இரவல்களை புறம் தள்ளி இருப்புகளை உடனிருத்திய ஒரு மகத்தான படைப்பு ‘மனசுக்குள் ஒரு மழைச்சாரல்’

– வெற்றி துஷ்யந்தன்

ஈழத்து திரைத்துறை அல்லது ஈழத்து சினிமா என்கின்ற சொல்லாடற் தளம் அது ஒரு நீண்டகால வரலாற்றுப் பின்னணி கொண்டது. அதன் தொடர்ச்சியாய் பல் தரப்படட காலப்பகுதிகளில் பல நம்தேச ஆளுமைகளினால் இந்தத் தளத்தினுள் நம் மண் சார்ந்த திரைப்பட முயற்சிகள் நிகழ்ந்தே வந்திருக்கின்றன .அப்படியான சூழலில்போருக்கு பின்னரான இன்றைய சூழலில் பல் தரப்படட ஒரு இளையோர் படையே சினிமா மீதான பெரும் கனவொடும் சாதிக்க துடிக்கும் மனோ நிலையோடும் குறும்படங்கள் பாடல்கள் ஆவணப் படங்கள் என்று நகர்ந்து இன்றைக்கு முழு நீளத் திரைப்படங்களை கூட தென் இந்திய திரையின் பிரமாண்டங்களுக்கு நிகராக வழங்கக் கூடிய வகையில் எங்கள் மண்ணிலும் காத்திரமான படைப்பாளிகளின் உருவாக்கத்திற்கான சாத்திய சூழல் உருவாக்கம் பெற்றிருக்கின்றது.

அப்படியான ஒரு சூழலில் கடந்த வாரம் திரையில் வெளிவந்த மனசுக்குள் ஒரு மழைச்சாரல் என்கின்ற எங்கள் தேச முழு நீளத் திரைப்படத்தை பார்வையிடடதன் அருட்டுணர்வே இந்த ரசனைக்கு குறிப்பை எழுதுவதற்கான பிரதான காரணியாகின்றது. முதலில் கவித்துவமான இந்த தலைப்பே படம் நிச்சயமாக காதலை மையப்படுத்தியதாகத் தான் இருக்க வேண்டும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பை தந்திருந்தது ஏலவே. உண்மையிலும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த திரைப்பட வெளியீட்டிற்காகவும், அதன் முழுமையான உருவாக்கத்திற்காகவும் பெரும் இளையோர் படை ஒன்றே பணியாற்றியிருக்கின்றது எனலாம்.

ஈழ சினிமா ஆர்வலரும் படைப்பாளியும் இந்த படத்தின் தயாரிப்பாளருமாகிய உதயரூபனின் தயாரிப்பிலும் இகதையிலும் வெளியாகியிருக்கின்ற இந்த படைப்பை நம் ஈழதேசம் நன்கறிந்த படைப்பாளி விநோதன் இயக்க, இசையை சுதர்சனும், படப்பிடிப்பை ராஜிம் படத்தொகுப்பை விநோதனும மேற்கொள்ள பிரபல நடிகர் ஜெராட், மிதுனா, சிந்தர், விஷ்ணு, லக்ஸ்மன், மதிசுதா, ரொபேர்ட், துசிகரன் என ஒரு நடிகர் படடாளமே நடித்திருக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் நாயகன் மனசுக்குள் மாறாது கிடைக்கும் அந்தக் காதலின் தேடல் தனது பள்ளி நாட்களை மீட்க்கும் கணங்களில் பாடசாலைக் கால வாழ்வு என காலம் முன்னோக்கி சென்று கதைக்களம் விரிகிறது. காதல், நட்பு, பாசம், வலி என்று அனைத்து மனிதர்களில் இருக்கின்ற வாழ்வியல் கூறுகளை உள்ளிருத்தியே படம் நகர்கின்றது. உண்மையில் படத்தின் நகர்வை சிறில் லக்ஸ்மன் இன் பாத்திரத்தின் ஊடாக வயிறு குலுங்க சிரிக்கும் படியாக நகர்த்துகின்ற விதமே தனி அழகு. அடுத்து நாயகன் ஜெராட் மிகச்சிறப்பாக தனது பணியை சிறப்பாக செய்திருக்கின்றார். நடனம், நடிப்பு, மகிழ்வு, வலி. சோகம் என காதல் காடசிகளும் மிகச்சிறப்பான தனது வெளிபாடடை காட்டியிருக்கின்றார். இதனூடாக அவரது வளர்ச்சியை நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது. அதனை விட இயக்குனர் விநோதன் ஜெராட்டை பயன்படுத்திய விதமும் அழகு .அடுத்து மிதுனா மிகச்சிறப்பாக ஈடு கொடுத்து தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

