சூழலியல் விவசாயத்தில் வீட்டுத்தோட்டத்தின் பங்கு

– பேராசிரியா் கு.மிகுந்தன்

க்திமயமான நல்லூர் கந்தனின் அருள்பாலிக்கும் சூழலில் சூழலியல் விவசாயத்தின் கருத்துப்பொதி சார்ந்து கண்காட்சியொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. மாகாண விவசாய அமைச்சு விவசாயத் திளைக்களங்கள் இணைந்து இந்த காட்சியை விளக்கச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பலருக்கும் பயனுள்ளதான இக்கண்காட்சிகள் மக்கள் பார்வையிட்டு பயனடையலாம்.

Prof.G.Mikunthanஇந்த சூழல் எமக்கு இயற்கையால், தரப்பட்ட வரமென்றே கூறலாம். சூழலை மறந்து அதனைத் துறந்து நாம் வாழ்வதென்பது சாத்தியமான ஒன்றல்ல. ஆனால், இன்னும் நாம் உணரவில்லை. போர் நடைபெற்ற காலங்களில் எமது சூழலைப்பற்றி இங்கே எவருமே அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு பக்கத்தில் போருக்காக இருந்த பயனுள்ள மரங்களை வகைதொகையின்றி தறித்தழிக்கப்பட்டமையும் அதில் பயன்படுத்தப்பட்ட கொடிய ஆயுதங்களினால் குறிப்பாக சீறிப்பாய்ந்த செல்களினால் பல பயனுள்ள மரங்கள் அழிக்கப்பட்டதையும் பனை மற்றும் தென்னை மரங்களின் தலை கவிழ்க்கப்பட்டதையும் குறிப்பிட்டு கூறினாலும் மறுபக்கத்தில் நாமும் பல மரங்களையும் எமது தேவைக்காக அழித்து இப்போது அழிந்தவற்றை மீண்டும் மீட்டெடுக்க முனைந்திருக்கின்றோம். மரங்கள் ஒரிரவில் வளர்ந்து விருட்சமாவதில்லை காலம் தற்போது கனிந்திருக்கின்றது. திணைக்களங்கள் மாகாண அமைச்சுக்கு கீழே கொண்டு வரப்பட்டுள்ளன. அனைவரையும் ஒன்று திரட்டி சூழலை பாதுகாக்க பலமான திட்டத்தை தீட்டி அதனை நடைமுறைப் படுத்துவதையும் கண்காணிக்க வழி பிறந்திருக்கின்றது.

சூழலியல் விவசாயம் (Ecological Agriculture) என்பது எமது பிரதேசத்திற்கு ஒன்றும் புதுமையானதல்ல. பாரம்பரியமாக நாம் செய்து வருகின்ற விவசாய செய்யையினூடு இயற்கை வழி விவசாயத்தை மேம்படுத்துவதும் சூழலை பாதுகாப்பதற்கான இன்னும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை உள்வாங்குவதும் குறிப்பாக சூழலில் இருக்கின்ற நன்மை தருகின்ற உயிரினங்களை விருத்தி செய்து பலமான வளமான வேளாண்தொகுதியை உருவாக்கி ஆரோக்கியமான சிறந்த பயிர்ச்செய்கைக்கு உதவுவதாகும். ஆரோக்கியமான பயிர்ச்செய்கை என்பது நஞ்சற்ற பயிர்களை உற்பத்தியாக்குதலாகும். அசேதன இரசாயனங்களை நம்பியில்லாத பயிர்ச்செய்கை என காணலாம். பீடைநாசினிகள் நஞ்சுப்பதார்த்தங்கள் என தெரிந்தும் அதனை விசிறி நீரூபித்திருக்கிறார்கள் எங்கள் விவசாய செய்கையாளர்கள் இவ்விரசாயனங்களால் விவசாய செய்கை காப்பாற்றப்பட்டதாக நாம் நினைத்திருக்க எமது சூழல் வலுவிழந்து, வலிமையிழந்து, வழக்கிழந்தும் போயிருக்கின்றது.

