இலங்கையில் தரை இறங்கக் காத்திருக்கும் அமெரிக்க இராணுவம்

Barack Obama

- துன்னாலைச் செல்வம்

இலங்கையில் தரை இறங்குவதற்கான செயற்பாடுகளில் அமெரிக்க இராணுவம் திட்டமிட்டு இறங்கியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் அமெரிக்க இராணுவத்தினருக்கும் பெரும் பங்கு உள்ளது. இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு இலங்கைக்கு உதவி செய்வதுபோல தனது காய்நகர்த்தலை எந்தவித தடங்களுமின்றி நிறைவேற்றி வருகிறது. இலங்கைப் பக்கம் தனது நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. விடுதலைப் புலிகளுடனான போருக்கு தனது பங்களிப்பை வழங்க முற்பட்டபோதே இந்தத் திட்டத்தை அமெரிக்கா தயாரித்து விட்டது.

அமெரிக்க இராணுவம் இலங்கைக்கு வந்து செல்லும் விடயம் தான் இப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிற விடயமாகும். அமெரிக்க இராணுவத்தின் இலங்கைக்கான பயணத்தில் மறைமுகமான ஒரு செயற்பாடு அமெரிக்காவிடம் இருக்கிறது என்பது தெரிகிறது. அந்த விடயம் என்ன என்பது பற்றிச் சிந்திக்க இப்பொழுது தமிழ் அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை. அமெரிக்க இராணுவம் இங்கு வருவது நல்ல விடயம் போல் இவர்கள் அவர்களை வரவேற்கிறார்கள். அமெரிக்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் இலங்கை வந்து வடக்கை சுற்றிப் பார்த்து தமிழ் தரப்புடன் பேசிவிட்டுச்சென்றனர். இதன் பின்னர் இன்னொரு பிரிவினர் இங்கு வந்து மருத்துவ முகாம் நடத்தி விட்டுச் சென்றுள்ளனர். அடுத்த பிரிவினர் விமானத்தை காரணம் ஏதும் சொல்லாமல் இலங்கையில் இறக்கி தரித்து நிற்கின்றனர். அமெரிக்க இராணுவத்தின் இந்த மூன்று செயற்பாடுகளையும் பார்க்கும் போது இலங்கையில் அமெரிக்காவின் செயற்பாடு இடம்பெறவுள்ளமை தெரிகிறது.

அமெரிக்க போர் விமானம் ஒன்றிக்கு திருகோணமலை சீனன் குடா விமான நிலையத்தைப் பயன்படுத்த இடமளிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ள செய்தி பரவலாகப் பேசப்படுகிறது. அமெரிக்க போர் விமானம் தற்போது இலங்கை வந்துள்ளதுடன் இந்தியா நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறதே ஒழிய ஏன் இந்தியா நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளது என்ற காரணம் தெரியவில்லை. மேலும் அமெரிக்க விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இந்தியாவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முடியும் எனினும் சீனன் குடா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்குபுறப்பட்டுச் செல்வது தொடர்பிலும் இலங்கை விமானப் படைப் பிரிவினருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்க விமானம் சீனன்குடா விமான நிலையத்தில் தரையிறங்குவதனை தாம் எதிர்க்கவில்லை எனக் கூறி, சிவில் விமான சேவைகள் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் விமான நிலையத்தை பயன்படுத்த அனுமதி கோரியுள்ளார். மேலும் விமானம் சீனன் குடா விமான நிலையத்தில் இருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்டுச் செல்வது தொடர்பான திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும், பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுள்ளது. அமெரிக்க விமானத்தின் விமானி உட்பட அதில் பயணிப்பவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகளை வழங்கும் பொறுப்பு இலங்கை விமானப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானம் எதற்காக வந்தது, அதில் பயணிப்பவர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இது தொடர்பில் இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் அமெரிக்க விமானம் பிரவேசித்ததாக அமெரிக்க விமானம் தொடர்பில் இலங்கை விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது. எனவே இலங்கை விமானப் படைப்பிரிவினருக்கு ஏன் அமெரிக்க விமானம் தரையிறங்கியது என்ற விடயம் தெரியவில்லை. எனவே ஆபத்தை நோக்கி இலங்கை நகர்வது தெரிகிறது. சி. 37 பீ.எல். எப். ரககல்ப் ஸ்ட்ரீட் எனும் பெயரிலான இந்த மர்மமான அமெரிக்க விமானமே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் தரையிறங்கியது. இது இப்படி இருக்கையில் அமெரிக்க விமானம் இலங்கைக்கு வருகை தந்ததில் மர்மங்கள் எதுவும் இல்லையெனவும் அது சாதாரண விஜயம் எனவும் இலங்கை விமானப் படைப் பேச்சாளர் குஷரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் டி.130 என்ற விமானம் மருந்துப் பொருள்களுடன் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அமெரிக்காவின் 40 பேர் கொண்ட விசேட இராணுவ மருத்துவ குழுவினர்கள் இந்த விமானத்தில் வந்தனர். யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் இடைக்காடு மகாவித்தியாலத்திற்கு சென்று அங்கு நடமாடும் மருத்துவ சேவையினை வழங்கியதுடன் பருத்தித்துறை ஊர்காவற்துறை, வேலணை நெடுந்தீவு, ஆகிய பிரதேச செயலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கும் மருத்துவ நடமாடும் சேவையினை வழங்கி விட்டுச் சென்றுள்ளனர். இதற்கு முதல் அமெரிக்க இராணுவ மாணவர்கள் மற்றும் போதனாசிரியர்கள் ஆகியோர் இலங்கை வந்து பல தமிழ் தரப்பினரைச் சந்தித்ததோடு வடக்கு ஊடகவியலாளர்களையும் யாழ் ஊடக அமையத்தில் சந்தித்து கலந்துரையாடி விட்டுச் சென்றனர். மேலும் அமெரிக்க கப்பல் ஒன்று எண்ணெய் நிரப்புவதற்காக கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இலங்கை மீதான அமெரிக்க இராணுவத்தின் நகர்வு மெதுமெதுவாக இடம்பெற்று வருகிறது. இந்த நகர்வால் இலங்கை மட்டுமல்ல இந்தியா, சீனா உட்பட அயல் நாடுகளுக்கும் நெஞ்சிடியைக் கொடுத்துள்ளது.

Related posts

*

*

Top