புரட்சியினால் இடப்பட்டது என்பது நிதர்சனமே. ஆனால் அதன்பின்னரான விளைவுகளில் ஒரு சில பாரதூரமாக இருப்பதனை உறுதி செய்தபோது இவ்வாறான புதிய யுக்திகளையும் அணுகுமுறைகளையும் பலமுறை நீண்டகால பரிசீலிப்பின் பின்னர் உறுதிசெய்து கொள்வதே சாலப்பொருந்தும். பக்கவிளைவுகள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய வேறு மறைமுகமான விளைவுகள் என்பனவற்றை நாம் கூர்ந்து அவதானித்து ஆராய்ந்து தொழில்நுட்பத்தை சரியானதும் முறையானதுமான வழியில் எமக்கு பயனைத்தரக் கூடியவாறு பயன்படுத்த வேண்டும். எமது தவறான செய்கையால் தொழில்நுட்பத்தை தவறானதாக காட்ட முயல்வது எமது விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தொழிற்றுறை அபிவிருத்திக்கும் இடையூறாக இருக்கும்.

வீட்டுத்தோட்டத்தைப் பற்றி பலவகையில் பலவாக நாம் கலந்துரையாடினாலும் அதிலும் இன்னும் பல விடயங்கள் எமக்கு தெரியாத நிலையிலிருக்கின்றன. வீட்டுத்தோட்டம் எமது உணவுற்பத்திக்கு கணிசமான அளவு பங்களிப்பு செய்யவல்லது என்பதனை நாம் இன்னும் உணர்ந்து கொள்ள முடியவில்லையெனில் இதற்குமேல் உணவின்றி தவிக்கும் மக்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும். குறுநில மன்னர்களான சிறிய விவசாயிகளைப் பற்றியும் அவர்களது உற்பத்திப் பொருட்களைப் பற்றியும் உற்பத்தி செய்யவல்ல திறனைப்பற்றியும் இறுதியாக உலக உணவு ஸ்தாபனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட றியோ1020 எனும் உலகளாவிய மாநாடு நிறையவே அலசி ஆராய்ந்துள்ளது. இதில் சிறுவிவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றி பலமாக ஆராயப்பட்டுள்ளது. வீட்டுத்தோட்டத்தில் உள்ள தாவர வகைகளின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும் போது அங்கே உயிர்ப்பல்வகைமையின் தன்னிறைவுக்கான நிலை கிடைக்க வாய்ப்புள்ளதல்லவா. உயிர்ப்பல்வகைமையை வீட்டுத்தோட்டத்தில் இலகுவாக நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியும். பல்வகைத் தாவரங்களை அதிலும் எமது தேவைக்காக வளர்க்கக்கூடியதை இனங்கண்டு தெரிந்து வளர்க்க முடியும்.

குறிப்பாக வீட்டுத்தோட்டத்தில் நாம் வளர்க்கக்கூடிய மரங்களைப் பற்றி கவனம் செலுத்துவது நல்லது. வீட்டுத்தோட்டத்தில் வளரும் வளர்ந்திருக்கும் இன்னும் நாம் நடுகை செய்யப்போகும் மரங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டினால் அவற்றின் பங்கு பற்றியும் இன்னும் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றோம் என்பதையும் கவனத்திற்கொள்ள முடியும். இங்கே மரங்களின் வயது, தண்டின் விட்டம், உயரம், நிலமேற்பகுதியின் விட்டம் அல்லது குறுக்குநீளம், மரத்தின் வகை, கிடைக்கும் நிழலின் விஸ்தீரணம் மற்றும் பல்வகைப் பயன்பாடு என்பன முக்கியமான தரவாகக் கொள்ளலாம். வளர்க்கும் மரங்களின் எண்ணிக்கை, அதில் பழமரங்கள், நிழல் மரங்கள், பல்பயன்தரும் மரங்கள் குறிப்பாக வருவாயைத்தரும் மரங்கள் மற்றும் கால்நடை தீவனமாக பயன்படும் மரங்கள், ஏறிகளுக்கு உதவும் மரங்கள் என்பனவற்றை இணைத்துக் கொள்ளலாம். மரங்களின் எண்ணிக்கையை நிர்ணயஞ் செய்தால் அவற்றுடன் ஏனைய தாவரங்களையும் இணைத்துக் கொள்ள எமக்குத் தேவையான பல்வகைத்தன்மை கிடைத்துவிடும்.

