வீட்டுத்தோட்டத்தினூடாக வேளாண் காடுகளின் உருவாக்கம்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

மக்கு கிடைத்த அரும்பெரும் பொக்கிஷங்களுள் ஒன்றான சிவபுராணத்தில்… ‘புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்…. என மணிவாசகப்பெருமான் அருளியிருக்கின்றார். தாவர சங்கமம் என்பது அனைத்து உயிரிகளின் கூட்டு வாழ்க்கை. இந்த கூட்டமைப்புக்கூடாக உயிரியற்தொகுதி இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பது அதன் உள்ளார்ந்த அர்த்தம். இந்த கூட்டமைப்பில் முக்கிய உறுப்பினராக காடுகளை கருதலாம். காடுகள் என்னும் போது உடனடியான எம்முன்னே நிற்பது மரங்களே!. மரங்களை தாய்(மை)க்கு ஒப்பிடுவார்கள். தாயின்றி எதுவுமில்லையே. ஆக மொத்தத்தில் உயிரியற்தொகுதியின் மொத்த இயக்கத்திற்கும் முக்கிய பங்காளியான காடுகள் அவசியம் என்றாகின்றது. இந்தகாடுகளை நாம் கவனிக்காது விட்டால் அதனாலான இடர்களை பின்னாளில் உணர வேண்டியிருக்கும் என பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அறிஞர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அதனை எவரும் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அதனை காலநிலை மாற்றம், உலக வெப்பமாதல் என இப்போது உணர ஆரம்பித்திருக்கின்றோம். இதுவே இப்பொழுதே பாரிய பிரச்சனையென்றால் இனி வருங்காலம் கேள்விக்குறியேயாகி விடும். இனி வாழப்போகும் குருத்துகளுக்கு எமது பங்களிப்பு என்ன?

காடழித்து தம்மையும் அழித்தார் இம்மாந்தரெல்லாம்.

Prof.G.Mikunthanஉலகளாவிய ரீதியில் காடுகளின் இழப்பு பெரிதாகவே உணரப்பட்டிருக்கின்றது. இந்த இழப்பினூடாக உலகமயமாக்கலில் தாக்கமும் ஏற்பட்டிருக்கின்றது என்றால் பாருங்களேன். இலங்கையிலும் காடுகளின் இழப்பு அதே வீதத்திலேயே இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. 1920ம் ஆண்டில் 49 சதவீதமாக இருந்த காடுகள் 2005ம் ஆண்டில் 29.5 சதவீதமாக குறைந்திருக்கின்றது. இலங்கையில் 1990 க்கும் 2000க்கும் இடையில் 26,800 கெக்டர்கள் காடுகள் இழக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வருடமொன்றுக்கு 1.14 சதவிதம் காடுகள் அழிக்கப்படுகின்றன. 2000ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டுவரை இந்த வீதம் 1.43 ஆக உயர்ந்திருக்கின்றது. இனி நாம் என்ன செய்யலாம் என்ற அங்கலாய்ப்பே முடிவாகியிருக்கின்றது.

பசுமைப் புரட்சியின் மறுபக்கம்.

பசுமைப்புரட்சியின் பலன்களை நாம் உணவில் அதன் உற்பத்தியில் பெற்றிருக்கின்றோம் என்ப தைமறுப்பதற்கில்லை. ஆனால் எந்தவொரு தொழில்நுட்பமாயினும் அதனை சரியான முறையில் அணுகத் தவறினால் தவறான வழியில் பிரயோகிக்கும் போது நாம் எதிர்பார்த்த பலன்களுக்கு மேலாக பாரதூரமான விளைவுகளையும் நாம் சந்திக்க வேண்டியேற்படுகின்றது. இது தவிர்க்க முடியாததாக இருப்பினும் பசுமைப்புரட்சியின் விளைவாக திருந்திய கலப்பின பயிரினங்களை பயன்படுத்தியபோது அவை உள்ளீடுகளில் முழுக்க முழுக்க தங்கியிருந்ததாலும் உள்ளீடுகளின் பாவனை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு பெருகியதாலும் எமக்கும் சூழலுக்கும் இதனால் பாதகமான விளைவுகள் ஏற்பட காரணமாயிற்று. இதனால் தற்போது நாம் இதிலிருந்து வெளியேறவும் முடியாமல் அதனை முழுமையாக உள்வாங்கவும் முடியாமல் – எங்களூர் பெரியவர்கள் கூறியதுபோல மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்க வேண்டியாயிற்று.

