கறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா?

– டேவிட் பிரவீன்

கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் அலாவுதினீன் அற்புத விளக்கு ஒன்றை ஓவர் நைட்டில் களம் இறக்கியிருக்கிறது ஆளும் இந்திய அரசு. அந்த அற்புத விளக்கு புழக்கத்தில் இருக்கும் ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை முடக்கிவிட்டு அந்த இடத்தில் புதிய ஐந்நூறு மற்றும் இரண்டாயிரம் நோட்டுக்களைக் கொண்டுவர இருக்கிறது.

வழமைப் போல சிலர் (இந்த முறை பலர்) கருப்பு பணம் ஒழிந்து நாடு சுபிட்சமாகிவிடும் என்று அவசர அவசரமாக உணர்ச்சி வசப்பட்டு கிடக்கிறார்கள். மேம்போக்கான உணர்ச்சி வசப்படலும் பிற்பாடு அடப்பாவிகளா இப்படி ஏமாத்தி விட்டார்களே என்று புலம்பலும் நமக்கு என்ன புதிய விசயமா? சரி விசயத்திற்கு வருவோம் இந்த கட்டுரையை இரண்டு பிரிவாக பிரித்துக்கொள்ளலாம். முதலில் HDN (High Denomination Notes)-ன் பாதிப்புக்கள் அடுத்து FDI.

HDN என்பது அதிக மதிப்புக்கொண்ட பணத்தை அச்சடிப்பதை குறிக்கும். உதாரணமாக இனி புழக்கத்தில் வர இருக்கும் இரண்டாயிரம் நோட்டு. பழைய ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மாத்திரமே கருப்பு பணப் பதுக்களுக்கு காரணமாக இருப்பதைப் போலவும் அதை ஒழிக்கவுமே அவைகள் முடக்கப்படுகின்றன என்பதுவுமே இப்போது சொல்லப்பட்டிருக்கும் காரணம். இது உண்மையா என்றால் மிக உண்மை காரணம் ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் HDN -ல் வரக் கூடியது. HDN ல் இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு கருப்பு பண பதுக்களுக்கு பெரிதும் உதவும் என்றால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கருப்பு பண பதுக்களுக்கு மேலும் உதவும்தானே. அது எப்படி என்று இனி பார்ப்போம்.

பொருளாதாரத்தில் முன்னனியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் HDN அச்சடிப்பதை நிறுத்தி விட்டார்கள். சில நாடுகளில் HDN-க்கு எதிரான குரல் வலுத்து வருகிறது. ஏன் HDN  களுக்கு எதிர்ப்பு? இதற்கு சொல்லப்படும் காரணம் HDN பொருளாதார குற்றங்களுக்கு பெரிதும் துணை செய்கிறது என்பதுதான். பொருளாதார குற்றங்கள் என்றால் வரி ஏய்ப்பு, கருப்பு பண பதுக்கள், போதை பொருள் வியாபாரம், ஆதாய கொலைகள், பணம் விளையாடும் அனைத்து விதமான சட்ட விரோத தொழில்கள் மற்றும் பரிமாற்றங்கள், தீவிரவாத செயல்பாடுகள்.

பொருளாதார குற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது சந்தேகமே இல்லாமல் பணம்தான். பணம் என்றால் இங்கே பொருள்படுவது physical paper அதாவது நோட்டு. இந்த பணம் எவ்வளவிற்கு குறைந்த மதிப்பு கொண்டதாக (Small Denomination Notes) இருக்கிறதோ அவ்வளவிற்கு பொருளாதார குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். நன்றாக கவனியுங்கள் பொருளாதார குற்றங்களை முற்றிலும் ஒழித்துவிட முடியாது கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அந்த வகையில் குறைந்த மதிப்பு கொண்ட பண நோட்டுக்கள் பொருளாதார குற்றங்களை பெரிதும் தடுக்க கூடியவைகள். அதேப்போது HDN-கள் பொருளாதார குற்றங்களை அதிகரிக்க கூடியவைகள். HDN-களை பெரும் அளவில் புழக்கத்தில் விட்டால் பொருளாதார குற்றங்கள் அதிகரிப்பதுடன் அவைகளை டிராக் செய்வதும் கடினம்.

அது எப்படி HDN-கள் பொருளாதார குற்றங்களை அதிகரிக்கும் என்றால் HDN-கள் நோட்டுக்களின் பிசிக்கல் அளவை குறைத்துவிடும் (பிசிக்கல் அளவு என்றால் உதாரணமாக ஒரு இலட்சம் ரூபாயை நூறு ரூபாய் நோட்டுக்களாக மட்டுமே வைத்திருந்தால் அதை ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு எடுத்து செல்ல கண்டிப்பாக பல பைகள் தேவை. ஆனால் இரண்டாயிரம் நோட்டுக்களாக இருந்தால் சட்டைப் பாக்கெட்டில் போட்டு எடுத்து போய்விடலாம்). இதன் காரணமாக HDN நோட்டுக்களை (உதாரணமாக இரண்டாயிரம் நோட்டு) பதுக்குவது எளிது. பொருளாதார குற்றங்கள் அனைத்தும் ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு பணம் நேரடியாக டெலிவரி செய்யும் முறைகளிலேயே நடைப்பெறுகிறது.

உதாரணமாக கருப்பு பண முதலைகள் இருவர், தங்களிடம் இருக்கும் பணத்தை பரிமாறிக்கொள்ள அந்த பணத்தை கையில் (hot cash) எடுத்து சென்றுதான் (சூட்கேஸ் அல்லது பைகள்) கைமாற்றிக்கொள்வார்கள். இதன் காரணமாக இந்த பணத்தை குறித்த எத்தகைய ரிகார்டும் இருக்காது. அது தேவையும் இல்லை. பணத்திற்கான ரிகார்ட் இல்லை என்றால் அரசாங்கத்தால் அந்த பணத்தை டிராக் செய்ய முடியாது. இப்படி (hot cast)-ஆக பணத்தை கையில் எடுத்து செல்ல வேண்டுமானால் எவ்வளவிற்கு நோட்டு கட்டுக்கள் குறைவாக இருக்கிறதோ அவ்வளவிற்கு கருப்பு பண பதுக்கள்காரர்களுக்கு வசதி. அதாவது அதிக மதிப்பு கொண்ட நோட்டுக்கள் எவ்வளவிற்கு இருக்கிறதோ அவ்வளவிற்கு அவர்களுக்கு வசதி. காரணம் அதிக மதிப்பு கொண்ட நோட்டுக்கள் பெரிய பெரிய தொகைகளையும் குறைந்த அளவு கொண்ட நோட்டுக்களில் அடக்கி விடுவதால். அவைகளை(hot cast) களாக நிர்வகிப்பது மிக எளிது.

ஆக HDN-கள் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் வரப் பிராசதம் போன்றது. இப்போது சொல்லுங்கள் இப்போது புழக்கத்தில் வர இருக்கும் இரண்டாயிரம் நோட்டு கருப்பு பணத்தை ஓழிக்குமா அல்லது அதை மேலும் மேலும் அதிகப்படுத்துமா என்று.

அடுத்த பாகத்திலும் தொடரும்…

Related posts

*

*

Top