வீட்டுத்தோட்டத்தில் பல்லாண்டுத் தாவரங்களின் அவசியம்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

சுமைப்புரட்சியின் அத்திவாரம் என்பது கிராமங்களின் அபிவிருத்தியே. கிராமத்து அபிவிருத்தியின் அடிநாதம் வீட்டுத்தோட்டங்களின் பேண்தகு விருத்தியே ஆகும். ஆக மொத்தத்தில் வீட்டுத்தோட்டம் என்பது நாங்கள் எதிர்பார்க்கும் இன்னொரு பசுமைப்புரட்சியினை வென்றெடுக்கும் நிறுவனமொன்றினைக் கட்டியெழுப்பும் செங்கற்களாகும். இதில் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே நாமெதிர்பார்க்கும் அந்த வெற்றியினை ஈட்ட முடியும். எது நல்லதோ அதனை நாம் கடைப்பிடிப்பதும் அதற்கு அனுசரணையாக இருப்பதும் நல்லவாழ்வுக்கு அத்திவாரம். இதென்ன வீட்டுத்தோட்டம் அப்படியென்ன அபிவிருத்தி என வெறுமனே வெட்டிப்பேச்சு பேசி விமர்சிப்பவர்களும் உண்டு. எழுதும் இக்கைகள் தம்பணி உணர்ந்ததால் யதார்த்தத்தை மெய்ப்பிக்க விரிவாக இதில் விளக்க முனைகின்றன.

Prof.G.Mikunthanமுயற்சி செய்பவருக்கே இவ்வுலகம். எதுவுமே செய்யத் திராணி இல்லாதவருக்காக வெறுமனே விமர்சிப்பவர்களுக்காக நாம் உண்மையாக உழைக்கும் அத்தனை நல்ல இதயங்களையும் சாடுதல் நன்றன்று. நாம் விரைந்து முனைப்பாக செயற்பட வேண்டும் என்ற குறிக்கோளில் வீட்டுத்தோட்டம் பற்றி இங்கே மேலதிகத் தகவல்களுடன் உங்களைச் சந்திக்கின்றேன். இன்றைய தலைப்பு அதற்கொல்லாம் மணிமகுடம் வைத்தாற்போல்; வீட்டுத்தோட்டத்தில் பல்லாண்டுத் தாவரங்களின் முக்கியத்துவத்தை மையப்படுத்தியதாக அமைகின்றது.

நாம் வாழுகின்ற வீட்டினைச் சுத்தமானதாக, சுகமானதாக, மனதிற்கு இரம்மியமானதாக, நஞ்சின்றி உணவினை உருவாக்கும் இடமாக இன்னும் பல்வகை உயிரினங்களைக் கொண்ட மகிழ்ச்சியான இடமாக ஆக்க வேண்டும். இது ஒவ்வொருவருக்குள் உள்ளார்ந்திருக்கின்ற விடயமாகும். ஆனால் இருவரை காலமும் வடமாகாணமெங்கும் சென்று பார்த்ததில் பலவகையான வீட்டுத்தோட்ட அமைப்புகளைக் காண முடிகின்றது. இது வீடு அமைந்திருக்கும் நிலப்பரப்பிற்கேற்ப, வசதி வாய்ப்பிற்கேற்ப இன்னும் அங்கிருக்கும் மண் வளத்திற்கேற்ப மாறுபடுகின்ற போதிலும் அவற்றில் இருக்கின்ற ஒற்றுமையையும் இன்னும் வடபகுதியெங்கும் பன்னாட்டு நிறுவனங்களினால் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியினால் ஊக்குவிக்கப்பட்ட வீட்டுத்தோட்டங்களையும் ஆராய்ந்த போது பல வீடுகளில் வீட்டுத்தோட்டம் என்பதனை மரக்கறி வகைகள் மற்றும் இலைக் கறிவகைகள் என்பவற்றோடு அலங்காரத் தாவரங்களையும் உள்ளடக்கியதாக காண முடிகின்றது.

ஒரு குறிப்பிட்ட போகத்துக்கான பயிர்களையும் இன்னும் ஓராண்டுத் தாவரங்களையும் முக்கியமாக உள்வாங்கியதால் அவற்றின் வளர்ச்சி முடிந்து அறுவடையும் செய்தபின் அந்த இடத்தில் வீட்டுத்தோட்டம் அழிந்திருந்ததை அல்லது வீட்டுத்தோட்டமே இல்லாதிருந்ததனை அவதானிக்க முடிந்தது. இன்னும் பல இடங்களில் குறைந்த எண்ணிக்கையான பல்லாண்டுத் தாவரங்களை உள்ளடக்கிய வீட்டுத்தோட்டங்களை அவதானிக்க முடிந்தது. மாறாக குறிப்பிட்ட இடங்களில் உள்ள வீடுகளில் அதிக எண்ணிக்கையான பல்வேறு வகையான பல்லாண்டுத் தாவரங்களை வளர்த்து இருந்தமையினால் அந்த வீட்டுத்தோட்டம் தொடர்ச்சியாக பயன்தரக் கூடியதாகவும் இன்னும் பசுஞ்சோலையாகவும் பல உயிரினங்கள் வந்து செல்லும் பல்வகைத்தன்மை கொண்ட இனிய சூழலாகவும் அமைந்திருந்தது. இவ்வாறான இடங்களில் வீட்டுத்தோட்டங்கள் தொடர்ச்சியாக அதன் அமைப்பை கொண்டிருந்ததனையும் பல வருடங்களாக அதன் இயற்கை வனப்பை இழக்காது தொடர்ச்சியாகப் பயன்தரும் இடமாக மாறியிருப்பதனையும் அவதானிக்க முடிந்தது.

