குறிஞ்சிக் குமரன் தாக்குதல் – இனவாதமா? ராகிங்கா?

Barack Obama

- கிரிஷாந்த்

குறிஞ்சிக் குமரன் தாக்குதல் பின்னணி என்ன ?

இதனை உறுதிப்படுத்திய பின்னரே பதிவிடுகிறேன். குறித்த தினத்தில் குறித்த பீட அனைத்து இன மாணவர்களுக்கிடையிலுமான கலந்துரையாடல் ஒன்று நடந்து கொண்டிருந்திருக்கிறது.

kirisant - vithaiஅதன் போது சாப்பிட்டு வருகிறோம் என்று சில சிங்கள மாணவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். வழியில் முஸ்லீம் மற்றும் தமிழ் மாணவர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று விட்டு திரும்புவதை அவதானித்தவர்கள் சரமாரியாக தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு பின்னணி ஏதும் தெரியவில்லை. திட்டமிட்ட தாக்குதலுமில்லை,  தற்செயலாக வந்த வேளை இதை செய்திருக்கிறார்கள் என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

பின்னணி – குறித்த பீடத்தில் மாணவர்கள் தமது ஒன்றியத்தின் சார்பில் உண்டியல் மூல நிதி சேகரிப்பில் ஈடுபடுவார்கள். இதன் போது தமிழ் மாணவிகள் அசொகரியங்கள் காரணமாக பங்கு பற்றுவதில்லை. அங்கே பொது வெளியில் அப்படி ஈடுபட அவர்களுக்கு விருப்பமில்லை என்ற காரணத்தினால் தமிழ் மாணவர்களே அதில் ஈடுபடுவதாக இருந்திருக்கிறது. அதில் கடந்த வருடம் வரை எந்த குழப்பமும் இல்லை. பிறகு வந்திருக்கும் புதிய மாணவர்கள் பலர் தமது மாணவிகள் வருகிறார்கள் ஆனால் தமிழ் மாணவிகள் வருவதில்லை என்று பேசியிருக்கிறார்கள். இது உள்ளே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையாக உள்ளது.

குறிஞ்சிக் குமரன் ஆலயத்திற்கு சென்ற மாணவிகளுக்கு துணையாகவே குறித்த மாணவர்கள் சென்றிருப்பதாக தெரிய வருகிறது. முஸ்லீம் மாணவர்களும் தமது வழிபாட்டுக்கு சென்று விட்டே திரும்பியிருக்கிறார்கள். இதன் போதான தாக்குதலை நாம் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ள முடியும்.

எதன் உதவியுடன் ஒருவர் அடக்குமுறையை கட்டவிழ்க்கிறார் என்பதை நாம் பேராதனை விடயத்தில் பார்க்க வேண்டும்.

ஒரு அரசு எப்படி அதன் இராணுவத்தையும் பொலிசையும் கொண்டு அடக்குமுறையை மற்றவர்களை துன்புறுத்துவதை நிகழ்த்துகிறதோஈ அதையே தான் பல்கலைக் கழகங்கள் ராகிங் மூலம் செய்கின்றன.

