பயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம்

– பேராசிரியா் கு.மிகுந்தன்

த்தாவர சங்கமத்தில் பயன்பாடதிகமற்ற தாவரங்கள் வரிசையில் முருங்கையும்  ஒன்றாகின்றது. எங்களூர்ப் பெரியவர் பகன்றதுபோல’ எங்கடை சனத்துக்கு நல்லதை தின்னத்தெரியலை’ என்பதற்குள் பலநூறு அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. எமக்குக் கிடைத்த வரங்களுள் முதன்மையானது எங்களூர் பல்வகைத்தன்மையை தீர்மானிக்கின்ற தாவரங்கள் என்பதனை இத்தருணத்தில் ஒருதரம் மீட்டுப்பார்க்க முடிகின்றது. முருங்கை என்னும் போது ஒரு வகையில் இளக்காரமாக கவனங்கொண்டதை அவதானிக்க முடிகின்றது. எங்களூர் பொருளென்றால் இளக்காரமாகி விட வெளிநாட்டு வண்ணக்கலர் பெட்டியில் அதனை பவுடராக்கி பலதையும் கலந்து தந்தால் அதிக விலையும் கொடுத்து அருமையென சொல்லும் கூட்டமாக நாம் இருக்கும் வரையில்… எம்மவர் பொருளுக்கு மவுசு ஏது. நாம் தான் அனைத்துக்கும் காரணம்.

Prof.G.Mikunthanபயனில்லை என்று எதுவுமில்லை ஒவ்வொன்றுக்குமான பயன்பாட்டை கண்டுபிடிக்க முடியாத சோம்பேறித்தனம் இது. கழிவையும் பொருளாக்கும் விந்தையை கண்டுபிடித்தால் ஆய்ந்தெடுத்தால் கல்லும் கனியாகும் கழிவும் பவுணாகும். இது முழுக்க முழுக்க எமக்கான முயற்சியின் போதாமைதான் காரணமேயொழிய வேறெதுவுமில்லை. விலைகூடிய பொருளானாலும் அனைவரையும் கவரத்தக்கதாக மதிப்புள்ளதாக இருக்கும் வரைக்கும் முத்துக்கும் மதிப்பு அதுவரைக்கும் அதுவெறும் கல்லுதான். தொழில் இல்லையென்று அவலப்படுவோருக்கு அவர்மேல் நம்பிக்கையிருந்தால் அவர் தன்னை திறமைகளுக்குள்  உள்வாங்கினால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

தாவர சங்கமத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தனித்துவமான பணி உண்டு. அனைத்துக்குமே குறிப்பிட்ட பணி கொடுக்கப் பட்டிருக்கின்றது. அதனை நாம் இனங்கண்டு கொண்டால் அவற்றை சுலபமாக அந்த காரியத்திற்கே பயன்படுத்தி கொள்ள முடியும். பயன்பாடு தெரியாதிருக்கும் வரை எமக்கு எதுவுமே பயனற்றதுதான். இந்த மனப்பாங்கை நாம் முடிந்தவரையில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய தனித்துவத்தை மரியாதையை நாம் கொடுத்து விட்டால் மாற்றம் எமக்குள்ளே முதலில் ஏற்படும் பின்னர் அது உந்துசக்தியாகி மற்றையவரையும் மாற்றிவிடும். எதிலும் எமது பார்வையின் புரிதல் தான் முக்கியமானது. எந்த கோணத்தில் பார்க்கின்றோம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. எதனையும் தேவையற்றது என எண்ணும் தன்மையிலிருந்து நாம் மாறவேண்டும். தேவையற்றதென தெரிகின்ற பொருளை வாங்கி குவிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