வீட்டுத்தோட்டத்தில் பல்லாண்டுத் தாவரங்களின் அவசியம்! (1)

வீட்டுத் தோட்டமொன்றுக்கு நிலப்பரப்பினை மட்டுப்படுத்த முடியாது. அதில் வளரும் பயிர்களை கட்டுப்படுத்தவும் முடியாது. அனைத்து தாவரங்களுக்குள்ளும் ஏதோவொரு பயன்பாடு உள்ளது. நாங்கள் அந்த பயன்பாட்டை பெறுவதே நோக்காகக் கொண்டு இயற்கையாக செயற்கை உள்ளீடுகளின்றி வளரக்கூடிய தாவரங்களை வளர்த்து அவற்றிலிருந்து பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தாத ஆனால் அதிக பயனுள்ள பல தாவரங்கள் எமது சூழல்தொகுதியில் நிறைந்தே இருக்கின்றன. ஆனால் நாங்கள் குறிப்பிட்ட பயிர்வகைகளை வளர்த்து அவற்றையே உணவாகவும் உட்கொள்ளுகின்றோம். குறிப்பாக கத்தரி, தக்காளி, உருளைக்கிழங்கு, கோவா, வெண்டி என்பன பொதுவாக எமது உணவுக்குள் இருப்பதனைக் காணலாம். இவை தவிர பல வகையான அவரைப்பயிர்கள், சிறுதானியங்கள், மரக்கறிப்பயிர்கள், இலைக் கறிப்பயிர்கள், வள்ளி வகைகள், கிழங்குப் பயிர்கள், பழப்பயிர்கள் என பலவகையானவற்றை எமது சூழலில் பாரம்பரிய இனங்களாக காணலாம். அவற்றை விருத்தி செய்து அதன்மூலம் வீட்டுத்தோட்டத்தை விருத்தி செய்தால் இப்பயிர்களின் பயன்பாட்டை முழுமையாக பெற்றுக் கொள்வதுடன் பல்லாண்டுப் தாவரங்களை விருத்தி செய்யவும் வழி கிடைக்கும்.

வீட்டுத்தோட்டத்தில் பல்லாண்டுத் தாவரங்களான தென்னை, கமுகு, மா, பலா, கொய்யா, அன்னமுன்னா, ஐம்பு, மாதுளை, அகத்தி, முருங்கை, நெல்லி, தவசிமுருங்கை, கறிவேப்பிலை, தேசி, தோடை, மிளகு, பல்பயன்தரும் மரங்களான வேம்பு, தேக்கு, வேலித்தாவரங்களான கிளிறிசிடியா, பூவரசு, முட்கிளுவை, இன்னும் பலவகையான பழ வகைத் தாவரங்களையும் உள்வாங்கி வீட்டுத்தோட்டம் நிலைபேறானதாக தொடர்ந்து பயன்தரக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைக்கப் பெற்றால் வீட்டுத்தோட்டத்தின் பயன்பாடும் வீட்டுக்குத் தேவையான அனைத்து உணவினையும் இலகுவில் பெற்றிடலாம். மேற்கூறிய தாவரங்களுடன் மூலிகைத் தாவரங்களையும் உள்ளடக்கிக் கொள்ளலாம். குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி, இன்னும் பலவகை மூலிகைத் தாவரங்களை பயிரிட்டு அதனை உணவில் சேர்ப்பதன் மூலம் நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

வீட்டுத்தோட்டத்தில் பல்லாண்டுத் தாவரங்களின் அவசியம்! (2)

நோய்களை உருவாக்கும் நுண்ணங்கிகளுக்கெதிரான எதிர்ப்பு சக்தியை ஒவ்வொருவர் உடலிலும் உருவாக்கினால் அன்றி எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் நோய்களுக்கெதிராக எம்மால் தாக்குப்பிடிக்க முடியாது போய்விடும். இதனை 30.07.2016 அன்று இலங்கை நுண்ணங்கியியல் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் அனுசரணையுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் நுண்ணங்கியியல் பேராசிரியர் ரிம் ஐலிஸ் அவர்கள் விளக்கமாக கூறியிருந்தார். குறிப்பாக புற்றுநோய், காசநோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் முறையே கிளெப்சியெல்லா, எச்செரிச்சியாகோலய் மற்றும் ஸ்ரபிலோகொக்கசு என்பன இவ்வாறான நோயெதிர்ப்பு சக்தி குறைவினால் இலகுவாக பெருக்கமடைய வாய்ப்பாகின்றது என தெரிவித்தார். எமது நாட்டின் அனைத்து மக்களுக்கும் இந்த செய்தியை கொண்டு செல்வதுடன் அவர்களை சுகதேகிகளாக வாழ ஊக்குவிக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதும் அதனையே குறிக்கின்றது.

வீட்டுத்தோட்டத்தில் பல்லாண்டுத் தாவரங்களின் அவசியம்! (4)

Related posts

*

*

Top