சமூகத்திற்கான விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கருத்தரங்கு

– பேராசிரியா் கு.மிகுந்தன்

லங்கையில் முதன்முதலாக சமூகத்திற்கான விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கருத்தரங்கு (Science and Technology for Society Forum Sri Lanka 2016) கடந்த செப்டம்பர் மாதம் 07ஆம் திகதியில் இருந்து 09ஆம் திகதிவரை நடாத்தப் பட்டிருக்கின்றது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவை உள்வாங்கி இதனை ஒழுங்குபடுத்தியிருந்தது. 2015இல் ஐப்பான் நாட்டில் நடைபெற்ற சமூகத்திற்கான விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கருத்தரங்கில் பிரதம உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அது போன்றதொரு நிகழ்வை எமது நாட்டிலும் ஒழுங்கு செய்தல் அவசியமென விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சர் சுசில் பிரேமஐயந்த அவர்களிடம் தெரிவித்ததன் பின்னணியில் இந்த உலக ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. ஆய்வின் முடிவுகள் சமூகத்திற்கு செல்ல வேண்டும் என்னும் கருத்துப் பொதியினை முழுமையாக உள்வாங்கி இந்த நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Prof.G.Mikunthanஇக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு கடந்த 7ம்திகதி மாலை 4.00 மணியளவில் கொழும்பிலுள்ள தாமரைத்தடாகம் மண்டபத்தில் பாராளுமன்ற பிரதிநிதிகள், ஆய்வாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் மாணவர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டதுடன் மேன்மை தங்கிய ஜனாதிபதி பிரதம உரையை ஆற்றியிருந்தார். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சமூகத்திற்கான இணைவதற்கான விடயங்கள் பற்றி இதில் பிரஸ்தாபிக்கப் பட்டிருந்தது. தொடர்ந்து கருந்தரங்கின் முறையான ஆரம்பம் வோட்டர்ஸ் எட்ஜ் (Waters Edge) என அழைக்கப்படும் ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். அவருடன் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஐயந்த, பிரதியமைச்சர் லக்ஸமன் செனவிரட்ண மற்றும் உலகறிந்த ஆராய்ச்சியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களை மையப்படுத்திய பல விடயங்கள் ஆரம்ப நிகழ்வில் கருத்துக்களாக முன்வைக்கப்பட்டன. முக்கியமான வெளிநாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களுள் மலேசியா நாட்டின் பிரதமருக்கான ஆலோசகர் பேராசிரியர் ரம் அப்துல் ஹமீட் அவர்களும் ஐப்பான் நாட்டின் முன்னைநாள் விஞ்ஞானமும் தொழில்நுட்பம் மற்றும் நிதியமைச்சர் கோஐpஒமி அவர்களும் இவர்களுடன் தொம்சன் ருயிட்டேர்ஸ் (Thomson Reuters) நிறுவனத்தின் பிரதம அதிகாரியும் கலந்து கொண்டனர். ஐப்பானில் போருக்குப் பின்னரான மீள்கட்டியெழுப்புவதிலும் சுனாமி தாக்கிய போதும் மக்களனைவரும் பொறுமையாக இருந்து சரியாக திட்டமிட்டு சிறந்த ஒரு நாட்டை உருவாக்கியிருக்கின்றார்கள் என விளக்கியமை அனைவரையும் வியக்க வைத்தது. ஐப்பானிய மக்களின் கடின உழைப்பும் ஒன்றிணைந்து செயற்பட்ட விதமும் அர்ப்பணிப்பும் அவர்களின் நோக்கத்தை அடைய வைத்திருப்பதற்கும் மேலாக தொழில்நுட்பத்தில் கோலோச்சும் அளவுக்கு பரிணமிக்க வைத்திருக்கின்றது. இங்கே மக்களின்றி எந்த அபிவிருத்தியும் இல்லை என்பதும் அவர்களை ஒதுக்கி வைத்து செய்யப்படுகின்ற ஆய்வுகள் மக்கள் மயப்படுவதில்லை என்பதனையும் தெளிவாக காட்டியிருக்கின்றார்கள்.

ஐப்பான் நாட்டின் இயற்கை அனர்த்தங்களுக்கு மேலாக தமக்கு தேவையான வசதி வாய்ப்புக்களை ஐப்பானிய மக்கள் தமது உயர்ந்த உழைப்பினால் உருவாக்கிய விதம் முன்னுதாரணமாக எம்முன்னே இருக்கின்றது. சிறந்த முகாமைத்துவம், பொறுமை, அர்ப்பணிப்பு, நேர்மை, கடமை என்பன அவர்களது உயர்வுக்கு காரணம். பல தீவுகளைக்கொண்ட ஐப்பான் நாடு தொழில்நுட்பத்தின் வல்லரசாக பரிணமித்த விதத்தை அங்குள்ள நோபல் பரிசுகளைப் பெற்ற விஞ்ஞானிகள் தெரிவித்தபோது எமது நாட்டிற்கும் இப்படியொரு மாற்றம் அவசியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். ஒற்றுமையின் முக்கியத்துவம் அனைவரினதும் பேச்சில் முக்கிய விடயமாக இருந்தததையும் அவதானிக்க முடிந்தது. என்றும் இறுமாப்பு கொள்ளாத ஐப்பானிய மக்களின் பணிவும் பண்பும் பொறுமையும் கடமையுணர்ச்சியும் சமூகப்பொறுப்புணர்வும் நாம் என்றும் கற்றுக்கொள்ள வேண்டியவையாகும்.

