சிறுநீரகத்தைப் பாதிக்கும் ‘லூபஸ்’ நோய்

‘சிறுநீரக கல், உயர் குருதி அழுத்தம், சிறுநீரகத் தொற்று மற்றும் சர்க்கரை நோயால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்காக மேற்கொள்ளப்படும் சிறுநீர் பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனையின் போதுதான் இதன் பாதிப்பு தெரியவரும். தொடக்க நிலை பாதிப்பு குறித்த அறிகுறிகள் எதுவும் தெரியாது. பாதிப்பு அதிகரித்தவுடன் தான் அறிகுறிகள் தோன்றும். கால்கள் வீக்கம், படபடப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றினாலும் கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொண்டு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கிட்னி பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சிறுகுழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை வரக்கூடும்’

என்று சிறுநீரகத்தின் பாதிப்பு குறித்து எம்மிடம் பேசத் தொடங்குகிறார் டொக்டர். வு.ஏ.விக்ரம் சாகர். இவர் இங்கிலாந்து நாட்டில் பயிற்சி பெற்று, மதுரையில் இயங்கி வரும் வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தற்போது சிறுநீரகவியல் துறையில் அனுபவமிக்க மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்யூட் கிட்னி இன்ஜுரி என்றால் என்ன? அதற்கான சிகிச்சை குறித்து..?
இதற்கு முன் சிறுநீரக பாதிப்பு ஏதும் இல்லாமலிருக்கும் போது, திடீரென்று உடலில் ஏற்படும் கட்டுப்படுத்த இயலாத வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாகக் கூட கிட்னி பாதிக்கப்படலாம். சிறுநீரகத் தொற்று இருந்தால் கூட இவை உருவாகக்கூடும். சில தருணங்களில் சிலருக்கு சில காரணங்களால் சாப்பிடும் மாத்திரைகளால் கூட இவை தோன்றக்கூடும். கல் அடைப்பு ஏற்பட்டிருதாலும் இம்மாதிரியான கிட்னி பாதிப்பு ஏற்படும்.

கிட்னி பயாப்சி எடுத்து சோதித்து இதற்குரிய சிகிச்சையளிக்க இயலும். இதனை அலட்சியப்படுத்தினால் தான் கிரானிக் சிறுநீரக நோய்கள் வரும். அதனை குணப்படுத்துவது கடினம். ஆனால், டயாலிஸஸ் மற்றும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சூழலை உருவாக்கலாம்.

லுபஸ் நோயால் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும் என்கிறார்களே இதற்கான விளக்கமும், சிகிச்சையும் குறித்து..?
லூபஸ் என்ற நோயாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். ரூமடாய்ட் நோயினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். எம்முடைய உடலை பாதுகாக்கும் நோயெதிர்ப்பு சக்தியுடைய செல்களின் செயல்பாட்டில் நடைபெறும் சிறிய கோளாறுகளே லூபஸ் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஓடடோ இம்யூன் டிஸ்ஒர்டர் என்றும் இதனை குறிப்பிடலாம். இதனை நாங்கள் லூபஸ் நெஃப்ரடீஸ் என்று குறிப்பிடுகிறோம். இதனால் உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படும் போது அவ்வகையான நோயாளிகள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகிறார்கள். இது அனைத்து வயதினருக்கும் வரும் என்றாலும் 20 முதல் 45 வயதினரையே அதிகம் தாக்குகிறது என்றும்இ அதிலும் பெண்களை அதிகம் தாக்குகிறது என்றும் ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். இதற்கு தொடர் சிகிச்சை எடுத்தால் குணப்படுத்திட இயலும்.

மக்கள் ஏன் கிட்னி பாதிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை?
ஏனெனில் இதற்கான அறிகுறிகள் உடனடியாகவும், வெளிப்படையாகவும் தெரிய வருவதில்லை. இதயத்தில் ஏதேனும் ஒரு சிறிய பாதிப்பு என்றாலும் கூட இதயப்பகுதியில் ஒரு சிறிய வலி அறிகுறியாக ஏற்படுகிறது. இதற்கு பயந்து உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவார்கள். ஆனால் கிட்னியைப் பொறுத்தவரை, சிறுநீரகத்தில் கிரியாட்டீன் அளவு ஓர் எல்லைக்கு மேல் அதிகரித்தால் தான் அதன் பாதிப்பு தெரியவரும். அதேப் போல் சிறுநீர் பிரிவதில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் தான் மருத்துவர்களை சந்திப்பார்கள். அது வரை பாதிப்புடனேயே மக்கள் இருக்கிறார்கள். மக்களை பயமுறுத்துவதற்காக இதனை சொல்லவில்லை. இருந்தாலும், ஒரு எச்சரிக்கைக்காக சொல்கிறேன். டயலாலிஸஸ் செய்யும் நோயாளிகள் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதத்தினருக்கு மேல் மரணத்தை சந்திக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தோமானால் புற்றுநோயை விட மரணத்தை நோக்கி வேகமாக பயணிக்கிற ஒரு நோயாகத்தான் கிட்னி பாதிப்பை மருத்துவ துறை பார்க்கிறது.

