நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில் – நல்லூர் பற்றிய புதிய நூல்

– ச.லலீசன் 

ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில் என்ற நூல் வெளிவந்துள்ளது. 

நல்லூர் பற்றி வெளிவந்த நூல்களுள் இந்நூலில் ஓர் அழகும் முழுமையும் இருப்பதாகத் தெரிகின்றது. பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ஆகியோரது வழிப்படுத்தல்களும் நல்லூர் நிர்வாகத்தரின் ஒத்துழைப்புமே இதற்கு முதன்மைக் காரணங்கள் ஆகும். 288 பக்கங்கள் கொண்ட இந்நூலை வீரகேசரிப் பத்திரிகை நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.

நூல் ஆறு அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஆதிவரலாறும் புராதன ஆலயங்களும் நாற்றிசைக் கோவில்களும், இன்றைய ஆலயம் : உருவாக்கமும் அதன் பிரமாண்ட வளர்ச்சியும், நித்திய பூசைகள், வருடாந்த மகோற்சவம், பஞ்சாங்க முறைப்படியான சிறப்பு நாட்கள், முருகனுக்கும் பக்தனுக்கும் இடையிலான தனித்துவமான உலகம் என ஆறு பகுப்புக்கள் காணப்படுகின்றன.

இவ்வாண்டின் கொடியேற்ற நாளில் (08.08.2016) நூல் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதன் பிரதி நூலாசிரியரால் ஆலய நிர்வாகத்தரான குமாரதாச மாப்பாண முதலியாரிடம் கையளிக்கப்பட்டது.

நூல் முழுமையும் ஆர்ட் பேப்பரில் வண்ணப்படங்களுடன் காணப்படுவது நூலுக்கு அணிசேர்ப்பதாக அமைந்துள்ளது. நல்லூர் தொடர்பாக சாதாரண அடியவர்கள் இதுவரை தரிசிக்காத பல படங்கள் இங்கு பிரசுரமாகியுள்ளன.

யாழ்ப்பாண அரசர்காலச் செய்திகளுக்குப் போதிய ஆதாரங்கள் வழங்க முடியாத நிலையில் தற்போது அதனை எவர் உரைத்தாரோ அவரது கூற்றுவாக்கியமாக செய்திகள் பகிரப்பட்டுள்ளமை வரலாற்றில் திரிபு ஏற்படாத் தன்மை குறித்த நூலாசிரியரின் கவனத்தைப் புலப்படுத்துகின்றது. இதேவேளை ஏனைய வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டும் குருக்கள் வளவின் உரிமை பற்றிய சர்ச்சைகளை நூலாசிரியர் இங்கு தவிர்த்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

இயல் இரண்டில் மாப்பாண முதலியார் பரம்பரை பற்றிய செய்திகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. இதுவரை எந்த நூலிலும் காணமுடியாத செய்திகள் இங்கு உள்ளன. வருடாந்த மகோற்சவம் பகுதியில் ஒவ்வொரு திருவிழாவுக்கும் உள்ள சிறப்பு உரைக்கப்பட்டுள்ளது. அந்த திருவிழாவின்போது உலாவரும் முருகக் கோலம் வண்ணப்படமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முருகனுக்கும் பக்தனுக்கும் இடையிலான உலகம் என்ற பகுதியில் முருகனடியவர்கள் எவ்வாறு தமக்கும் கோவிலுக்கும் இடையில் ஈர்ப்பு ஏற்பட்டது என்பதைச் சுவைபடப் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சின்மய மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்கிரத சைதன்யா, கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், கலாநிதி ஆறு.திருமுருகன், பேராசிரியர் என். சண்முகலிங்கன், கம்பவாரிதி இ.ஜெயராஜ், செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், சுப்பிரமணியம் தனபாலசிங்கம், கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன், பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், குமாரவேல் வேல்முருகன், மாரிமுத்து குலசேகரம், கந்தசுவாமி தர்மராஜ், கந்தையா சண்முகலிங்கம், தியாகராஜா மாணிக்கவாசகர் என அடியவர்கள் பலர் முருகன் பெருமைகளை நினைந்து உருகித் தமது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

என்னைப் பொறுத்த வரையில் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் பற்றி வெளிவந்த நூல்களுள் குல. சபாநாதன் எழுதிய நல்லூர் கந்தசுவாமி என்ற நூலுக்குத் தனித்துவமான சிறப்பு உள்ளது. 12.08.1965இல் கோவில் நிர்வாகத்தராகிய இ.குமாரதாஸ் மாப்பாண முதலியாரது ஆசியுரை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னர் பல நூல்கள் வெளிவந்திருந்தாலும் நிர்வாகத்தரது ஆதரவு அவ்வெளியீடுகளில் இருந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள உமாசந்திரா பிரகாஷின் நல்லூர்க் கந்தசுவாமி பெருங்கோயில் என்ற நூல் தனித்துவமான கவனயீர்ப்பைப் பெறும் எனத் திடமாக எதிர்பார்க்கலாம்.

கலை நுட்பங்களுடன் பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூலின் விலை இரண்டாயிரம் ரூபா ஆயினும் நூலாசிரியரிடம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. நல்லூர் தொடர்பாக அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது என்றால் மிகைப்படாது.

Related posts

*

*

Top