தாவரங்கள் அனைத்திற்குமே சிறப்புக்களுண்டு. அவற்றை நாம் அலசி ஆராய்ந்து பார்த்தால் இத்தாவர சங்கமத்தில் அவற்றிற்குரிதான இடமொன்று இருந்து கொண்டேயிருக்கும். அதனை நாம் இன்னொன்றால் மாற்றியமைத்து விடமுடியாது. ஆனால் அவற்றுக்கிணையாக அவற்றின் பயன்பாட்டை நாம் சரிவர புரிந்து கொண்டால் அதனை நாம் மாற்றியமைத்துக் கொள்ளலாம். அதற்கும் எமது புரிதல் இடங்கொடுக்க வேண்டும். இத்தாவர ராஜ்ஜியத்தில் பல தாவரங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை. அதற்கு காரணம் அவற்றின் மகத்துவம் எமக்கு தெரியாதிருப்பதுதான். எமக்கென இயற்கை அள்ளித்தந்த தாவரங்கள் பல இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து கொண்டால் குறிப்பான அவற்றினது வலிமையை வல்லமையை நாம் அறிந்து கொண்டால் நாம் உடனேயே பயன்படுத்தத் தொங்கிவிடுவோம். பல ஊட்டச்சத்துக்களை இலகுவாக பெறக்கூடிய விற்றமின்களை கொண்;ட தாவரங்களை நாம் அலட்சியமாக தள்ளிவைக்கக்கூடாது. தாவரங்கள் ஒவ்வொன்றிற்குமுள்ள மகத்துவத்தை அறிந்து எமது அன்றாட வாழ்வில் உணவில் அதனை பயன்படுத்த தலைப்பட்டால் எமது சுக ஆரோக்கியத்தை நாம் பேணிக்கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்ட தாவரங்களுள் குறிப்பிடத்தக்கது முருங்கை. இது கல்யாண முருங்கை மற்றும் கறி முருங்கை என இருவகைப்படும். கல்யாண முருங்கை சிறந்த கால்நடைத்தீவனம் அத்துடன் இந்துக்களின் திருமண வைபவத்தில் இந்திரனை உருவகித்து கல்யாண முருங்கையை கன்னிக்காலாக பாவித்து திருமணம் செய்து வைப்பர். இப்போது கன்னிக்காலே பிளாஸ்ரிக்கினாலான முருங்கையாகி விட்டது. இது நடப்பது கனடாவிலல்ல. யாழ்ப்பாணத்தில். ஒருவகை பூச்சியினால் பாதிக்கப்பட கல்யாண முருங்கை இலைகள் நாளடைவில் மரத்தையே இல்லாதாக்கி விட்டன. ஆனாலும் சில இடங்களில் தப்பிப்பிழைத்திருக்கின்ற இந்தமரம் தற்போது பல வீடுகளில் கிளைவிட்டு வளருவதை காணலாம்.

மற்றையது கறி முருங்கை. இதனது காயினை பொதுவாக உணவில் கறிக்கான இடுபொருளாக பயன்படுத்துவர். ஆனாலும் இதனது இலையினை கண்டுகொள்வதேயில்லை. கறிமுருங்கையின் இலையில் சிறந்த சத்துக்கள் காணப்படுகின்றன. கிழமைக்கு ஒரு இலைக்கறிவகை என்ற வகையில் முருங்கையிலையினை ஒரு நாளைக்காவது பயன்படுத்தலாம். கறிமுருங்கையிலையில் இரும்புச்சத்து, கல்சியம் இன்னும் பல விற்றமின்கள் அதிகளவில் காணப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த இலைக்கறி வகையாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது. தினமும் உண்ணும் இலைக்கறி வகைகளுக்குள் முருங்கையினை தெரிந்தெடுத்துக் கொண்டால் அதனது பயன்பாட்டை நாம் முழுமையாக பெற்றுக்கொள்ளலாம். முருங்கை மரத்தின் எங்களூர் இனம் தற்போது அழிவடைந்து வருகின்றது.

இந்தியாவிலிருந்து வருகைதந்த ஓராண்டு கறிமுருங்கை சிறப்பாக இங்கே பயிர்செய்யப்படுவதனாலும் அதிலிருந்து பெறப்படும் காய்கள் பசைத்தன்மை அதிகமாக காணப்படுவதனாலும் எங்களூர் இனத்தை தேட வேண்டியதாகி விட்டது. எங்களூர் இனத்தின் உற்பத்தி கணிசமானதாக இருப்பினும் அதனது பூச்சியெதிர்ப்பு சக்தி ஒரு காலத்தில் முருங்கையில் வரக்கூடிய பூச்சி பிரச்சனைக்கு எதிர்ப்புள்ள தீர்வாக அமையும் என்பதனால் அதனை நடவு செய்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முருங்கையை கவனிப்பாரற்ற தாவரமாக கவனத்திற்கொள்ளாது அதற்குரிய அந்தஸ்தைக் கொடுத்துத்தான் பாருங்களேன். எம்மை சுகதேகியாக வைத்திருக்கும் இவ்வகை தாவரங்களை நாம் பயன்படுத்துவதோடு பாதுகாக்கவும் வேண்டும்.

*

*

Top