சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் நடத்திய கவிதைப் பயிலரங்கு

வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் நடத்திய கவிதைப் பயிலரங்கு நேற்று 21.10.2016 வெள்ளி மற்றும் இன்று 22.10.2016 சனி ஆகிய கிழமைகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல்நாள் செயலமர்வுக்கு உதவிப் பிரதேச செயலர் நே.செல்வகுமாரி தலைமை தாங்கினார். கவிதைக்கான அறிமுகம் என்ற பொருளில் மூத்த கவிஞர் சோ.பத்மநாதனும் தமிழில் மரபுக் கவிதைகள் என்ற பொருளில் பருத்தித்துறை பிரதேச செயலர் கவிஞர் த.ஜெயசீலனும் கருத்துரைகளை வழங்கினர்.

இரண்டாம் நாள் நிகழ்வு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தக்சாயினி செல்வகுமாரின் தொடக்கவுரையுடன் ஆரம்பமானது. தமிழில் புதுக்கவிதையும் நவீன கவிதையும் என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றிருந்த பயிலுநர்கள் கவிதை எழுதுமாறு வழிப்படுத்தப்பட்டனர்.  நிகழ்வின் நிறைவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவன் ஞா.கட்டைக்கவிதன் (அன்ரனிராஜ்) எழுதிய ஊமையின் கனவு என்ற கவிதை நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்டிருந்த இவர் 2018 ஆம் ஆண்டு கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர் ஆவார்.

தனது கவிதை நூலை நிகழ்வில் பங்கேற்றிருந்த பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி நவாலி மகா வித்தியாலயம், சண்டிலிப்பாய் இந்து கல்லூரி இளவாலை கொன்வென்ற் மற்றும் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

நிகழ்வின் நிறைவில் கவிதைப் பயிலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிலுநர்கள் எழுதிய கவிதைகளுள் சிறந்த மூன்று கவிதைகளுக்கு பிரதேச கலாசார விழாவின்போது பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

1 3

*

*

Top