வாழ்நாள் சாதனையாளருக்கான ஒஸ்கர் விருது பெறுகிறார் ஜாக்கி சான்

 நடிகர் ஜாக்கி சான் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் 12-ம் திகதி ஜாக்கி சான் மற்றும் திரைப்பட எடிட்டர் ஆன் கோட்ஸ், கதாபாத்திர தேர்வு இயக்குநர் லின் ஸ்டால்மாஸ்டர், ஆவணப்பட இயக்குநர் பிரெடெரிக் வைஸ்மேன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் வழங்கப்படுகிறது.

ஜாக்கி சான் தனது அசாத்தியமான சண்டக்காட்சிகள், சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் நகைச்சுவை உணர்வு, சண்டைக்காட்சிகளில் புதுமையான ஆயுதங்களைக் கையாள்வது ஆகியவற்றினால் உலகம் முழுதும் புகழின் உச்சத்திற்குச் சென்றவர். ஸ்னேக் இன் த ஈகிள்ஸ் ஷேடோ என்ற 1978-ம் ஆண்டு படம் திருப்பு முனை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

1980-ம் ஆண்டு இவர் நடித்த முதல் ஹாலிவுட் திரைப்படம் தி பிக் ப்ரால் வெளியானது. 1995-ம் ஆண்டு வெளியான ‘ரம்பிள் இன் த பிராங்ஸ்’ மூலம் அமெரிக்காவில் நிலையாக கால் ஊன்றிய நடிகரானார். போலீஸ் ஸ்டோரி, ஹார்ட் ஆஃப் டிராகன், ஹூ ஆம் ஐ, ரஷ் ஹவர், தி கராத்தே கிட் உள்ளிட்ட மெகா ஹிட் திரைப்படங்களுடன் 150 படங்களில் நடித்துள்ளார் ஜாக்கி சான்.

நடிகராக கலக்கியதோடு, 30 படங்களை இயக்கியும் உள்ளார் ஜாக்கி சான். திரைத்துறையில் பல்துறை வித்தகராக விளங்கிய ஜாக்கி சான் இதுவரை ஒரு ஆஸ்கர் விருது கூட வென்றதில்லை. இந்நிலையில் திரைப்படங்களில் அனைவரையும் ஈர்த்த ஜாக்கி சான் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதத்தில் வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

*

*

Top