அசேதன இரசாயனங்களால் சூழலுக்கு தீமை என 1962ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியாகிய ‘றேச்சல் கார்சன்’ (Rachel Carson) எனும் பெண்மணி துணிந்து எழுதிய “Silent Spring” எனும் புத்தகம் வெளிக்கொண்டு வந்தது. ஆரம்ப காலத்தில் அதிகரித்த பூச்சி பீடைகளைக் கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்திய டி.டி.ரீயினுடைய தாக்கத்தைப் பற்றி எழுதப்பட்ட இப் புத்தகம் பசுமைப் புரட்சியின் எதிர்விளைவுகளை அன்றைய காலத்திலேயே அடித்துக்கூறியது. ஆரம்பத்தில் வெளிவந்த இப்புத்தகம் பலருடைய கவனத்தையும் அப்போது ஈர்க்கவில்லை. உணவுற்பத்திப் பெருக்கம் பற்றி பசுமைப் புரட்சி பலமாக எடுத்துக் கூறியதால் அன்றிருந்த விஞ்ஞானிகளுக்கு எதிர்விளைவுகளைக் கணிப்பிட முடியாமல் போய்விட்டது.

டி.டி.ரியின் தாக்கம் உணவுச்சங்கிலியின் கடைசியிலுள்ள பறவைகளில் செறிவூட்டடப்பட்டது தான் எழுந்த பிரச்சனையாகும். அமெரிக்க நாட்டு தேசிய பறவையான கழுகுகளின் முட்டைக்கோதை டி.டி.ரி இரசாயனம் வலுவிழக்க செய்ததால் அவை அடைகாக்கப்படும்போது இலகுவில் உடைந்து போயின. இதனால் கழுகுகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை குறைந்ததை ஆய்வு மூலமாக நீரூபித்து மக்களுக்கு அறிய வைத்த இப்பெண்மணியின் செயலை சூழல் பற்றி சிந்திக்கும் எவரும் இலகுவில் மறந்திட மாட்டார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த விசித்திரம் எம்மாலேயே நாம் வாழும் பூமியிலேயே நடந்திருக்கின்றது. ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட இந்த உண்மையை வளர்ந்துவரும் நாடுகள் அன்றைய தினம் அறிந்துணர முடியவில்லை. இதனால் தான் இவ்வளவு விபரீதமும் நடைபெற்றுள்ளது. தற்போது நாம் வாழும் சூழலை பாதுகாக்க முயற்சிக்கின்றோம். தொடரும் அழிவிலிருந்து இயற்கையைப் பாதுகாக்க விரும்புகின்றோம். ஆனால் அனைவரும் இணைந்தால் தான் இது சாத்தியமாகும். இழந்ததை நாம் மீட்டெடுப்பது சுலபமான காரியமில்லை. அதற்காக நாம் நிறையவே பாடுபட வேண்டியிருக்கிறது.

சூழலில் உள்ள நன்மை தரும் உயிரினங்கள் எனும்போது அயன் மகரந்த சேர்க்கையாளர்கள், இயற்கையெதிரிகள் எனப்படும் இரை கௌவிகள், ஒட்டுண்ணிகள், இன்னும் நுண்ணங்கிகள் என்பன அடங்கும். இதில் மகரந்த சேர்க்கையாளர்களின் பங்களிப்பு கணிசமானது. கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேலான பயிர்கள் விலங்குகளிலான அயன்மகரந்தசேர்க்கையை நம்பியிருப்பவையாகும். அதிலும் விலங்குகள் எனும் போது பூச்சிகளினாலான மகரந்தசேர்க்கையே அதிகமாகும். பூச்சி வகைகளுக்குள்ளும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் ஆகியன இதில் குறிப்பிடத்தக்கனவாகும். அயன்மகரந்த சேர்க்கைக்கு இவ்வாறான மகரந்த சேர்க்கையாளர்கள் அவசியம் தேவையாகும். ஆனால் இவ்வாறானம கரந்த சேர்க்கையாளர்களை நாம் விசிறிய பீடைநாசினிகளால் அழிவுக்குள்ளாக்கி விட்டோம். இதனால் விளைநிலத்தில் மகரந்த சேர்க்கையாளர்களின் வருகை குறைவடைந்து விட்டது. அசேதன இரசாயனங்களை நாம் விசிறாது விட்டாலொழிய மகரந்த சேர்க்கையாளர்களை கவரவும் அதன் மூலம் பயிர்களில் மகரந்த சேர்க்கையினை அதிகரிக்கவும் முடியாது. இது நிச்சயமாக பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். இன்றும் செய்து கொண்டிருக்கின்றது. இந்த பாதிப்பை கடந்த காலங்களில் சிறிது சிறிதாக நாம் உணரத்தொடங்கியும் மொத்த பாதிப்பு பற்றி எவரும் அலட்டிக் கொள்ளவேயில்லை. மாறாக பீடைகளைக் கட்டுப்படுத்த இன்னும் புதிதுபுதிதாக பீடை நாசினிகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றோமே தவிர மாற்று வழிகளை கண்டுபிடித்து முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.

