காலை நேரத்துக் கடற்கரை வீதி

– வேலணையூர் தாஸ்

பண்ணைக்கடற்கரை வீதி
அதிகாலை நடைப்பயிற்சிக்கு வருபவர்களால் நிறைகிறது
அது பெருமிதம் கொள்கிறது
பிறந்ததன் பயனடைந்த திருப்தியில்
கடலுக்குள்ளே நிமிர்ந்து படுத்திருக்கிறது.
நிற்பதுவும் நடப்பதுவும் ஒடுவதுமாய்
இயங்குகிறார் மனிதர்.
ஒருவர் காற்றோடு பேசுகிறார்
கடலோடு சிலர் கதைத்த படி நடக்கிறார்கள்
துார வரும் ஒருவரைக் கண்டு தனக்கு தெரிந்தவர்
என புன்னகை செய்த ஒருவர்
அருகில் வந்ததும் இது வேறு ஆள் என
புன்னகையை புதைத்துக்கொள்கிறார்

வட்டமாக கட்டப்பட்ட சீமேந்து தரையில்
உடற்பயிற்சி செய்கிற பெண்
தன்னை யாரே உற்றுப்பார்ப்பது போல் உணர்ந்து
அடிக்கடி திரும்பிப்பார்க்கிறாள்
இந்த காற்று வெளியில்தன்னைச் சுற்றி
சுவர் இருந்தால் நல்லது என உணர்கிறாள்

முன் பின் அறியாத ஒருவர் காலை வணக்கம்
சொல்லிப்போகிறார்
இப்படித்தான் இந்த காலைக்காற்றிலே
அன்பு கலக்கிறது. என்கிறார் நண்பர்.

நடு வீதியில் சிலர் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்
நீண்டகாலமாய் பிரிந்திருந்தார் போலிருக்கிறது
கட்டி அணைக்கிறார்கள்
விரிந்த கண்களில் வழிகிறது நட்பு
உப்பு காற்றும் இனிப்பதாய் உணர்கிறார்கள்.

இந்த காற்றின் வெளியில் தம் காதல் காலங்களை
மீட்டிப்பார்க்கிறார்கள் இரு இளம் தம்பதியர்.

பாலத்தில் நின்றபடி எதிர்த்தோடும் நீரை
வெறித்து பார்த்தபடியிருக்கிறான் ஒருவன்
கவிஞனாய் இருக்கவேண்டும்
பாலம் உடைந்திருந்த போர்க்காலத்தில்
தோணியில் கடல் கடந்ததை கதையாகச் சொல்கிறார் ஒருவர்

முப்பது வருடங்களுக்குபின் நாடு திரும்பியிருப்பவர்
முன்பொருநாள் இதே இடத்தில்
தன் காதலி தந்த கன்டோசின் உறையிருக்குமென தேடுகிறார்
சாத்தியமில்லைத்தான் கண் தேடுவதை
தவிர்க்கமுடியாமல் தவிக்கிறார் அவர்.

ஏதேதோ மருத்துவக் காரணங்களுக்காக கடற்கரையில்
நடக்க அறிவுறுத்தப்பட்ட அந்த முதியவர்
தன்னைக் கடந்து செல்கிற இளைஞர்களிலெல்லாம்
தன் காணாமற்போன மகனின்
முகத்தைத் தேடி ஏங்குகிறார்

காலைக்கடல் அமைதியாக இருக்கிறது
நீரைக்கிழித்த படி கரை அணைகிறது
மீனவன் தோணி

*

*

Top