விவசாய போதனாசிரியர்களுக்கு மின்பயிர் சிகிச்சை பயிற்சி

விவசாயப் போதனாசிரியர்கள் தங்களைப் பயிர் மருத்துவர்களாகத் தரம் உயர்த்த வேண்டும். அதன் மூலம் விவசாயிகளுக்குத் தகுந்த வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் என்று வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 விவசாயப் போதனாசிரியர்களுக்கு மின்-பயிர் சிகிச்சைப் பயிற்சியை வழங்கும் செயலமர்வு நேற்று 06.09.2016 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது.

விவசாய போதனாசிரியர்களுக்கு மின்பயிர் சிகிச்சை பயிற்சி (3)

விவசாயம் மற்றும் உயிரியல் விஞ்ஞானத்துக்கான சர்வதேச மையத்தின் அனுசரணையில் இந்த மூன்று நாள் செயலமர்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போது வடமாகாண அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சியுடைய எமது விவசாயிகள் முப்பது வருட யுத்தத்தின் பாதிப்புகளில் இருந்து சில வருடங்களில் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஆனால், பயிர்கள் மீது பீடைகள் தொடுத்திருக்கின்ற மீளமுடியாத இன்னுமொரு யுத்தத்திற்கு அவர்கள் முகங்கொடுத்து வருகிறார்கள். இது கவலைக்குரியது. இந்த யுத்தத்தில் இருந்து அவர்கள் மீள்வதற்கு வழி செய்யப்பட வேண்டும் என்று வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இயற்கைச் சூழற் தொகுதிகளில் எல்லா உயிரினங்களுக்கும் இடையில் ஒரு சமநிலை நிலவுகிறது. இங்கு நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. பீடைகள், களைகள் என்ற வித்தியாசம் இல்லை. ஆனால், ஒற்றைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாய நிலங்களான செயற்கைச் சூழலில் உயிரினச் சமநிலை இல்லை. இங்கு பீடைகளினதும், களைகளினதும் பெருக்கம் தவிர்க்க முடியாமல் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாய போதனாசிரியர்களுக்கு மின்பயிர் சிகிச்சை பயிற்சி (5)

மனிதருக்கு நோய்கள் வரும்போது மருத்துவர்களின் உதவியை நாடுகிறோம். மருத்துவர்களின் பரிந்துரைச் சிட்டைகள் இன்றி மருந்தகங்களில் மருந்தினைக் கொள்வனவு செய்யமுடியாது. ஆனால், பயிர்நோய்களுக்கு விரும்பிய மருந்துகளை விரும்பிய அளவுகளில் எவரும் எங்கும் வாங்கலாம்.

உரிய ஆலோசனைகள் இல்லாமல் விளம்பரங்களை நம்பி விவசாயிகள் ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றார்கள். இதனால் நிலமும், நீரும், உணவும் நச்சாவதோடு நாளடைவில் மருந்துகளால் எதுவும் செய்ய இயலாதவாறு பீடைகளும் இசைவாக்கம் பெற்று வருகின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்கு விவசாயப் போதனாசிரியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றார் ஐங்கரநேசன்.

கையடக்கக் கணினிகளில் விவசாயம் தொடர்பான மென்பொருட்களை நிறுவிக்கொண்டால் உலகில் எந்த மூலையில் உள்ள விவசாய நிபுணர்களுடனும் நொடியில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற முடியும்.

விவசாய போதனாசிரியர்களுக்கு மின்பயிர் சிகிச்சை பயிற்சி (4)

இதன்மூலம் விவசாயப் போதனாசிரியர்கள் பயிர் மருத்துவர்களாகத் தங்களை வளர்த்துக்கொண்டு விவசாயிகளுக்குத் தகுந்த வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் என வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு 15 கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன. மேலும், 15 கையடக்க கணினிகளை விவசாயம் மற்றும் உயிரியல் விஞ்ஞானத்துக்கான சர்வதேச மையம் விரைவில் அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் மற்றும் உயிரியல் விஞ்ஞான சர்வதேச மையத்தின் பிரதிநிதிகள் அப்துல் ரஹ்மான், மஞ்சு தாகூர், அ.வாகீசன், தாவரப் பாதுகாப்பு நிலையத்தின் பிரதி இயக்குநர் பீ.ரீ.பண்டார மற்றும் பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

விவசாய போதனாசிரியர்களுக்கு மின்பயிர் சிகிச்சை பயிற்சி (1) விவசாய போதனாசிரியர்களுக்கு மின்பயிர் சிகிச்சை பயிற்சி (2) விவசாய போதனாசிரியர்களுக்கு மின்பயிர் சிகிச்சை பயிற்சி (6)

Related posts

*

*

Top