நாம் ஆரம்பித்த எமக்கெதிரான அழிவை நாமே சீர்செய்ய தலைப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு சுத்தமான சுகாதாரமான சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாசுபட்ட சூழலை நாம் சீர்செய்து சுகமான இதமான சூழலாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். வெறுமனே எழுதுவதற்கான செய்தியாக இது இல்லாமல் நடைமுறை சாத்தியமான விடயங்களை உள்வாங்கிச் செயன்முறையில் நாம் இதனைக் காட்டவேண்டும். இதற்கொரு நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைதான் வீட்டுத்தோட்டம். சாதாரணமாக வீட்டுத்தோட்ட அமைப்பதை சிறியதொரு காரியமாக எண்ணி அலட்சியப்படுத்துவது தான் தற்போதைய நடைமுறையாகும். இதனை மாற்றி வீட்டுத்தோட்டத்தை உணவுற்பத்தியின் குறிப்பாக பசுமைப்புரட்சியின் அலகாக உருவகித்தால் பல விடயங்கள் தெளிவாகும். வீட்டுத்தோட்டத்தில் பூக்கும் தாவரங்களை பயன்படுத்துவது குறைவாகும். உங்களது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தோட்டத்திலுள்ள பூக்குந்தாவரங்களை கணக்கிட்டுப் பாருங்கள். அதிலும் மகரந்த சேர்க்கையாளர்களை கவரும் பூக்குந்தாவரங்களை கணக்கிட்டுப் பாருங்கள்.

மிகக் குறைவானதாகவே இருக்கும். பொதுவாக அழகுத்தாவரங்களில் வண்ண வடிவமான இலைகளையுடைய அழகு தாவரங்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றோம். மாறாக பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மகரந்த சேர்க்கையாளர்களான தேனீக்கள், வண்ணத்துப்பூச்சி, ஈக்கள், பறவைகள் என்பனவற்றை விரும்பியழைக்கலாம். இதன் மூலம் நாம் இவற்றின் எண்ணிக்கையையும் பேணிப் பாதுகாக்க முடியும். விளைநிலத்தில் விசிறப்படுத் பீடைநாசினிகளினால் மகரந்த சேர்க்கையாளர்கள் விரட்டப்படும் போது வீட்டுத்தோட்டமே இவற்றிற்கு தஞ்சமாக இருக்கும்.

ஆக மொத்தத்தில் வீட்டுத்தோட்டம் என்பது ஒரு சூழல் தொகுதி என்பதோடு மட்டுமல்லாமல் பல விடயங்கைளையும் உள்ளடக்கிய சூழலியல் தொகுதியாகும். எமது வீட்டுத்தோட்டத்தை மலர்த் தாவரங்களால் அலங்கரித்து அதற்குள் பல நன்மைதரும் உயிரினங்கள் வந்து போகும் சக்திமாற்ற மேற்படும் சக்தித்தொகுதியாக மாற்றிட வேண்டும். பூக்கும் தாவரங்கள் பலவுண்டு. அழகுக்காக மட்டும் பலவுண்டு. அதிகம் உள்ளீடுகளை எதிர்பார்க்காத பூக்கும் தாவரங்களை வளர்த்து பயனடையலாம்.

Related posts

*

*

Top