தமக்கு தேவையான சக்தியை உருவாக்கிய விதத்தை விளக்கமாக தெரிவித்து இலங்கை எந்தெந்த வழிகளில் முன்னேறலாம் என்பதனையும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடசாலை மாணவர்களை அழைத்து அவர்களுக்கான ஆய்வுக்கான வழிகள் செய்முறையாக விளக்கப்படுகின்றன. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பாடசாலை மாணவர்களுக்கு பாடஞ்சொல்லிக் கொடுக்கும் விபரணப்படங்களும் காட்டப்பட்டது. சமூகத்துடன் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தி னையும் பரிணமிக்கச் செய்வதற்காக அவர்கள் எடுத்திருக்கும் முயற்சிகள் அனைவருக்கும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டது. எமது நாட்டிலும் விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சி சமூகத்துடன் பரிணமிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து எடுக்க வேண்டிய காலகட்டத்தினுள் நாம் பிரவேசித்திருக்கின்றோம். சிறிய பரப்பளவைக் கொண்டும் பல தீவுகளையும் கொண்டுள்ள ஐப்பான் நாடு இவ்வாறாக முன்னேறுவதற்கு முடியுமென்றால் எமது நாட்டினால் ஏன் முடியாது என்னும் வினாவை இக்கருத்தரங்கினூடாக முன்வைத்திருக்கின்றார்கள். அறிவில் சிறந்து அதனை வைத்து இறுமாப்பு கொள்வது எந்த பயனையும் தராது. அதனை பயன்படுத்த தெரிந்தவர்களும் மக்களிடையே அதனை கொண்டு சேர்ப்பவர்களும் புகழப்படுகின்றார்கள். எங்களூர் விஞ்ஞானிகளுக்கும் புலமையாளர்களுக்கும் இது சமர்ப்பணம்.

மேற்படி கருத்தரங்கு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்றது. பல ஆராய்ச்சியாளர்கள் தமது துறைசார்ந்த ஆய்வு விடயங்களை ஒப்புவித்ததுடன் இணைந்து ஆய்வினை செய்வதற்கும் கோரிக்கை விடுத்தனர். விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தினூடான பேண்தகு அபிவிருத்திக்கான நோக்கங்கள், சமூகமயமான விஞ்ஞானம், புத்தாக்க சூழல்தொகுதி, புதிதாக உருவெடுக்கும் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம் ஆகிய ஐந்து தலைப்புக்களை மையப்படுத்தி பல செயலமர்வுகள் நடைபெற்றன. இந்த துறை சார்ந்த உலகளாவிய விஞ்ஞானிகள் கலந்து கொண்டு சமகால ஆய்வுகள் மற்றும் இலங்கையை மையப்படுத்திய பரிந்துரைகள் எனபலவற்றை விபரங்களுடன் விளக்கினார்கள்.

எமது பிரதேசத்தில் இந்த கருத்தரங்கின் விளைவுகளை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பதே இறுதியில் தொக்கி நிற்கின்ற கேள்வியாக அமைந்தது. எமது நாட்டினை தொழில்நுட்பத்தில் கட்டியெழுப்ப நாம் என்ன செய்யப் போகின்றோம்?

இருக்கின்ற வளத்தை முறையாக பயன்படுத்துவதோடு தொழில்நுட்பத்தை உள்வாங்கும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டிய அவசியமும் இதில் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து வரப்போகும் காலம் தொழில்நுட்பத்தை அதிகளவில் உள்வாங்குகின்ற காலமாக எமது எதிர்கால சந்ததி பரிணமிக்க இருக்கின்றதை நாமும் நினைவில் வைத்து அதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்வது சிறந்தது. இந்தகருத்தரங்கில் பல்நாட்டு விஞ்ஞானிகளின் கருத்துக்களை பலரும் செவிமடுக்க அவர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது முக்கிய விடயமாகும். மாணவர்களுக்கான கற்றலில் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்பனவற்றை உள்வாங்குவதற்கான வாய்ப்புக்களை நாம் உருவாக்கினால் அன்றி எதுவும் நடப்பதற்கான சாத்தியமில்லை. வாருங்கள் இது எமக்கான காலம். இந்த கலந்துரையாடல் பற்றிய விபரங்களையறிய www.costi.gov.lk எனும் இணையத்தளத்திற்கு சென்று பல விடயங்களையும் அறிந்து கொள்ளலாம்.

எமது முந்தையர் கூறிவைத்த அனைத்தும் பொன்மொழிகள்!. தமது அனுபவத்திற்கூடாக சொல்லி வைத்தவை அனைத்தும் வழக்கழிந்து போய்விடாது நாம் பயன்பாட்டில் கொண்டிருக்க வேண்டும். அவையனைத்தும் நமக்கான எக்காலத்திற்குமான பாடங்கள். புதுமைகள் காண வெண்ணி அவற்றை புற மொதுக்கக் கூடாது. ஏனெனில் அவையனைத்தும் வெறுமனே கூறப்பட்டவைகளல்ல. தமது வாழ்வில் கிடைத்த அனுபவத்தை வார்த்தைகளாக்கி அவற்றினை பொன்மொழிகளாக்கி வைத்திருக்கின்றார்கள். அதனை நாம் கவனித்து அலசியாராய்ந்து நடப்பதே மேல்.

Related posts

*

*

Top