‘நான் கற்கும் இசைக் கல்வி எனது குடும்பத்தைக் காப்பாற்றும்’ – மனம்திறக்கிறாா் ரஞ்சித்குமாா்

சிலவேளை சாப்பாடு இல்லாமல் இசைக்கல்வி பயிலச் செல்வேன். எனது நண்பர்கள் பணம் கொண்டு வந்து கடையில் வாங்கிச் சாப்பிடுவார்கள். நான் தண்ணீரைக் குடித்துவிட்டு பாட்டுப்பயிற்சியை மேற்கொள்வேன். எனது நண்பர்களுக்கு எனது நிலைமையைச் சொல்ல முடியாது தவித்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் நீ சாப்பிட்டு விட்டாயா? என கேட்டால், நான் ஆம் எனப் பதில் சொலலி விடுவேன். என் வேதனையை நான் சொல்லவும் விரும்பவில்லை. மற்றவர்கள் என்னைப் பார்த்து பரிதாபப்படவும் விரும்பவில்லை எனத் தெரிவித்தார் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவின் இசைத்துறையில் 2ம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவன் திருக்குமரன் ரஞ்சித்குமார்.

நானிலம் இணையத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவன் இவ்வாறு தெரிவித்தான். அவன் அளித்த செவ்வி பின்வருமாறு:
நான் படிக்கும் இசைத்துறையில் கற்றல் தேவைக்காக சிலவேளை போட்டோப்பிரதி எடுக்கக் கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். எனது அப்பா மீன்பிடித் தொழிலாளி. பருத்தித் துறைக் கடலில் தான் மீன்பிடி கூலித்தொழில் செய்து வருகிறார். ஒரு மாதம், 2 கிழமை, 1 கிழமை எனத் தங்கி நின்று தொழில் செய்து வருவார். இருந்தும் அவரின் வருமானம் மிகக்குறைவு.

எனது குடும்பம் எனது கையில்தான் உள்ளது. நான் படித்து முடித்து வேலைக்குப் போய்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். எனக்கு மூன்று தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர். எனக்கு அடுத்த தம்பியும் வேலை செய்கிறான். அவனுக்கும் சம்பளம் குறைவு. மற்ற மூவரும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். தம்பியும் முடிந்த அளவு உதவி செய்வான். மற்ற எல்லா செலவும் அப்பா தலையில்தான்.

நாங்கள் ஒரு காலத்தில் நல்லாதான் இருந்தனாங்க. எங்கட சொந்த ஊர் மைலிட்டி (மைலிட்டிதுறை J/248). 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது எனது குடும்பம் இடம்பெயர்ந்து இங்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் எனது சொந்த ஊருக்கு போக முடியவில்லை. சொந்த நாடடிலேயே அகதிகளாக வாழ்கின்றோம். நாங்கள் யாருக்கும் பகையில்லை. எமது ஊர், தொழில் செய்வதற்கு உகந்த ஊர். மீன்பிடி, விவசாயம் அங்கு பிரதான தொழில். அத்துடன் கல் அகழ்வு தொழிலும் செய்யலாம் என்டு அப்பா அடிக்கடி சொல்லுவார். அங்கு எங்கள் குடும்பம் சிறப்பாக வாழ்ந்து வந்ததாகவும் கூறுவார். பெரிய கல் வீடுடில இருந்த நாங்க, இப்பிடி இருக்கிறோம் என அம்மா அங்கலாய்ப்பார். ஆனால் நான் பிறந்தது தான் அங்க. மற்றபடி இருபத்தைந்து வருடஙகளாக கண்ணகி முகாமிலேயே வாழ்ந்து வருகிறேன்.

எமது ஊரிலே வாழ்வதுதான் எமக்குச் சந்தோஷம். எனக்கு அது கவலையாக இருந்தாலும் மனதை சமாதானப்படுத்திக் கொள்வோன். நாம் என்றோ ஒருநாள் எமது சொந்த ஊரில் போய் வாழ்வோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

எனது இசைப் பயிற்சிக்காக இசைக்கருவி ஒன்றை வாங்கக் கூட என்னிடம் பணமில்லை. எனக்கு உதவி செய்ய யாருமில்லை. கடந்த வருடம் நடைபெற்ற கவிதா ஆற்றுகை (TALENT) போட்டியிலேயே 75,000 ரூபாய் பணப்பரிசு பெற்றிருந்தேன். அப்பணத்தி லேயேதான் எனது வீடு ஓரளவேனும் நிமிர்ந்து நிற்கிறது. எதிர்காலத்தில் இசைத்துறையில் நல்லதொரு இடத்தினைப் பிடிப்பதே எனது நோக்கமாகும். அதற்கு கடவுள் அருள் புரிவாரென நம்புகிறேன். எனது குடும்பத்தின் முழுமையான ஆதரவும் எனக்கு இருக்கிறது. சின்ன வயதில் இருந்தே நான் பாடகனாக வர வேண்டுமென்ற ஆசை எனக்கிருந்தது. தற்போதைய நிலையில் கடும் போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் எனது இலட்சியமும் சவாலாகத்தான் இருக்கும்.

எமது தற்போதைய குடும்ப சூழலில் நான் வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்து எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது அவசியம். அதன் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. அதைத்தான் எனது இலட்சியமாக நான் இப்ப நிலைக்கறன். என்றான்.

தொடா்புகளுக்கு :  திருக்குமரன் ரஞ்சித்குமார்,  கண்ணகி முகாம், சுன்னாகம். தொ.இல- 077 284 1609

– அ.றொக்ஸன்

music-student-rajkumar

*

*

Top