உணவுற்பத்திக்கான அடித்தளம் நிறைவாகவே பசுமைப் புரட்சியினால் இடப்பட்டது என்பது நிதர்சனமே. ஆனால் அதன்பின்னரான விளைவுகளில் ஒருசில பாரதூரமாக இருப்பதனை உறுதி செய்த போது இவ்வாறான புதிய யுக்திகளையும் அணுகுமுறைகளையும் பலமுறை நீண்டகால பரிசீலிப்பின் பின்னர் உறுதிசெய்து கொள்வதே சாலப்பொருந்தும். எடுத்த மாத்திரத்தில் எமக்கு வேண்டியதை தருகின்றது என்பதற்காக நாம் விரைந்து எந்தவொரு தொழில்நுட்பத்தையும் கடைப்பிடிக்கக் கூடாது. பக்கவிளைவுகள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய வேறு மறைமுகமான விளைவுகள் என்பனவற்றை நாம் கூர்ந்து அவதானித்து ஆராய்ந்து தொழில்நுட்பத்தை சரியானதும் முறையானதுமான வழியில் எமக்கு பயனைத் தரக்கூடியவாறு பயன்படுத்த வேண்டும். எமது தவறான செய்கையால் தொழில்நுட்பத்தை தவறானதாக காட்ட முயல்வது எந்தவொரு விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தொழிற்றுறை அபிவிருத்திக்கும் இடையூறாக இருக்கும்.

வீட்டுத்தோட்டமென்றொரு அட்சயபாத்திரம்

வீட்டுத்தோட்டத்தைப் பற்றி பல வகையில் பலவாறாக நாம் கலந்துரையாடினாலும் அதிலும் இன்னும் பலவிடயங்கள் எமக்கு தெரியாத நிலையிலிருக்கின்றன. வீட்டுத்தோட்டம் எமது உணவுற்பத்திக்கு கணிசமான அளவு பங்களிப்பு செய்யவல்லது என்பதனை நாம் இன்னும் உணர்ந்து கொள்ள முடியவில்லையெனில் இதற்குமேல் உணவின்றி தவிக்கும் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். குறுநில மன்னர்களான சிறிய விவசாயிகளைப் பற்றியும் அவர்களது உற்பத்திப் பொருட்களைப் பற்றியும் மற்றும் உற்பத்தி செய்யவல்ல திறனைப் பற்றியும் இறுதியாக உலக உணவு ஸ்தாபனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட றியோ 1020 எனும் உலகளாவிய மாநாடு நிறையவே அலசி ஆராய்ந்துள்ளது. இதில் சிறுவிவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றி பலமாக ஆராயப்பட்டுள்ளது. வீட்டுத்தோட்டத்தில் உள்ள தாவர வகைகளின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும் போது அங்கே உயிர்ப்பல்வகைமையின் தன்னிறைவுக்கான நிலை கிடைக்க வாய்ப்புள்ளதல்லவா. உயிர்ப்பல்வகைமையை வீட்டுத்தோட்டத்தில் இலகுவாக நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியும். பல்வகைத் தாவரங்களை அதிலும் எமது தேவைக்காக வளர்க்கக் கூடியதை இனங்கண்டு தெரிந்து வளர்க்க முடியும்.