ராகிங் இல்லையென்றால் இதனை தெளிவான தூலமான முடிவாக ‘இனவாத / இனத்துவேச’ நடவடிக்கையாக நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் நடந்திருக்கும் குறித்த பீடத்தில் ‘பொது ராகிங்’ நடைமுறைகள் இருக்கிறது, பல பீடங்களில் அவ்வாறு இல்லை. குறித்த மொழி பேசும் மாணவர்களே தமது மொழி பேசும் மாணவர்களை ராகிங் செய்வார்கள், மாணவர்கள் தாக்கப்பட்ட குறித்த பீடத்தில் யாரும் யாரையும் ராகிங் செய்யலாம். அது அதன் நடைமுறை. தடை செய்யப்பட்ட ஒரு நடைமுறையில் அனைத்து மாணவர்களும் ஈடுபடும் போது தமது மொழி பேசும் மாணவர்களை அடித்தால் என்ன பிறமொழி பேசும் மாணவர்களை அடித்தால் என்ன? இரண்டுக்கும் பொதுவாயுள்ள கருவி ‘ராகிங்’. அதனை இலங்கை அரசு தற்போது இன்னும் நூதனமாக கையாளப் போவதாக தெரிய வருகிறது. மார்ஷல்களுக்கு இலங்கையின் உயர் பதவி வகித்த இராணவத் தலைமைகளை ‘ராகிங்’ ஐ கட்டுப்படுத்துவதற்கு பரிந்துரை செய்திருக்கிறது . இது அநேகம் நடைமுறைக்கு வரும் சாத்தியங்களும் தெரிகிறது. இதனை இராணுவமயமாதலாக எதிர்க்க வேண்டும் ஆனால் ‘ராகிங்’ நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் இதனை எவ்வாறு எதிர்க்க முடியும்? அவர்களிடம் வலிமையான வாதம் உள்ளது. அதனை எதிர்ப்பதற்கு வெறும் கோஷம் போடுவது மட்டும் போதாது. நாம் ஒன்று பட்டுச் சிந்திக்க வேண்டும்.

சரி, ராகிங் பிரச்சினையாக இருந்தாலும் கூட இதற்கு அப்பால் இங்கே தெளிவான பெரும்பான்மை, சிறுபான்மை அடையாளங்கள் துலக்கமாகத் தெரிகின்றன. இதனை விளங்கி கொள்ள இந்தக் கேள்வியைக் கேட்டுப் பார்க்கலாம் ‘இதையே இருபது தமிழ் மாணவர்கள் சேர்ந்து சிங்கள மாணவர்களுக்கு அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ‘

‘இதற்கு முன்னர் தமிழ் மாணவர்கள் இப்படி சிங்கள மாணவர்களை குறித்த பல்கலைக் கழகத்தில் தாக்கியிருக்கிறார்களா? அது முடியுமா ?

இங்கிருந்து தான் நாம் இனவாத உளவியலை புரிந்து கொள்ள முடியும்.

கண்டிய நடன பிரச்சினை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற போதே அதனை நாம் தொடங்கியிருக்க வேண்டும். நாம் இதனை தனிப்பட்ட பல்கலைக்கழக மானப் பிரச்சினையாக கருதி விட்டோம். நாடு தழுவிய ரீதியில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுய மரியாதை தொடர்பிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து அல்லது முடிந்த வரை பொது நோக்கோடு இதற்கான பொது நடைமுறைகளை உருவாகியிருக்கலாம். ஒரு பெரிய பல்கலைக்கழக சமூக உரையாடலை உருவாக்கியிருக்கலாம்.

உதாரணமாக – இந்த பிரச்சினைகளை நாம் இனத்துவ பிரச்சினையாக உணர்ந்தாலும், இதன் வெளிப்பாட்டு முறையில் வேறுபாடுகள் இருப்பதை கவனிக்க வேண்டும். அதன் மூலமே அடக்குமுறையின் வடிவங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

1 – கண்டிய நடன பிரச்சினையின் போது பொலிஸ், அரசியல்வாதிகள் மற்றும்ஊடகங்கள் செயற்பட்ட முறை (தமிழ் அரசியல்வாதிகளும் இதில் உள்ளடக்கம், பலரும் அது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்கள்.)

பொலிஸ் – உடனடியாக சட்டம் தன் கடமையைச் செய்தது. குறித்த மாணவர்களை கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் படுத்தியது. சிங்கள மாணவர்களை பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தது. ஆனால் குறிஞ்சிக் குமரனின் சம்பவத்தில் மாணவிகளே அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிய வருகிறது. இவ்வளவு நல்லிணக்கம் பேசும் அரசு இதனை தமிழ் மாணவர்களுக்கும் செய்திருக்க வேண்டும். அது அதன் கடமை. ஆனால் செய்யவில்லை.

அரசியல்வாதிகள், ஊடகங்கள் – கண்டிய நடனத்தின் போது தேசியவாத மைய அரசியலை மட்டுமே கொண்ட இந்த உரையாடல்கள் அல்லது மக்களை தனித் தனியாக கும்பலாக்கி சிந்திக்க வைக்கும் முறைகளையே அவர்களும் அவைகளும் மேற்கொண்டன.

