தமிழர்களை விரட்ட சிவசேனா வந்துள்ளது

Barack Obama

- தயாளன்

‘மகாராஷ்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற கோஷத்துடன் மதராசிகளை (தென்னகத்தவர்களை) குறிப்பாகத் தமிழர்களைத் தமது தாயகத்துக்கு மும்பையில் இருந்து விரட்டியனுப்பிய சிவசேனாவை எமது மண்ணில் அறிமுகப்படுத்தியுள்ளனர் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் மறவன்புலவு சச்சிதானந்தமும். கேரள கஞ்சா மற்றும் வயாகரா மாத்திரைகள் வரிசையில் தமிழரை நாசமாக்கவென்றே கொண்டுவரப்பட்டது தான் சிவசேனா. தமிழரின் போராட்டம் தோற்றிருக்கலாம் ஆனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரத்தம் சிந்தியதால் வலுவடைந்த தமிழ்த் தேசியம் என்ற அரசியல் சக்தியை வெடி வைத்து தகர்க்கும் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் கருவிகளாக இவர்கள் இருவரும் செயற்படுகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் அதனை ஆதரிப்பவர்கள் என்று அர்த்தமில்லை. தமிழரின் ஒன்று திரண்ட சக்தி சிதறிவிடக் கூடாதே என்ற எண்ணத்துடன் தான் தமது வாக்கைச் செலுத்தினர். இந்திய அரசியலும் இலங்கைத் தமிழர் அரசியலும் நேரெதிரானவை. இந்திய அரசியலில் எந்தெந்தக் குப்பைத் தனங்களெல்லாம் உள்ளனவோ அதையெல்லாம் எமது மண்ணில் இறக்குமதி செய்ய முயல்கின்றனர் யோகேஸ்வரனும் மறவன்புலவு சச்சிதானந்தமும்.

இந்தியாவில் நேருவுக்குப் பின் இந்திரா அவருக்குப் பின் ராஜீவ் அதற்குப் பின் ராகுல் என தலைமுறைத் தலைமைகளை கட்சிகள் அறிமுகப்படுத்தும். அதேபோல் கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் கனிமொழி என தமிழகத்திலும் நிலைமை தோன்றியது. ஜல்முகாஷ்மீர் மாநிலத்திலும் அப்துல்லா தலைமுறை மூன்று. உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ். அகிலேஷ் என்றும் கர்நாடகத்தில் தேவகவுடா. குமாரசாமி என்றும் நிலைமை தோன்றியது. கண்ணை மூடிக் கொண்டு பரம்பரை விசுவாசத்தில் மக்கள் வாக்களிப்பர். ஆனால் ஈழத்தமிழரின் எண்ணவோட்டம் 2009 வரை வேறுமாதிரியே இருந்தது.

இலங்கையில் தமிழரின் தலைமைத்துவம் சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் என பிரவுத்துவக் குடும்பங்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் இவர்களது வாரிசுகளை (குறிப்பாக மகாதேவாவை) தமது தலைமையாக தமிழர் தெரிவு செய்யவில்லை. அடுத்த தலைமையாக ஜீ.ஜீ.பொன்னம்பலத்தையே தேர்ந்தெடுத்தனர். ஜீ.ஜீக்குப் பின்னர் அவரது வாரிசு குமார் பொன்னம்பலத்தை தமது தலைமையாக ஏற்கவில்லை. மலேசியாவில் பிறந்த கிறிஸ்தவரான தந்தை செல்வாவையே ஏற்றார். செல்வாவுக்குப் பின் அவரது மகன் சந்திரகாசனை ஏற்கவில்லை. அமிர்தலிங்கத்தையே ஏற்றனர். ஆயுத போராட்டம் தலைதூக்கிய பின்னர் 36 குழுக்களில் ஒன்றான தமிழீழ தேசிய இராணுவத்தை வழி நடத்திய அமிரின் மகன் பகீரதனையோ அல்லது தன்னை ஒரு காலத்தில் தீவிரவாதியாக இனங்காட்டிக் கொண்ட காண்டீபனையோ ஏற்கவில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனையே ஏற்றனர். யுத்தத்தின் பின்னர் முதன்முதலாக கிழக்கு மாகாணத்திடம் தலைமை கைமாறியுள்ளது. அடுத்த தலைமை நிச்சயம் சம்பந்தன் ஜயாவின் பரம்பரையல்ல. ஒருவர் பிறப்பால் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதையோ பிரதேசம் என்பனவற்றையோ எமது மக்கள் கருத்தில் கொள்வதில்லை.

தமிழர் அரசியலில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் செலுத்திய செல்வாக்கு இரகசியமானதல்ல. இந்துக்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளும் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். எப்போதுமே தனது மனதுக்குச் சரியெனப்பட்டதை துணிந்து சொல்பவர் அவர். இத்தாலிக்குள் பத்திக்கான் எப்படித் தனிநாடாகத் திகழ்கின்றதோ அப்படியே போர்க்காலத்தில் மடுப்பிரதேசம் தனித்துவமாகத் திகழ்ந்தது. இதற்கு இராயப்பு ஜோசப் ஆண்டகையே காரணம் என்பது மட்டுமல்ல அவரது கருத்தை நிராகரிக்க முடியாதவர்களாக இரண்டு தரப்பும் இருந்தது என்பதும் உண்மை. தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இராயப்பு ஜோசப் ஆண்டகை செலுத்தும் அக்கறையில் ஒரு வீதம் கூட சிவசேனா இறக்குமதியாளர்கள் காட்டவில்லை என்பது உண்மை.