உண்மையில் ஒரு ஒட்டு மொத்த படைப்பின் வெற்றி என்பது அது கொண்டிருக்கக் கூடிய அல்லது ஒட்டுமொத்த சிறப்பான பணியினூடாகவே தங்கியிருக்கும் அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் ராஜின் பணி மிக்க காத்திரமானது படத்தை பார்பவர்களுக்கே அது புரிந்திருக்கும். காட்சிகளின் கனத்திற்கு ஏற்ப படத்தொகுப்பை தனது அனுபவ அறிவின் ஊடாக மேற்கொண்டிருக்கும் விநோதனின் பணியும் அளப்பரியது. அடுத்து இயக்குனரின் செய்தியை வெறும் செய்திகளுக்கூடாக அல்லாமல் பின்னணி இசையை கலந்து கொண்டு செல்லும் இசையமைப்பாளரின் பங்கு பொதுவாக முழுநீளத் திரைப்படங்களுக்கு அவசியமானது. அந்த வகையில் பெரிதும் இந்த படத்திற்கு வலுச்சேர்த்த காரணிகளில் நாடறிந்த இசையமைப்பாளர் சுதர்சனின் பங்கு காத்திரமானது. மிகச்சிறப்பாக அதிலும் திரைப்படத்தின் பாடல்களில் ஒன்றான நெஞ்சுக்குள் எதோ செய்தாய் பாடலில் வரும் காதலே காதலே எனத்தொடங்ககும் அந்த அருமையான சின்ன இடத்தை பெருவாரியான இடங்களில் வயலினில் ஊடாகவும், புல்லாங்குழலுக்கூடாகவும், நாதஸ்வரத்தில் வாயிலாகவும் வழங்கிய விதம் மிகச்சிறப்பாக கதையோடு ஒன்றித்துச்சென்று ரசிகர்களையும் திருப்பதி படுத்தியுள்ளன எனலாம். பாடல்கள் அனைத்தும் காட்சிகளோடு திரையில் பார்க்கின்றபோது பிரமிப்பையே தருகின்றது.

உண்மையில் இந்தத் திரைப்படத்தை பொறுத்தவரை இயக்குனர் விநோதன் இந்த படத்தில் என்னென்னெ இருக்க வேண்டும் என்பதை காட்டிலும் என்னென்னெ விடயங்கள் இருக்கக் கூடாது என்பதில் காட்டிய தீவிரத்தை நாம் புரியும்படியாக இருந்தது. இதனூடாக விநோதன்,

வெளிநாட்டு வாழ்வின் வலி
போர்க்கால வாழ்வியல் எச்சம்
மறந்தும் மறையாத ஈழத்தமிழனின் பண்பாட்டு அம்சம்
பண்பாடும் கலாசாரமும் எப்போது இருந்தது என்ற பதிவு

இப்படியான பல விடயங்களை வெளிப்படையாக பேசியிருக்கின்ற வகை கூட எமக்கான ஒரு படைப்பு என்கின்ற மனோ நிலையை தருகிறது. குறிப்பாக வசனங்கள் பல இடங்களிலும் சிறப்பாக இன்னமும் எங்களோட இருக்குறது மொழி ஒன்றுதான் என்கின்ற விடயங்கள் அரங்கில் இருந்தவர்களுக்கு உணர்வு கலந்த புல்லரிப்புகளை தந்தது.

இரவல்களை புறம் தள்ளி இருப்புகளை உடனிருத்தி உண்மையில் எங்களுக்கான சினிமா ஒன்றை நிலை நிறுத்த வேண்டும் என்கின்ற இயக்குனர் வினோதனின் திடகாத்திரமான நோக்கத்திற்கு படக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக மானிப்பாய் சந்தியிலே பாடல் மிகச்சிறப்பாக இருந்தது .படத்தின் கதை நகர்வில் அக ரீதியாகவும் இபுற ரீதியாகவும் தாக்கமுறும் இடங்களில் கூட இரவல்களை புறம் தள்ளியிருக்கின்றனர். குறிப்பாக தொலைக்காடசி பார்வையிடும் இடங்களில் கூட ஈழ சினிமா இருப்பை முன்னிறுத்திய யாழ் தொலைக்காட்சி போன்ற அந்த பாவனைகள் கூட கூர்ந்து கவனிக்கப்பட்டு வடிவமைத்திருக்கின்றார் இயக்குனர்.

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படத்தின் இயக்குனர் விநோதன் ஒரு அனுபவ ரீதியான கலைஞன் என்பதையும் ஒரு படைப்பாளி வாழும் சூழலை காட்டிலும் ஒரு படைப்பாளி வாழ்ந்த சூழலின் தாக்கம் அவரது படைப்பூக்க செல்நெறியில் பெரும் பங்காற்றும் என்பார்கள் அதற்கு விநோதன் அவர்களும் விதிவிலக்கல்ல என்பதையே நான் சொல்வேன்.

ஒரு படைப்பு முகிழ்ந்தெழும் போது விமர்சன அரங்கும் தோற்றம் பெறும் என்ற பொதுவெளியில் விமர்சனம் என்பது அவரவரின் தனிப்படட பார்வை. ஆரோக்கியமான விமர்சன வெளி என்பது நீண்டகால படைப்பு வெளியில் நிலவும் ஒரு கானல் நீரே.

எது எப்படியோ மனசுக்குள் ஒரு மழைச்சாரல் அனைத்து வகையிலும் எங்கள் மண்ணின் தனித்துவத்தை பிரதிபலித்திருக்கக் கூடிய ஒரு காத்திரமான படைப்பு எனவே இந்த படைப்பு முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்களை கூற வேண்டியது ஒரு கடமையாகின்றது. மொத்தத்தில் மனசுக்குள் மழைச்சாரல் எமது மண்ணுக்கான அடையாள சினிமா தேடலுக்கு ஒரு பெரும் அத்திவாரமாகியிருக்கின்றது.

Related posts

*

*

Top