உணவுற்பத்தி வீட்டுத்தோட்டத்திலிருந்து அதுவும் இயற்கையையொத்த வீட்டுத்தோட்டத்து வேளாண்காட்டிலிருந்து கிடைக்க ஆவன செய்தல் வேண்டும். வேளாண்காடுகள் என்பன விவசாய நிலத்தில் மரங்களை நடுகை செய்வதன் மூலம் செயற்கையான காட்டினை உருவாக்குதலாகும். காடாக இருந்த இடங்களை கண்டபடி அழித்து நாம் குடியேறி இப்போது தொடர்ந்திருக்க முடியாதென்ற நிலை வந்த பின் அழித்த இடங்களில் மீண்டும் வேளாண்காட்டு மரங்களை நடுகை செய்ய முனைகின்றோம் அல்லவா. இயற்கையை அழித்து அழகும்பார்த்து இப்போது அந்த இயற்கையை செயற்கையாக உருவாக்க முயற்சிக்கின்றோம். மனிதனின் செய்கையால் இயற்கையும் அவ்வப்போது சீறிச்சினந்து கொள்கின்றது. இவ்வருடம் இயற்கை சாதுவாக ஆனால் வழக்கத்துக்கு மாறாக மழையை பின்தள்ளி வைத்திருக்கின்றது. வழமையாக பெய்ய வேண்டிய இடங்களில் மழை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. சில இடங்களில் விவசாய செய்கையை முழுiயாக செய்ய முடியாதளவுக்கு ஏமாற்றியுமிருக்கின்றது. முளைவிட்ட நெற்பயிர்கள் கருகுவதும் விவசாய பெருமக்களை கலங்க வைத்திருக்கின்றது.

இதனால்தான் மிஞ்சியிருக்கின்ற இயற்கையையாவது நாம் பாதுகாக்க முயற்சி செய்வோம். அழிந்தது போக இருப்பதை நாம் மேலும் அழிக்காமல் பேணிப்பாதுகாப்பதுடன் வேளாண் காடுகளையொத்த வீட்டுத்தோட்டத்தில் உருவாக்க வேண்டும். வேளாண்காடுகளை வீட்டுத்தோட்டத்தில் நடுகை செய்யும் மரங்களூடாக உருவாக்கலாம். திட்டமிட்ட மரங்களின் நடுகை மூலம் வேளாண்காடுகளை நாம் மெல்ல மெல்ல கட்டியெழுப்ப வேண்டும். வீட்டுத்தோட்டங்களில் பல்பயன்தரும் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் நல்லது. குறிப்பாக சீமைக்கிளுவை அல்லது கிளிறிசிடியா ஆகிய பல்பயன்தரும் மரத்திற்கு நடுகை செய்வதில் முன்னுரிமை கொடுப்பது சிறந்தது. கிளிறிசிடியாவின் பயன்பாடுகள் பல. அதனை வீட்டுத்தோட்டத்தில் பரந்த அளவில் நடுகை செய்து பயன்பாட்டை பெருக்கிக்கொள்ளலாம். இன்னும் பழ மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். தினமும் ஒரு பழமாவது உண்பதற்காகவாவது பழ மரங்களை நடுகை செய்யலாம்.

எமது சூழலை நாமே பாதுகாக்க வேண்டும். சூழலை மாசுபடுத்தும் பொருட்களின் பாவனையைக் குறைத்து சூழலை இயற்கையின் அழகில் வைத்திருக்கும் மரங்களை நடுகை செய்வதும் இயற்கையை பேணிப்பாதுகாக்கும் செயன்முறைகளுக்கு ஊக்கமும் கொடுக்க வேண்டும். இப்பூமித்தாயின் வனத்தை நாம் பேணிப்பாதுகாக்க வனத்தை வேளாண்மையில் உள்வாங்கி அதனை நாம் வாழும் வீட்டுத்தோட்டத்தினுள் விரும்பி உள்வாங்கிக்கொள்ள வேண்டும். நாம் நினைத்தால் இது முடியும். பூமித்தாயை நாம் வாழும் தேசத்தை வளப்படுத்த இயற்கையை மேம்படுத்தநாம் எமது சூழலைப் பாதுகாக்க வேண்டும். இன்னும் தெரிந்தெடுத்து அரிய வகை தாவரங்களை பயன்படுத்த முயற்சிக்கவும் வேண்டும். எமது உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொண்டால் இயற்கையாக கிடைக்கும் தாவரங்களை நாம் எமது உணவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்புண்டு. இவற்றை நாம் வீட்டுத்தோட்டத்திலும் வளர்த்த எமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Related posts

*

*

Top