என் காதல் தீரா நதி

– வேலணையூர் தாஸ்

உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்
நல்லுார் பின் வீதியில் இன்று மாலை
ஆண்டாளை சந்தித்தேன்
ஆம் கோதையென்ற இயற் பெயர் கொண்ட
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி அவளே தான்
எப்படி எப்படி- காதல் நிரம்பிய கண்களோடு
அப்படியே இருந்தாள்
இரண்டு நுாற்றாண்டு கடந்தும்

எப்படி இன்னும் இளமையோடிருக்கிறீர்கள் என்றேன்
காதல் தான் என்றாள்
என் காதல் தீரா நதி
அது பெருகிக்கொண்டே இருக்கிறது
அது அழியவில்லை
காதல் நீங்குவதாலே தான் மானிடர்க்கு முதுமை வருகிறது
அது அழியும் போது மரணம் வருகிறது என்றாள்.
கைவிரல்களை பார்க்கிறேன்
செங்காந்தள் விரல்கள் இடையே கறுத்து தழும்பேறி
எந்தை இல்லை நானே மாலை கட்டி சூடிக்கொடுக்கிறேன் சிரிக்கிறாள்
மெலிந்திருக்கிறீர்கள் என்றேன்
‘நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி மையிட் டெழுதோம் விரதம் தான்’
புன்னகைகிறாள் கோதை
இப்போதும் கண்ணன் மீது அதே காதலா
ம் குயில் மயில் ஏன் முகிலையும் மழையையும் கூட அவனிடம்

துாது அனுப்பினேன் கண்ணன் வரவில்லை
அவன் சிற்றாடை எடுத்து மார்மேலே போர்த்தினேன்
அவனணிந்த மாலை எடுத்து குழல் சூடினேன்
அவன் அருந்தும் நீர் அருந்தினேன்
ஆசை தீரவில்லை தாகம் அடங்கவில்லை
இன்னமும் காத்திருக்கிறேன்
இந்திர னுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்இ
வந்திருந் தென்னை மகட்பேச கனவு காண்கிறேன்
அவனோடு சேரும் வரை தீரா தெரியும் இக்காதல் தீ
என்ன சொல்கிறீர்கள் நீங்கள் கோவிலினுள் சென்று
கண்ணனோடு கலந்ததாகவல்லவா சொன்னார்கள்
இல்லை காணாமல் போனேன் – சிரிக்கிறாள்

நீங்கள் வேறுயாரையாவது கட்டியிருக்கலாம்
விழிகளில் தீயெரிய விழிக்கிறாள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன் கண்டாய் என்கிறாள்.
பேச்சளிந்து நிற்கிறேன் –
ம் ஆண்டாளை நான் எப்படி அடையாளம் கண்டேன்
அவள் இப்போது எங்கே இருக்கிறாள்
அவள் போன் நம்பர் என்ன
இதையெல்லாம் நான் சொல்லத்தான் வேண்டும்

Related posts

*

*

Top