செல்வம் அருளானந்தத்தின் ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ நூல் அறிமுக நிகழ்வு

செல்வம் அருளானந்தத்தின் ‘எழுதித்தீராப்பக்கங்கள்’ நூல் பற்றிய அனுபவப் பகிர்வு நேற்று 06.08.2016 யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடந்தது. சோ.ப தலைமையேற்றுப் பேசினார். மிகச் சுவாரசியமாக செல்வத்தின் எழுத்தைப் பற்றி விவரித்தார்.

செல்வம் சொல்கின்ற யாழ்ப்பாண வாழ்க்கையை மையப்படுத்தி, ஏற்கனவே சோ.ப, ‘நினைவுச்சுவடுகள்’ ‘சுவட்டெச்சம்’ என்ற இரண்டு நூல்களைக் கவிதை வடிவில் எழுதியிருக்கிறார். அவையும் செல்வத்தின் மனிதர்களைப்போலவும் அந்தக் கால வாழ்க்கையைப்போலவும் இனிப்பு நினைவுகள். ஆகவே அதே லயிப்போடு துலங்கும் குரலில் அநாயாசமாக செல்வத்தின் கதைகளைச் சொன்னார் சோ.ப.

அடுத்தப் பேசியது குமாரதேவன். செல்வத்தின் கதைகளா, குமாரதவனின் பேச்சா சிறப்பு என்ற மாதிரிப் படு முசுப்பாத்தியாகக் குமாரதேசன் கதைத்தார். அவருடைய குரலும் பேசிய விதமும் அருமை. அரங்கு சிரித்துக் களைத்தது.

அடுத்தது செல்வமனோகரன். நல்ல ரசனையோடு தன்னுடைய லயிப்பானந்தத்தைப் பிழிந்து செல்வம் பானமாகத் தந்தார். சிரிப்பும் லயிப்புமாக ஒரு வித்தியாசமான கலவை. புத்தகத்தை வாசிக்க வைப்பதற்கு செல்வமனோகரன் நல்லதோர் வர்ணனையாளர், சிறந்த ஊக்கி என்று எண்ணினேன். நல்ல குரல்வளமும் வெளிப்பாட்டுத்திறனும் செல்வமனோகரனின் சிறப்புகள்.

இறுதியாக வந்தவர் கௌதமி. புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய சிரிப்பு இந்தக் கூட்டம் வரை தொடர்கிறது என்று தொடங்கி செல்வத்தின் எழுத்தைப்பற்றி தன்னுடைய புதிய தலைமுறை அனுபவங்களை முன்வைத்தார். நுண்ணிய அவதானிப்புகள்.

பொதுவாகவே சந்தோசமும் கொண்டாட்டமுமாக நிகழ்ச்சியிருந்தது. சிரிப்பொலி நிறைந்த பொழுதும் மண்டபமும். செல்வத்தின் எழுத்துக்கு நிகராக, அதைப்பற்றிப் பேசியவர்கள், ‘இப்படிப் புத்தக விமர்சன, அறிமுக அரங்குகள் நடந்தால் குடும்பத்தையே கூட்டிக்கொண்டு வந்து கொண்டாடலாம்’ என்றார் பக்கத்திலிருந்த நண்பர்.

இலக்கியம் ஏனைய கலைகளைப் போலச் சிந்தனைக்கும் கொண்டாட்டத்துக்குமுரிய ஒன்றுதான் என எல்லோரும் உணர வேணும். அப்படி உணரும்போது அது தன்னுடைய அறிமுகப்பரப்பை விரித்துக்கொள்ளும்.

செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித்தீராப் பக்கங்கள்' நூல் அறிமுக நிகழ்வு (1) செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித்தீராப் பக்கங்கள்' நூல் அறிமுக நிகழ்வு (2) செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித்தீராப் பக்கங்கள்' நூல் அறிமுக நிகழ்வு (3) செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித்தீராப் பக்கங்கள்' நூல் அறிமுக நிகழ்வு (4)

Related posts

*

*

Top