எழுகதமிழ் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

Barack Obama

எழுகதமிழ் பேரணியில் இன்று 24.09.2016 சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, பல கோரிக்கைகளையும் முன்வைத்தவாறு முற்றவெளியை வந்தடைந்தடைந்தனர். இப் பேரணியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் உணர்ச்சிபூர்வமாக இதில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தில் சிங்­கள, பௌத்த மய­மாக்­கலை உடன் நிறுத்தக் கோ­ரியும் தமிழ் தேசி­யத்தின் இறைமை, சுய­நிர்­ணய உரிமை அடிப்­ப­டை­யி­லான ஒரு சமஷ்டித் தீர்வை வலியு­றுத்­தியும் யுத்­தக்­குற்­றங்­க­ளுக்கும் இனப்­ப­டு­கொ­லைக்­கு­மான சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும் அர­சியல் கைதிகள் விடு­தலை காணாமல்­போனோர் வி­வகாரம் மீள்­கு­டி­யேற்­றத்தில் காணப்­படும் தாமதம் காணி அப­க­ரிப்பு, இரா­ணுவ பிர­சன்னம், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழும் உரிமை ஆகி­ய­வற்­றுக்கு உட­னடித் தீர்­வொன்றை வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்து தேசிய அரசாங்கம், சர்வதேச சமூகம் ஆகிய வற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ‘எழுக தமிழ்’ மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது.

வலிவடக்கு, வலி.மேற்கு, யாழ்.நகரத்தை அண்மித்த பகுதிகள், ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள், பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் கல்வி சாரா தரப்புக்கள், பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள் ஆகியன யாழ்.பல்கலைக்கழக பிரதான வாயில் முன்றலில் அணி திரண்டன.

அதேபோன்று வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி, வவுனியா, மன்னார். முல்லைத்தீவு மற்றும் ஏ9 வீதிக்கு அண்மித்த பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் ஒன்று கூடின.

இரண்டு இடங்களிலும் ஒன்றுகூடல்கள் நிறைவடைந்ததன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நல்லூர் ஆலய முன்றலிலிருந்து கவனயீர்ப்பு பேரணி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனையொத்த நேரத்திலேயே பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் பேரணி ஆரம்பமாகியது.

நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி கந்தர்மடத்தை நோக்கி நகர்ந்து சென்றது. அதேநேரம் யாழ்.பல்கலைகழக முன்னறிலில் ஆரம்பிக்கும் பேரணி பலாலி வீதியூடாக கந்தர்மடம் நோக்கி நகர்ந்து சென்றது.

கந்தர்மடம் சந்தியில் இரண்டு பேரணிகளும் சந்தித்து, பின்னர் நாவலர் வீதி வழியாக இலுப்பையடிச்சந்தியை அடைந்து கஸ்தூரியார் வீதி வழியாக வைத்தியசாலை வீதியை பேரணி அடைந்தது. பின்னர் வைத்தியசாலை வீதி யூடாக சத்திரச்சந்தியை அடைந்து அங்கிருந்து காங்கேசன் துறை வீதியூடாக முற்றவெளியை வந்தடைந்துள்ளது.

முற்றவெளி மைதானத்தில் பேரணியில் கலந்துகொண்ட அனைவரின் சங்கமிப்புடன் பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள், தேவைகள், வாக்குறுதி அளிக்கப்பட்டும் தற்போது நிறைவேற்றப்படாதுள்ள விடயங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புக்கள், நிரந்தரமான அரசியல் தீர்வு, பாதிக்கப்பட்ட தரப்புக்கான உரிய பொறுப்புக்கூறலும், நீதி வழங்கலும் ஆகிய அனைத்து விடயங்களையும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும், சர்வதேச சமுகத்திற்கும் எடுத்துரைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படம் : அ.சபேசன்

Related posts

*

*

Top