குறிப்பாக வீட்டுத்தோட்டத்தில் நாம் வளர்க்கக்கூடிய மரங்களைப் பற்றி கவனம் செலுத்துவது நல்லது. வீட்டுத்தோட்டத்தில் வளரும் வளர்ந்திருக்கும் இன்னும் நாம் நடுகை செய்யப்போகும் மரங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டினால் அவற்றின் பங்குபற்றியும் இன்னும் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றோம் என்பதையும் கவனத்திற் கொள்ள முடியும். இங்கே மரங்களின் வயது, தண்டின் விட்டம், உயரம், நிலமேற்பகுதியின் விட்டம் அல்லது குறுக்குநீளம், மரத்தின் வகை, கிடைக்கும் நிழலின் விஸ்தீரணம் மற்றும் பல்வகைப் பயன்பாடு என்பன முக்கியமானதரவாகக் கொள்ளலாம். வளர்க்கும் மரங்களின் எண்ணிக்கை, அதில் பழமரங்கள், நிழல் மரங்கள், பல்பயன்தரும் மரங்கள் குறிப்பாக வருவாயைத்தரும் மரங்கள் மற்றும் கால்நடை தீவனமாக பயன்படும் மரங்கள், ஏறிகளுக்கு உதவும் மரங்கள் என்பனவற்றை இணைத்துக் கொள்ளலாம். மரங்களின் எண்ணிக்கையை நிர்ணயஞ்செய்தால் அவற்றுடன் ஏனைய தாவரங்களையும் இணைத்துக்கொள்ள எமக்குத் தேவையான பல்வகைத்தன்மை கிடைத்துவிடும். உணவுற்பத்தி வீட்டுத்தோட்டத்திலிருந்து அதுவும் இயற்கையையொத்த வீட்டுத்தோட்டத்து வேளாண்காட்டிலிருந்து கிடைக்க ஆவனசெய்தல் வேண்டும். வேளாண்காடுகள் என்பன விவசாய நிலத்தில் மரங்களை நடுகை செய்வதன் மூலம் செயற்கையான காட்டினை உருவாக்குதலாகும். காடாக இருந்த இடங்களை கண்டபடி அழித்து நாம் குடியேறி  இப்போது தொடர்ந்திருக்க முடியாதென்ற நிலை வந்த பின் அழித்த இடங்களில் மீண்டும் வேளாண்காட்டு மரங்களை நடுகை செய்ய முனைகின்றோம் அல்லவா. இயற்கையை அழித்து அழகும்பார்த்து இப்போது அந்த இயற்கையை செயற்கையாக உருவாக்க முயற்சிக்கின்றோம். மனிதனின் செய்கையால் இயற்கையும் அவ்வப்போது சீறிச்சினந்து கொள்கின்றது. இவ்வருடம் இயற்கை சாதுவாக ஆனால் வழக்கத்துக்கு மாறாக மழையை பின்தள்ளி வைத்திருக்கின்றது. வழமையாக பெய்ய வேண்டிய இடங்களில் மழை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. சில இடங்களில் விவசாய செய்கையை முழுயாக செய்ய முடியாதளவுக்கு ஏமாற்றியுமிருக்கின்றது. முளைவிட்ட நெற்பயிர்கள் கருகுவதும் விவசாய பெருமக்களை கலங்க வைத்திருக்கின்றது.

இதனால்தான் மிஞ்சியிருக்கின்ற இயற்கையையாவது நாம் பாதுகாக்க முயற்சி செய்வோம். அழிந்தது போக இருப்பதை நாம் மேலும் அழிக்காமல் பேணிப்பாதுகாப்பதுடன் காடுகளையொத்த நிலைமையை வேளாண் காடுகளாக வீட்டுத்தோட்டத்தில் உருவாக்க வேண்டும். வேளாண்காடுகளை வீட்டுத்தோட்டத்தில் நடுகை செய்யும் மரங்களூடாக உருவாக்கலாம். திட்டமிட்ட மரங்களின் நடுகை மூலம் வேளாண்காடுகளை நாம் மெல்லமெல்ல கட்டியெழுப்ப வேண்டும். வீட்டுத்தோட்டங்களில் பல்பயன்தரும் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் நல்லது. குறிப்பாக சீமைக்கிளுவை அல்லது கிளிறிசிடியா ஆகிய பல்பயன்தரும் மரத்திற்கு நடுகை செய்வதில் முன்னுரிமை கொடுப்பது சிறந்தது. கிளிறிசிடியாவின் பயன்பாடுகள் பல. அதனை வீட்டுத்தோட்டத்தில் பரந்த அளவில் நடுகை செய்து பயன்பாட்டை பெருக்கிக்கொள்ளலாம். இன்னும் பழமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். தினமும் ஒரு பழமாவது உண்பதற்காகவாவது பழமரங்களை நடுகை செய்யலாம்.

எமது சூழலை நாமே பாதுகாக்க வேண்டும். சூழலை மாசுபடுத்தும் பொருட்களின் பாவனையைக் குறைத்து சூழலை இயற்கையின் அழகில் வைத்திருக்கும் மரங்களை நடுகை செய்வதும் இயற்கையை பேணிப்பாது காக்கும் செயன்முறைகளுக்கு ஊக்கமும் கொடுக்க வேண்டும். இப்பூமித்தாயின் வனத்தை நாம் பேணிப்பாதுகாக்க வனத்தை வேளாண்மையில் உள்வாங்கி அதனை நாம் வாழும் வீட்டுத்தோட்டத்தினுள் விரும்பி உள்வாங்கிக்கொள்ள வேண்டும். நாம் நினைத்தால் இது முடியும். பூமித்தாயை நாம் வாழும் தேசத்தை வளப்படுத்த இயற்கையை மேம்படுத்த நாம் எமது சூழலைப் பாதுகாக்க வேண்டும். இன்னும் தெரிந்தெடுத்து அரியவகை தாவரங்களை பயன்படுத்த முயற்சிக்கவும் வேண்டும். எமது உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொண்டால் இயற்கையாக கிடைக்கும் தாவரங்களை நாம்  எமது உணவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்புண்டு. இவற்றை நாம் வீட்டுத்தோட்டத்திலும் வளர்த்து எமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Related posts

*

*

Top