வறட்சி காரணமாக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் பாதிப்பு

இலங்கையில் வறட்சியின் காரணமாக கிழக்கு, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உள்பட நாட்டின் பல பாகங்களிலும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய குடும்பங்கள் தங்களது குடி நீர் உள்பட நாளாந்த பாவனைக்குரிய நீரைப் பெற்றுக் கொள்வதில் இன்னல்களையும், சிரமங்களையும் எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது. வறட்சினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குளங்களும், கிணறுகளும் நீர் இன்றி காணப்படுகின்றன.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் வறட்சியின் காரணமாக சிறு தானியச் செய்கை உள்பட பயன் தரு தாவரங்களும் நீரின்றி கருகி மடிகின்றன. குளங்களும், நீர் நிலைகளும் நீர் இன்றி காணப்படுவதால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மீன்களும் செத்து மடிகின்றன. காட்டு யானைகள் நீர் தேடி மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன.

அரசு இடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி வறட்சியினால் வட மத்திய மாகாணத்திலுள்ள பொலநறுவ மாவட்டத்தில் மட்டும் 19 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 71 ஆயிரம் பேர் குடி நீர் பிரச்சனையை எதிர்கொள்வதாகக் கூறப்படுகின்றது.

வறட்சியின் காரணமாக குறிப்பாக குடி நீர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் உள்ளுராட்சி சபைகள் ஊடாகவும், தேசிய நீர் வழங்கல் வாரியத்தின் ஊடாகவும் நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால், அது போதுமானதாக இல்லை என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

*

*

Top