அதிகமாக தண்ணீர் அருந்தினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படும். இது உண்மையா?
ஒருவர் தனக்கு தேவையான அளவை விட அதிகமாக தண்ணீர் அருந்தினாலும் அதனால் கிட்னியின் செயல்பாட்டில் எந்தவித பாதிப்பும் அதிகளவில் ஏற்படுவதில்லை. ஆனால் சிறுநீரகத்தில் ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்து நீங்கள் அதிகமாக தண்ணீர் அருந்தினால் அதன் போது ஏதேனும் பாதிப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்புண்டு. அதன் காரணமாகவே கை கால் வீக்கம், மூச்சு திணறல் போன்றவை தோன்றும்.

சிறுநீரக தொற்று தற்போது அதிகரித்துள்ளது என்றும், அதிலும் குறிப்பாக பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்களே இதற்கான மருத்துவ விளக்கம் என்ன?
சிறுநீரக தொற்று உருவாகுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் போது அந்த சுற்றுப் புறத்தில் தூய்மையில்லாதிருந்தாலும் இவை ஏற்படக்கூடும். காய்ச்சல், சிறுநீர் பிரியும் பாதையில் எரிச்சல், அசௌகரியம், குறைவாகவோ அல்லது இரத்தம் கலந்தே பிரிவது போன்ற பல அறிகுறிகள் சிறுநீரகத் தொற்றால் ஏற்படக்கூடியவை. இத்தகைய அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது தான் நல்லது.

சக்கரை நோயால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்?
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயால் கிட்னி பாதிக்கப்படுவது உண்மை. இதனை யாரும் மறுக்க இயலாது. அதனால்தான் ஒவ்வொரு முறையும் வலியுறுத்திச் சொல்கிறோம். சக்கரை நோய் வந்துவிட்டால் அதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் நில்லாது ஆண்டுதோறும் சிறுநீரக பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அதேபோல குருதி அழுத்தம் குறித்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இவர்கள் தங்களது சிறுநீரில் புரதம் அதிகமாக வெளியேறினால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த புரதம் குறித்த பரிசோதனையை அருகிலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

முழுக்க முழுக்க வேறு வகையான இரத்த பிரிவு இருந்தாலும் தற்போது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியடைவதன் பின்னணி குறித்து..?
மருத்துவ ஆய்வின் முன்னேற்றத்தையே இது காட்டுகிறது. இது போன்ற மாற்று இரத்த பிரிவுள்ள சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்வதற்கு முன் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியின் அளவை கட்டுப்படுத்துவதும், புதிதாக பொருத்தப்படவிருக்கும் சிறுநீரகத்தை உடல் ஏற்கும் அளவிற்கு அதற்கான முன் தயாரிப்பும் தற்போது அறிமுகப் படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

சிறுநீரக பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காத்து கொள்வது எப்படி?
இதற்கென தனியாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. ஏனெனில் இவை உடல் இயக்கத்தின் அடிப்படையான உறுப்பு. அத்துடன் உடலில் எந்த பகுதியில் பாதிப்பு வந்தாலும் அதனை உடனடியாக கவனித்து சீரமைத்துக் கொள்ள வேண்டும். அதனை அலட்சியப்படுத்தினால் அதனால் கூட சிறுநீரகம் பாதிக்கப்படலாம். அதனால் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தான் கவனம் செலுத்த வேண்டும். சரிசமவிகித சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தமில்லாமல் இயங்குதல் ஆகியவற்றை சீராக வைத்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்பு வராது.

மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 0091 7708820463 மற்றும் மின்னஞ்சல் முகவரி vikramsagartv@gmail.com

சந்திப்பு: பரத், தொகுப்பு: அனுஷா.

Related posts

*

*

Top