இந்த எச்சில் பாத்திரத்தைக் கழுவி வையுங்கள்

 – சித்தாந்தன் சபாபதி

இந்த எச்சில் பாத்திரத்தைக்கழுவி வையுங்கள்
குருதியையும் நிணத்தையும்
சமைத்துண்டவர்கள்
இதை எறிந்துவிட்ட போயிருக்கிறார்கள்.
தங்களின் கைகளை
வாசனைத் திரவியங்களில் தோய்த்தெடுத்துவிட்டு
புலால் நாறும் வாய்களால்
மலர்களின் மகத்துவம் பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும்.
பழுப்பிலைகளில் துளிர்விடும்
யந்திரச் சொற்களால்
காலத்தின் ஊனத்தில்
பறக்கவிடுகிறார்கள் மகிமைக் காலத்தின்
வெண்ணிறத் துகிலை.
புரவிகளின் கொதிப்படங்காத் தெருவில்
இந்தப் பாத்திரம் கிடக்கிறது.
தனிமையின் நிமிடங்களில்
கரையேறாது கழிகின்றன
ஞாபகங்களின் திசுக்கள்.
யாராவது
இதைக் கழுவி வையுங்கள்

Related posts

*

*

Top