திறன் அபிவிருத்தி வழிமுறைகளை இளைய தலைமுறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

– எஸ்.ரவி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குக் கடந்த வருடம் ஐந்து இலட்சத்து 36 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர். அதில் இரண்டு இலட்சத்து மூவாயிரம் பேர் மாத்திரம் தான் க. பொ. த உயர்தரத்திற்குச் செல்லக் கூடிய தகுதியைப் பெற்றிருந்தனர். ஏறத்தாழ 60 வீதமான மாணவர்கள் க. பொ. த உயர்தரத்தில் கல்வி பயில முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மேற்கொண்டு கல்வியைத் தொடர்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாக தொழில்நுட்பக் கல்லூரிகள், திறன் அபிவிருத்தி தொடர்பான வழிமுறைகளை எமது இளைய தலைமுறை சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கல்லூரியின் பணிப்பாளர் ஜெ.யூட் வொல்ரன்.

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியில் தேசிய திறன்கள் நாளை முன்னிட்டு அண்மையில் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் மாபெரும் தொழில்நுட்பவியல் கண்காட்சி நடாத்தப்பட்டது. மேற்படி கண்காட்சிக்கான ஆரம்ப நிகழ்வு அண்மையில் கல்லூரியின் பணிப்பாளர் சு.முகுந்தன் தலைமையில் கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
எங்கள் சமூகத்தில் திறன்கள் தொடர்பான அக்கறை குறைவடைந்து பெரும்பாலும் இளைஞர்கள் திறன்கள் அபிவிருத்தியில் நாட்டமற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் இந்தத் தொழில் நுட்பக் கல்லூரியில் பெருமளவான மாணவ, மாணவிகள் கற்பதையிட்டுப் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

எங்களுடைய நிறுவனங்களையும், நாட்டையும் எடுத்து நோக்குவோமானால் உயர் தரத்திலான திறன்களையுடையவர்கள், நடுத்தர ரீதியிலான திறன்களையுடையவர்கள், கீழ் நிலையிலான திறன்களையுடையவர்கள் என மூன்று வகைப்பட்ட ஆளணி வளமுடையவர்கள் காணப்படுகிறார்கள். உயர் தரம் மற்றும் கீழ் நிலையில் தேவையான ஆளணி வளம் காணப்படுகிறது. ஆனால், நடுத்தர ரீதியிலான திறன்களையுடையவர்களுக்கு மிகவும் பற்றாக் குறையானதொரு சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் தொழில் நுட்பக் கல்லூரிகள், பல்கலைக் கழகக் கல்லூரிகள் என்பன நடுத்தர ரீதியிலான திறன்களையுடைய ஊழியர் படையை விருத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த நிறுவனங்களைச் சரியான முறையில் எங்களுடைய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். க. பொ. த சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடையாத பட்சத்தில் மேற்கொண்டு வாய்ப்புக்கள் இல்லையெனச் சோர்ந்துவிடாமல் மேற்படி நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

Related posts

*

*

Top