வடக்கு – கிழக்கு இணைப்பு முதலமைச்சர் பதவியுடன் தொடர்புடையதல்ல

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது முதலமைச்சர் பதவியுடன் தொடர்புடைய விவகாரம் அல்ல என, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண தமிழ் இலக்கிய விழாவில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ”வடக்கு -கிழக்கு இணைந்த பிராந்தியத்தில் படித்த, பண்பான ஒரு முஸ்லிம் முதலமைச்சரைக் கூட ஏற்றுக் கொள்வதற்கு தயார் ” என்றும் வலியுறுத்தி கூறினார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம், வட மாகாண அமைச்சர் கல்வி அமைச்சர் கே. குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், ”தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் தங்கள் மொழி, மதம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை எக்காலத்திலும் பாதுகாப்பதற்கு, வடக்கு  – கிழக்கு நிரந்தரமாக இணைந்த தமிழ் பேசும் பிராந்தியம் அத்தியாவசியமானது” என்றார்.

வடக்கு – கிழக்கு இணைந்த பிராந்தியத்தில் எந்தவொரு இனத்திற்கும் அநீதி இழக்கப்படக் கூடாது என்பதில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாகவும் ”இணைந்த வடக்கு – கிழக்கு பிராந்தியத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் திருப்தியுடன் வாழ வேண்டும். அவர்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொடுப்பதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

*

*

Top