உடலில் 183 தையல்கள்…வீல்சேர் வாழ்க்கை… தீபா மலிக் வெள்ளி வென்ற கதை!

-எம். குமரேசன்

ரியோ பராலிம்பிக் போட்டியில் முதலில் தங்கம் அடுத்து வெண்கலம் இப்போது வெள்ளிப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. மாரியப்பன் தங்கவேலுவையும் வருணையும் அடுத்து குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் தீபா மலிக். தற்போது 46 வயதான தீபா மலிக்தான் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தீபா மலிக் ராணுவ அதிகாரியின் மனைவி. இரண்டு குழந்தைகளின் அம்மா. கடந்த 1999ம் ஆண்டு முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நடந்த போது, இடுப்புக்கு கீழே உடல் உறுப்புகள் செயல் இழந்தன. அதை சரி செய்வதற்கு 31 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இடுப்புக்கும், தொடைக்கும் இடையே மட்டும் 200 தையல்கள். அறுவை சிகிச்சைக்குப் பின்னும், அவரால் பழைய நிலைக்குத் திரும்ப முடியவில்லை. அறுவை சிகிச்சையில் இருந்து பூரண குணமடைய மட்டும் 3 ஆண்டுகள் பிடித்தன. அதற்கு பிறகு வீல்சேரில்தான் தீபாவின் வாழ்க்கை என்றாகிப் போனது.

உடல் ஊனமானாலும், மன உறுதி தளராமல் விளையாட்டில் கவனம் செலுத்தினார். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு குண்டு வீசும் தீபா, ஏற்கனவே 2011-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

rich

கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசு தீபாவுக்கு அர்ஜுனா விருது வழங்கியது. இந்த விருதை பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனை இவர்தான்.

வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என பல விளையாட்டுப் போட்டிகளிலும் தீபா அசத்துபவர். மோட்டார் பைக் பிரியை. இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுபவர். கார்பந்தயத்திலும் ஆர்வம் கொண்டவர். ஹிமாலயன் மோட்டார் ரேசில் பங்கேற்றுள்ளார். இந்த பந்தயம்தான் இந்தியாவிலேயே மிகவும் ஆபத்து நிறைந்தது. பாலைவனம் முதல் இமயம் வரை சுமார் 1700 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ரிஸ்க் நிறைந்த ஒரு பந்தயம் இது. கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்திலும் கார் ஓட்ட வேண்டியது இருக்கும். இந்த கார் பந்தயத்திலும் தீபா கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்.

ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா அமைப்பிடம் இருந்து ஸ்பெஷல் லைசென்ஸ் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனை இவர்தான். இவருக்கென்றே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட கார்களில் தீபா, ரேஸ்களில் பங்கேற்கிறார்.

கடந்த 2008ம் ஆண்டு யமுனா நதியில் நீரோட்டத்தை எதிர்த்து, ஒரு கிலோ மீட்டர் நீச்சலடித்து சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். அப்படி நான்கு லிம்கா சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

தீபா தேசிய அளவில் 45 தங்கப்பதக்கங்களும் 5 வெள்ளிப் பதக்கங்களும் 2 வெண்கலப்பதக்கங்களும் வென்றுள்ளார். சர்வதேச அளவில் 13 பதக்கங்களை வென்றுள்ளார்.

depa3

தீபா வெறும் விளையாட்டு வீராங்கனை மட்டுமல்ல. சிறந்த தொழில்முனைவோரும் கூட. சொந்தமாக கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். சிறந்த பேச்சாளரும் கூட.

ஹரியானா மாநில விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் சாதித்துக் காட்டினால், மிகப்பெரிய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், தீபா மலிக் ரூ.4 கோடி பரிசு பெறவுள்ளார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற தீபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘தேசத்தை பெருமிதப்படுத்தி விட்டீர்கள்’ என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களும் தீபாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முயற்சி செய்யாமல் இருப்பதுதான் நிஜமான ஊனம் என நமக்கு காட்டியிருக்கிறார்கள் பாரா ஒலிம்பிக்கில் கலந்துக் கொண்ட அனைத்து வீரர்களும்.

நன்றி : விகடன்

*

*

Top