யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றினால் யாழ்.பல்கலைக்கழக மாணவர் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் நேற்று 20.10.2016 வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23) மற்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்வாக மேலும் தெரியவருவதாவது…

குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை 11.30 கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு கே.கே.எஸ்.வீதியினூடாக அதிவேகமாக பயணித்கொண்டிருந்தனர். இந்நிலையில் குளப்பிட்டிச் சந்திப் பகுதியில்; வைத்து இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

இதன்போது இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மதில் ஒன்றில் மோதி அந்த இடத்திலேயே மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளனர். இந்நிலையிலேயே மாணவர்களின் சடலங்களை இரவோடு இரவாக பொலிஸார் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துளளனர்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்களை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டள்ளார். அத்துடன் உடற்கூற்றுப் பரிசோதணையை நடத்துமாறு வைத்தியர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மாணவர்களின் உடற்கூற்றுப் பரிசோதணையின்போது துப்பாக்கி பிரயோகத்தினால் குண்டு பட்டு இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொலையா? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், உண்மைகள் வெகுவிரைவில் வெளிக்கொணரப்படும் எனவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்தி :

இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட  பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

*

*

Top