தோற்றடங்கிய காலத்தின் நினைவுகளின் மீது

– 

தோற்றடங்கிய காலத்தின் நினைவுகளின் மீது
அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிரானே!

உன் விக்கிரகங்களின் மீது
அப்பிக் கடக்கும் பாசியினடியில்
இன்னும் உன் புன்னகை மீதமிருப்பதாக
நான் நம்புகின்றேன்.
வர்ணங்களால் ஒளியுட்டப்பட்ட அறைகளில்
போதையின் நாற்றத்துடன்
உனது புனிதம் பற்றிய கதைகளை
இன்னும்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரானே!

நீர் அவசரப்பட்டு செத்துத்தொலைந்துவிட்டீர்
நீர் இல்லாக் காலத்தில்
எல்லோருமே புதிதாக வால் முளைக்க
தாவித்தாவி உம்புகழ் பாடுகின்றனர்.
பாத்தீரா கடைசியில்
காலம் அழகியதாக்கப்பட்ட
சிறுநீர்த்தொடடிகளில் மிதப்பதை.
நாய்களும் ஓலமிட அஞ்சிய நாட்களில்
மகிமை மாறாத உமது மந்திரங்களினாலான
ஒரு கீதத்தை மலம் நாறும் வெளியென
திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தனர்.
இன்று அவர்களின் வாய்களில்
அக்கீதங்கள் மலர்களாய் கிளைக்கின்றன.
போகட்டும் பிரானே!
உமது நாமத்தில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
புதிய பெயர்களுடன் உமது விம்பத்தின்
பிரதி விம்பங்களாக உலாவவருகின்றார்கள்.
பிரானே!

அவர்களை நீர் மன்னிப்பீராக
நீர் விட்டுச்சென்ற பாதையில்
அவர்கள் இன்னும் வழிப்போக்கர்களாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்.
நிச்சயமா
காலம் உம்மை ஒருபோதும் சாகவிடாது.

Related posts

*

*

Top