அரச அதிகாரிகளுக்கு எதிராக போராடும் நிலையில் மக்கள்

– துன்னாலைச் செல்வம்

படித்தால் தான் களவெடுக்கமுடியும் என்று இப்பத்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லும் பொன்மொழியாகும். களவெடுப்பதற்கு படிக்க வேண்டும் என்ற பொருள் அல்ல. அதாவது படித்தால் அரச அலுவலகத்தில் உயர் பதவி கிடைத்து வேலை செய்யும் போது பிரதேச அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை இலகுவாக களவெடுக்க முடியும். பிடிபட்டாலும் தண்டனை என்ன தெரியுமா இடமாற்றம் தான். படிக்காமல் களவெடுத்தால் அவ்வளவுதான் சிறையில் அடைத்து விடுவார்கள். அதனால் தான் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு படித்தால் தான் களவெடுக்க முடியும் என்று அறிவுரை கூறுகிறார்கள்.

அரச அலுவலக அதிகாரிகளால் வடக்குப் பிரதேசம் பின்தங்கிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதோடு சமூகச் சீர்கேட்டுக்கும் துணை போகின்றார்கள். பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். திறமையில்லாத இவர்களால் வடக்கு அபிவிருத்திக்கு அரசு நிதிகளை வழங்கியும் அந்த நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான வேலைகள் தெரியாமல் இருப்பதால் அந்த நிதி திரும்பிச் செல்கிறது. இது இப்படி இருக்கையில் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் சில வேலைகளை மட்டும் செய்துவிட்டு அந்த நிதியில் ஒரு பங்கை அரச அதிகாரிகள் திருடுவதால் அபிவிருத்தி வேலைகள் தரமானதாக இல்லாது இருப்பதைக் காண முடிகிறது. இதற்குள் வடக்கில் உள்ள திணைக்களங்கள் 67 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதற்கான கணக்கு வழக்கு இல்லை. எத்தனை கோடியை எந்த அதிகாரிகள் சுருட்டினார்கள் தெரியவில்லை.

இதனால் மக்கள் இவர்களுக்கு எதிராக இன்று போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

விடுதலைக்காக இராணுவத்தினருக்கு எதிராக போராடிய மக்கள் இன்று வாழ்வாதாரத்துக்காக அரச தமிழ் அதிகாரிகளுக்கு எதிராக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இன்று தமிழ் மக்களின் முதன்மைப் பிரச்சினைக்கு இவர்கள் தான் காரணமாக அமைகின்றார்கள். தன் மக்கள் தனது இனம் என்று கூட பார்க்க முடியாமல் இருக்கும் இவர்களால் தான் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள முடிகிறது. ஒரு தாய்க்கு பிறந்திருந்தால் தமிழ் இனப் பற்றுதமிழ் மொழிப் பற்று இருக்கும் என்று முன்னோர்கள் சொன்னது பொய்யாகி விடுமோ என்றஅச்சம் எழுகிறது.

நிர்வாகச் சீர்கேடு ஊழல் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற காரணமாக வடக்கில் பல அதிகாரிகள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைக்காக இவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் இவர்களுக்கு இடமாற்றம் தான் தண்டனையாக வழங்கப்படுகிறது. இதனால் இவர்களின் தீயசெயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பில் நாம் அனைவரும் இருக்கும் நிலையில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு தகுந்த தண்டனை வழங்குமா அரசு என்று மக்கள் கேட்டு நிற்கின்றனர்.

திட்டமிடல் பணிப்பாளராக இருக்கும் அம்மணி செய்த நிர்வாக சீர்கேடு வெளிச்சத்துக்கு வந்ததால் இவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றரைக் கோடி ரூபாய் ஊழல் மோசடி சம்பந்தாமாக இவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதே அலுவலகத்தில் கிளாக்காக பணியாற்றும் இன்னொரு அம்மணியின் தில்லாளங்கடி வேலையும் வெளிச்சத்துக்கு வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு கையும் களவுமாகவும் பிடிபட்டும் இவருக்கு வழங்கப்பட்ட இடமாற்ற தண்டனை மேலதிகாரிகளால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாகன உதிரிப்பாகங்களுக்கும் காகிதாதி பொருட்களுக்கும் இவரையே பொறுப்பாக நியமித்திருந்தார்கள். வாகன உதிரிப்பாகக் கம்பனியுடன் டீலிங் பேசி ஒரே மார்க்கில் உள்ள தரம் குறைந்த ரயர்களை கொள்வனவு செய்து ஆட்டையைப் போட்டுள்ளார். அது பிடிபட்டுப் போனது. அடுத்தது இதே அலுவலகத்தில் சைக்கிள் வழங்குவதில் முறைகேடு என்று களவுகள் தொடர்ந்து கொண்டே போகிறது.

பிரதேச செயலராக இருந்த அம்மணி செய்த நிர்வாகச் சீர்கேட்டால் அவரை ஒரு அலுவலகத்துக்கும் மாற்ற முடியாமல் இதே அலுவலகத்தில் சும்மா ஒரு வேலையும் வழங்க முடியாமல் இருத்தி விட்டிருக்கிறார்கள். இதேபோல் வலிகாமப்பகுதி ஒன்றின் பிரதேச செயலராக இருந்த ஒருவர் நிர்வாகச் சீர்கேடு வெளிச்சத்துக்கு வந்து தண்டனையாக இடமாற்றம் வழங்கியபோது இவர் செல்ல வேண்டிய அரச அலுவலகம் அமைந்த பிரதேச மக்கள் இவரை இங்கே அனுப்ப வேண்டாம் என்று ஒரு ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இவரை எங்கே போடுவது என்று தெரியாமல் அங்கேயே இவரை சும்மா ஒரு வேலையும் வழங்க முடியாது இருத்தியுள்ளது. இவர் தனது மகன் புலமைப்பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளியான 139 புள்ளிகள் பெற்றும் பிரபல பாடசாலை ஒன்றில் கூடுதலான பணத்தைக் கொடுத்து தனது மகனைச் சேர்த்திருக்கிறார். இதற்கு அந்தக் கல்லூரியின் உப அதிபர் காரணமாக அமைந்துள்ளார்.

வவுனியாவில் சமுர்த்தி அதிகாரிகள் 3 பேர் செய்த ஊழல் மோசடி அம்பலத்துக்கு வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் யாழில் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக சமுர்த்தி அதிகாரி ஒருவர் பிடிபட்டு இடமாற்றம் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக அரச அதிகாரிகள் களவுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. இவர்களால் எப்படி பிரதேசம் முன்னேறும். அரச அலுவலகத்தில் உள்ள அதிகாரி இப்படி நடந்து கொள்ளும்போது அவருக்கு கீழ் உள்ள அலுவலர்களும் இவர்களைப் பார்த்து நடந்து கொள்கின்றனர். இதனால் ஒட்டு மொத்த அரச அலுவலர்களே களவுகாரர்களாக மாறி வருகின்றனர்.

Related posts

*

*

Top