ஆனால் றிஞ்சிக் குமரனிடம் எந்த விளைவுகளும் இல்லை. இது தமிழ் மாணவர்களை அரசியல் பலமற்ற பின்புலமற்ற மாணவர்களாக உணர வைக்குமல்லவா? அவர்களுக்கு தார்மீக ரீதியில் அடிப்படையாக உடனடியான கவனிப்பு செலுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

2 – குறித்த கண்டிய நடன பிரச்சினையின் உரையாடல்களின் போது ஒரு புகைப்படத் தொகுதி பரவலாக பகிரப்பட்டது. அதில் பேராதனை பல்கலைக் கழகத்தில் தமிழ் நடனம் ஆடும் படம் இருந்தது. ஆனால் தற்போது தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டும் இருக்கிறார்கள். இதை நாம் எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

எப்பொழுதுமே நல்ல சக்திகளும் பகை சக்திகளும் ஒரே சூழலில் இயங்கி கொண்டிருக்கும். அவற்றை நாம் இனங் காண வேண்டும். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலுமே அனைவருமே இனவாதிகள் அல்ல. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்.

இதற்கு அப்பால் இனவாத அடிப்படையில் தொடர்ந்து தாக்குதல்கள் நிகழத் தான் போகின்றன. இதனை எப்படி தீர்ப்பது ? இது தொடர்பில் யார் முடிவெடுப்பது ? யார் உரையாடுவது?

நாம் அதையா செய்கிறோம் ? உரையாடத் தொடங்கிய ஒவ்வொருவரையும் அரசின் கைக்கூலிகள் என்றோம். துரோகிகள் என்றோம்.

உரையாடலுக்கு ஒரு பொதுத்தளம் வேண்டும். அதனை உருவாக்கும் போது சிந்தனைத் தளத்திலானதும் நடைமுறைக்கு பொருந்தக் கூடியதுமான வழி வகைகளை நாம் ஆராய வேண்டும். அது ஒரு நீண்டகாலச் செயன்முறை. அதனை மாணவர் ஜனநாயகச் சூழலற்ற பல்கலைக் கழகங்களில் நாம் முதலில் தொடங்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி சிந்திப்பதில் ஒரே மாதிரி முடிவெடுப்பதை தவிர்த்து,  பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் நிகழும் இந்த அடக்குமுறைகளை மற்றும் அதற்கு துணை போகும் கருவிகளை சரியான முறையில் அடையாளம் காண்பது மிக முக்கியமானது.

அவற்றை நாம் நீக்கியாக வேண்டும். ராகிங் அடிப்படையான அடக்குமுறைக் கருவியாக பல்கலைக் கழக மட்டத்தில் செயற்படுகிறது. அதனை அனைவரும் எதிர்க்க வேண்டும். அது உள்ளக ஜனநாயகம் சார்ந்து மாணவர்களே எடுக்கக் கூடிய முடிவு. பிறகு வெளியிலும் உள்ளும் உள்ள இனத்துவேஷங்களை, மதத்துவேஷங்களை,  ஆண் – பெண் அடக்குமுறைகளை நாம் எதிர்க்க முடியும்.

ஒரே நேரத்தில் நாம் ஒடுக்குபவர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் இருந்து கொண்டு விடுதலையை எதிர்பார்க்க முடியுமா ?

நாம்தான் நமது விடுதலையை சுயமரியாதையை மீட்டு எடுக்க வேண்டும் அது தொடர்பில் நாம் நேரடியான அனுபவங்களில் இருந்து பெற்றுக் கொண்ட அறிவை பகுத்தறிவாக்கி பொது அனுபவமாக / பொதுப் பிரச்சினையாக உணர வைத்து அதனை நாம் தீர்க்க முடியும், நமது காலத்தில் நாம் ஜனநாயக வழியிலான உரையாடல்களை அனைத்து மட்டங்களிலும் உருவாக்க வேண்டிய தேவையினை மீண்டும் மீண்டும் பலமாக உணருகிறோம்.

Related posts

*

*

Top