சுதேச வைத்தியமும் ஆய்வுமாநாடும் கண்காட்சியும்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகும் வடமாகாண சுதேச வைத்தியதுறையும் இணைந்து முதற்தடவையாக கைதடியில் அமைந்துள்ள சித்த வைத்திய அலகில் 2017 ஐனவரி மாதம் 27ம் 28ம் திகதிகளில் முதலாவது தேசிய சுதேச வைத்திய ஆய்வு மாநாடு மற்றும் கண்காட்சியை (National Research Conference and Exhibition on Indigenous Medicine – NRCEIM 2017) நடாத்த திட்டமிட்டிருக்கின்றார்கள். ‘இயற்கையுடனான சுகாதாரமான வாழ்வை நோக்கி’ `[Towards Healthy Life with Nature]  என்னும் மையக்கருத்தை உள்வாங்கி இவ் ஆய்வு மாநாடு நடைபெற விருக்கின்றது.

Prof.G.Mikunthanமுதற்தடவையாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகும் வடமாகாண சுதேச வைத்திய துறையும் இணையவிருக்கும் இந்நிகழ்வு சிறப்பாக அமைய அனைவரதும் பாராட்டுக்கள். இந்த கருத்தரங்கின் இணைப்பாளராக கலாநிதி த.தயாளினி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினதும் வடமாகாண சுகாதார துறையினதும் இந்த இணைவு பல விடயங்களில் சுதேச வைத்தியத்திற்கும், சித்த வைத்திய அலகிற்கும் இன்னும் மாகாண சுதேச வைத்தியத் துறைக்கும் பயனளிக்க இருப்பதுடன் மக்களுக்கும் மிகுந்த பயனைக் கொடுக்கும் என்பது எதிர்பார்ப்பு. எங்களூர் மருத்துவத்தின் தொன்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கவும் அதன் மூலம் மக்களின் சுகாதாரமான வாழ்வை மேம்படுத்தவும் இவ்வாறான நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். சித்த வைத்தியத்தினை பயிலும் மாணவர்களை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கான அறிவூட்டலையும் ஆய்வு செய்யும் ஆற்றலை மேம்படுத்தவும் இவ்வாறான நிகழ்வுகள் அவசியம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். தென்பகுதியில் ஆயுர்வேத வைத்தியம் மற்றும் யுனானி மருத்துவங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சித்த வைத்தியத்திற்கு கொடுக்கப்படவில்லை. எனினும் சித்த வைத்தியர்களை உருவாக்கும் இவ்வாறான அலகுகள் இன்னும் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு http://www.siddha.jfn.ac.lk என்னும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இதனுடன் பக்கபலமாக சித்த வைத்திய அலகுக்கு அருகில் அமைந்திருக்கும் ஆயுர்வேத வைத்தியசாலை சித்த வைத்திய கற்கை நெறிகளுக்கு பக்கபலமாக அமையக்கூடிய வகையில் சித்த ஆதார வைத்திய சாலையாகவும் அங்கே உள்ளக சித்த வைத்திய மரபுகளுக்கேற்ற கற்கைகளை கற்பிப்பதற்கான வார்ட்டுகளை அமைப்பதற்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருப்பது சித்த வைத்திய துறையை மேலும் வலுவூட்டவும் மேன்மைப்படுத்தவும் உதவும். இதற்கான கோரிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தரினால் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சித்த வைத்தியத்தை கற்கும் மாணவர்களுக்கான செயன்முறைகளை முழுமையாக கற்றுத்தேற சித்த வைத்திய அலகு மற்றும் சித்த வைத்தியசாலையின் இணைவு அவசியமானதாகும்.

சித்த வைத்திய கற்கைநெறி கைதடியில் அமைந்துள்ள அவர்களது சித்த வைத்திய அலகில் தமிழில் நடாத்தப்படுகின்றது. சித்தர்கள் பயன்படுத்திய ஏடுகளும் வைத்திய குறிப்புக்களும் சித்த வைத்திய கற்கைநெறியை முழுமையாக கற்றுத்தேற அடிப்படை உசாத்துணையாக இருப்பதனால் இதற்கான கற்கைநெறியை எமது தாய்மொழியாம் தமிழிலேயே நடாத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் சிபார்சு செய்திருக்கின்றமை நல்ல செய்தி. கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்த வைத்திய அலகில் இதற்கான கற்கைமொழி ஆங்கிலமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு இரு இடங்களிலுமுள்ள இக்கற்கைநெறி தமிழிலேயே வழங்கப்பட வேண்டும் என சிபார்சு செய்யப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் சித்த வைத்திய முதுகலைமாணி கற்கைநெறி (MD) க்கான வாய்ப்பினை பெறும்பொருட்டு சுதேச வைத்தியத்திற்கான உயர்பட்ட கற்கை நிறுவனத்தினை (Postgraduate Institute of Indigenous Medicine) உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சு எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனுடன் சேர்த்து சித்த வைத்தியத்தில் டிப்புளோமா கற்கை நெறியினை யாழ்பல்கலைக்கழக உயர்பட்ட படிப்புகள் பீடத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்பதற்கிணங்க எங்களூர் மருத்துவத்தின் மகத்துவத்தை மேலும் உலகறியச் செய்யும் பொறுப்பு சித்த வைத்தியத்தை கற்பிப்பதற்கும் அதனை தொழிலாக கொண்டோருக்கும் இதனாலான கல்வியறிவு நிச்சயமாகக் கிடைக்கும். விரைவில் சித்த வைத்திய நிறுவனமாக உயரவிருக்கின்ற சித்த வைத்திய அலகின் தற்போதய செயற்பாட்டு கட்டமைப்பு சிறப்பாக முனைப்பாக இயங்குவதை கண்டும் கேட்டும் அறிந்து அனைவரும் மகிழ்கின்றனர். சித்த வைத்திய கலாநிதி விவியன் சத்திய சீலனின் தலைமைத்துவத்தின் கீழ் உபகுழுக்களான அனைத்து விரிவுரையாளர்களும் ஊழியர்களும் இணைந்திருப்பது சிறப்புக்குரியது. குறிப்பாக சித்த வைத்திய மாணவர் ஒன்றியத்தின் (Siddha Medicine Students Association)செயற்பாடுகளும் கொண்டிருக்கும் முனைப்பும் பாராட்டுக்குரியது. மக்கள் மத்தியில் சுதேசவைத்தியத்தின் பெருமையையும் அதனது சிறப்புக்களையும் எடுத்துச் சொல்வதற்காக அவர்கள் நடாத்தும் கண்காட்சிகள் வைத்தியபட்டறைகள் என்பன பாராட்டத்தக்கன. எங்களூர் மூலிகைகளை இனங்காண்பதும் அவற்றை பயன்படுத்தும் வகைகளைப் பற்றி மக்களுக்கு அறிவூட்டும் இம்மாணவ மாணவிகளின் செயற்பாடுக்கு அனைவரும் ஊக்கங்கொடுத்தல் வேண்டும்.

