யாழில் ‘ஆயுசு 100’ பாரம்பரிய உணவகம்

மறைந்து வரும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் ‘ஆயுசு 100’ விற்பனை நிலையத்தின் செயற்பாடு உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதலாம் குறுக்குத்தெரு, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளர் கே.றுசாங்கன், நேற்றுப் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து கூறுகையில்,
‘ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையில் கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்டு இந்த நிலையம் கொண்டு நடத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு, சுற்றுலா துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குதல், அது சார்ந்த தொழில் கல்வியை அவர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றின் செயற்பாட்டை மேற்கொண்டு வந்த சிகரம் தொழில் பயிற்சி நிறுவனம், தனது அடுத்த படியாக பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் ‘ஆயுசு 100’ உணவகத்தை உருவாக்கியுள்ளது.

இந்த உணவகத்தின் மூலம் யாழ்ப்பாணத்துக்கு உரித்தான மற்றும் அழிவடைந்து வரும் உணவு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றது. பொன்னாங்கன்னி, கறிவேப்பிலை, வல்லாரை, அகத்தி, முருங்கை, தவசி முருங்கை, முடக்கொத்தான், முசுட்டை, தூதுவளை, கொவ்வை, குறிஞ்சா ஆகிய மூலிகை தாவரங்களிலான உற்பத்திகள் மற்றும் புழக்கத்திலிருந்து மறைந்து சென்றுகொண்டிருக்கும் குரக்கன், ஆட்டா, சோளம் ஆகியவையும் பயன்படுத்திய உற்பத்திகளும் செய்யப்படுகின்றது. காலை, மதியம் மற்றும் மாலை என்ற வகையில் உணவுகள் மற்றும் பானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றது.

குண்டுத்தோசை, கீரைப்பிட்டு, குரக்கன் பிட்டு, யாழ்ப்பாணப் பலகராங்கள் (பயிற்றம் உருண்டை, சீனி அரியதரம், பனங்காய் பணியாரம், தட்டு வடை), ஆரோக்கிய பானங்கள் (விளிம்பிக்காய், பனம்பழம், நன்னாரி, வல்லாரை, அறுகம்புல், பாகற்காய் பானங்கள்), இலைக் கஞ்சி, இராசவள்ளி களி, ஒடியல்கூல், சாமைக் கஞ்சி, பால் கஞ்சி, காளான் கறி என்பன பிரத்தியேகமாகச் செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் உணவுகள் யாழ்ப்பாணம் நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விநியோகம் செய்யப்படுகின்றது’ எனக் கூறினார்.

*

*

Top