இந்தக் குழப்ப நிலைகளுக்கு தமிழரசுக் கட்சியின் செயலர் கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கமும் ஒரு வகையில் காரணம். இறுதி யுத்தம் முடியும் வரை ரணிலின் செல்வாக்குக்குட்பட்டவராக இருந்த யோகேஸ்வரனை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அறிமுகப்படுத்தியவர் அவர் தான். ஏற்கனவே இரு தடவை எம்.பியாக இருந்த துரைராஜசிங்கம் 2010 தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இந்நிலை உருவாகியிருக்காது. தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இருந்த யோகேஸ்வரன் எப்படி நடந்து கொண்டார் என்பது துரைராஜசிங்கம் அறியாததல்ல. முன்னரே தமிழரசுக்கட்சிக் காரனாகியவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவரிடம் விளக்கம் கேட்பது போல எச்சரிக்கைக் கடிதம் அனுப்பத் தெரிகிறது துரைராஜசிங்கத்துக்கு. பேராசிரியருக்கு அனுப்பியது போல் சிவசேனாவா தமிழரசுக்கட்சியா இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யவும். தமிழரசுக் கட்சிக்குள் இருப்பதாயின் ‘இன ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய அமைப்புகளுடன் உள்ள தொடர்பைத் துண்டிக்கவும்’ என யோகேஸ்வரனுக்கு கடிதம் எழுதத் தெரியாதா. இந்தச் சட்டத்தரணிக்கு.

கட்சியின் புதிய தலைவராக மாவையும் செயலராக இவரும் தெரிவு செய்யப்பட்ட போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் இவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் இந்து மற்றும் கிறிஸ்தவ மத குருக்கள் மட்டுமே ஆசி கூறினர். முஸ்லிம் மதத் தலைவர்கள் எவரும் இந் நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை. தந்தை செல்வாவின் கட்சி இது என்பதை மறந்து முஸ்லிம் மக்களை புறக்கணித்தனர். தற்போது மத நல்லிணக்கத்துக்கு எதிரான சிவசேனாவின் செயற்பாட்டுக்கு யோகேஸ்வரனை அனுமதிப்பதன் மூலம் தமிழ்த் தேசியத்தை உடைக்கும் சக்திகளின் கை மேலோங்கவுள்ளது. வடக்கு பிரதி அவைத் தெரிவில் காட்டிய அவசரத்தை இதில் ஏன் காட்டவில்லை. எழுக தமிழ் நிகழ்வின் விளைவாகவே அநுராதபுரத்தில் இந்துக் கோவில் தாக்கப்பட்டது என விளக்கமளிக்கத் தெரிகிறது இவருக்கு. இதனால் இவர் தமிழ் இளைஞர் பேரவையில் இணைந்தார் என்பது வரலாற்றை மறக்காதவர்களுக்குத் தெரியும். மறதி கூட இவருக்கு வசதியாக சில விடயங்களில் மட்டுமே ஏற்படுகிறது. அடுத்தவர் மறவன்புலவு சச்சிதானந்தம். இலங்கைக்கு மருந்து அனுப்பச் சதி செய்தார் என்று கருணாநிதி தலைமையிலான அரசு இவர் மீது வழக்குப் போட்டது. அதன் பின் இந்தியாவில் மத்திய அரசு எதைச் சிந்திக்க முனைகிறதோ அதை இலங்கையில் செயலாக்க வேண்டுமெனத் துடிப்பவர் இவர். இங்கே உள்ள நிலைமை உணர்வுகள் இவருக்குத் தெரியாது.

காங்கிரஸ் காலத்தில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட அனுமின் உலையால் ஈழத்தமிழருக்குப் பாதிப்பு இல்லை என பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார். தற்போது மதவெறியால் கட்டியமைக்கப்பட்ட கட்சியின் ஆட்சிக் காலத்தில் சிவசேனையுடன் வந்துள்ளார். இவரது வயதுக்கு பம்பாயில் இருந்து தமிழர்கள் சிவசேனாவினால் அடித்து விரட்டப்பட்ட வரலாறு தெரியாமல் இருக்குமா? வரதராஜ முதலியார் போன்றோர் தலையெடுத்த பின்னரே அங்கு தமிழருக்கெதிரான வன்முறையை சிவசேனாவால் மேற்கொள்ள முடியாமல் போனது என்பதை அறியாதவரா இவர். யோகேஸ்வரனுக்கு எதிராக துரைராஜசிங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என ஒவ்வொரு தமிழரும் காத்திருக்கின்றனர். அரசியற் கைதிகளின் விடயத்தில் சம்பந்தன் ஜயா திறப்பு என்னிடம் இல்லை என்று கையை விரித்தார். அதேபோல யோகேஸ்வரனுக்கு கடிதம் எழுத பேனா இல்லை என்று இவர் கைவிரிக்கக் கூடாது. ஏனெனில் மாகாண சபைக்கோ பாராளுமன்றத்துக்கோ செல்வதாயின் அதற்கான திறப்பு தமிழ் வாக்காளரிடமே இருக்கிறது.

Related posts

*

*

Top