எங்களூர் மருத்துவத்தின் கற்கையை பலரும் பெற்றுக் கொள்வதற்காக இந்த அலகினை நிறுவனமாக்கும் முயற்சி (Institute of Siddha Medicine) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நிறுவனமாகும் போது அதற்கான வசதி வாய்ப்புக்களும் பெருக்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதற்கு தேவையான கட்டுமாண வசதிகள், இடவசதி, மாணவர்களுக்கான வகுப்பறைகள், தங்குமிடவசதி, விளையாட்டு மற்றும் ஏனைய திறன்களை விருத்தி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நல்ல உள்ளங்களின் அனுசரணையை எதிர்பார்த்திருக்கின்றார்கள். சூழலுக்கிணைவானதும் இயற்கை மருத்துவமாகவும் எமது பாரம்பரிய மருத்துவமாகவும் உள்ள சித்த வைத்தியத்தை நாம் மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய நிலையில் இதற்கான வசதிவாய்ப்புக்களை வழங்க விரும்பும் நல்ல உள்ளங்கள் சித்த வைத்திய அலகுடன் தொடர்பு கொள்ள முடியும்.

சித்த வைத்திய அலகில் கற்று வெளியேறியவர்களுக்கான முன்கற்றோர் சங்கத்தின் (Siddha Alumni Association)  தோற்றம் பெறும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்கற்றோர் அவையின் உள்வாங்கல் சித்த வைத்திய துறையின் செயற்பாட்டினை மேலும் மெருகூட்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த வைத்திய அலகில் கற்று வெளியேறிய அனைத்து சித்த வைத்திய பட்டதாரிகளும் சித்த வைத்திய துறையின் முன்கற்றோர் அவையில் உறுப்பினராக சேர்ந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். விபரங்களுக்கு சித்த வைத்திய அலகின் இணையத்தளமானா http://www.siddha.jfn.ac.lk/?page_id=21 இல் விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். வாருங்கள் இணையுங்கள், சித்த வைத்தியத்துறையை மேம்படுத்த அனைவரும் இணையலாம்.

மாகாண சுதேச வைத்தியத்துறையில் பணியாற்றும் உறுப்பினர்கள் பலர் சித்த வைத்திய துறையில் கற்று தேறியவர்களாவர். அங்கு பணிபுரியும் சுதேச வைத்தியர்களின் ஆய்வுப்புலமையை அதிகரிப்பதற்கு சித்த வைத்திய அலகு முழுமையாக முயற்சி செய்யும். இணைந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் மாணவர்களை ஆய்வில் ஈடுபட ஊக்கப்படுத்தவும் இது அடிப்படையாக இருக்கும். மேலும் சித்த வைத்தியத்துறையிலுள்ள தொழில் நிறுவனங்களையும் சித்த வைத்திய அலகுடன் இணைக்க முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சுதேச வைத்தியத் துறையின் பங்களிப்பை கூட்டுவதற்கு இவ்வாறான தேசிய மட்டத்திலான ஆராய்ச்சி மாநாடு மிகவும் அவசியம். இம்மாநாட்டின் மூலம் சுதேச மருத்துவத்துறை சார்ந்த அனைவரும் இணைக்கப்பட்டு சுதேச வைத்தியத்துறையின் எதிர்காலம் பற்றி கலந்துரையாடி திட்டங்களை தீட்டிக் கொள்ள களமாகவும் இது அமையவிருக்கின்றது. கைதடியிலுள்ள சித்த வைத்திய அலகு சித்த வைத்திய நிறுவனமாக பரிணமிக்கவிருக்கும் நிலையில் அதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு அதற்கருகிலுள்ள காணிகள் தேவைப்படுகின்றன. பரோபகாரிகள் இன்னும் சித்த வைத்திய துறையின் முன்னேற்றத்தின்பால் ஈர்ப்புக் கொண்டவர்களின் உதவிகளை இதற்காக வேண்டி நிற்கின்றோம். சித்த வைத்திய நிறுவனத்திற்கான கட்டடங்கள் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம், தங்குமிட வசதிகளை மேலும் ஏற்படுத்த நிலம் தேவைப்படுகின்றதென்னும் விண்ணப்பத்தினை இவ்விடத்தில் முன்வைக்க விரும்புகின்றேன். நல்ல உள்ளங்களின் உதவியை சுதேச வைத்தியத்துறை எதிர்பார்த்திருக்கின்றது.

Related posts

*

*

Top