கறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா? பாகம் – 2

Barack Obama

- டேவிட் பிரவீன்

கறுப்பு பண ஒழிப்பு மற்றும் கள்ள நோட்டு ஒழிப்பு இவைகளைத் தாண்டி அனைத்து மக்களையும் வங்கி அமைப்பிற்குள் கொண்டு வருவதின் சாதக பாதகங்களைக் குறித்து பார்க்கலாம். இந்த பதிவிற்கு உதாரணமாக இருப்பது அமெரிக்காவின் பொருளாதார ரிஷசன் (Economic Recession). ஒரு பெரும் பொருளாதார வீக்க வெடிப்பிற்கு (Economic bubble burst) பிறகே அமெரிக்காவின் பொருளாதாரம் சமீபத்தில் படுபாதாளத்திற்கு போனது. பொருளாதார வீக்கம் என்பது சந்தையில் பொருட்களின் விலை உயர்வை அடிப்படையாக கொண்டது. சந்தையில் பொருட்களின் விலை அதிகமாகிக்கொண்டே போவதை பொருளாதார வீக்கம் என்பார்கள். சந்தையில் பொருட்களின் விலை உயர வேண்டுமானால் பணப் புழக்கம் அதிகமாக இருக்க வேண்டும். பணப் புழக்கம் எப்படி அதிகமாகும்? மக்களின் சேமிப்பில் இருக்கும் பணம் அனைத்தும் சந்தைக்கு வருமானால், சந்தையில் பணத்தின் புழக்கம் அதிகமாகும். சந்தையில் பணப் புழக்கம் அதிகமாகுமானால் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கும். பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்குமானால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிடும்.

இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகு உலகில் பல நாடுகள் பொருளாதார வீக்க வெடிப்பிற்கு ஆளாகி பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோதும் இந்தியா மாத்திரம் இப்படியான பொருளாதார வீக்க வெடிப்பிற்கு உள்ளாகாமல் தன்னுடைய பொருளாதாரத்தை நிலைப்படுத்தியே வந்திருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? அமெரிக்காப் போன்ற வல்லரசு நாடுகளே பல பொருளாதார வீக்க வெடிப்பிற்கு உள்ளாகி பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கும்போது, ஏழைகள் அதிகம் கொண்ட நாடு என்றும், மூன்றாம் உலக நாடுகளின் பட்டியலில் இருக்கும் நாடு என்றும் கருதப்படும் இந்தியா மாத்திரம் எப்படி பொருளாதார வீழ்ச்சியை சந்திக்காமல் நிலையாக நடைப்போடுகிறது என்றால் அது இந்திய மக்களின் சேமிப்பு பழக்கத்திலிருக்கிறது. சேமிப்பு பழக்கம் என்பது இன்றையக் காலங்களில் இரண்டு விதங்களில் நடைப்பெறுகிறது. ஒன்று வங்கியில் பணத்தை சேமிப்பது (இதை பேங்கிங் சிஸ்டம் எக்கானமி என்பார்கள்) மற்றொன்று மக்கள் அவர்களின் வீடுகளிலேயே பணத்தை சேமிப்பது.

ஒரு நாட்டின் அனைத்து மக்களும் வங்கிகளில் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பார்களேயானால் வங்கிகளில் பணப் புழக்கம் அதிகமாகிவிடும். அதாகப்பட்டது வங்கிகளில் பணம் அதிக அளவில் இருக்கும். வங்கிகள் அடிப்படையில் சேமிப்பதோடு சேர்த்து லோன் கொடுப்பதின் மூலம் சந்தையில் முதலீடும் செய்யக் கூடியது. அப்படி இருக்கையில் வங்கிகள் தங்களிடம் இருக்கும் அளவிற்கு அதிகமான பணத்தை லோன் கடன்களாக வெளியே கொடுக்க தொடங்கும். வங்கிகள் கொடுக்கும் லோன் கடன் பணம் சந்தையில் புழங்க தொடங்கும். அதாவது சந்தையில் பணப் புழக்கம் அதிகமாக தொடங்கும். சந்தையில் பணப் புழக்கம் அதிகமானால் என்ன நடக்கும் என்பதை மேலே பொருளாதார வீக்க வெடிப்பு விளக்கத்திலேயே பார்த்துவிட்டோம். ஆக பேங்கிங் சிஸ்டம் என்பது மறைமுகமாக பொருளாதார வீக்க வெடிப்பிற்கு வழி வகுக்க கூடியவைகள். இதுதான் அமெரிக்காவிலும் நடைப்பெற்றது. அதாவது அங்கு அனைத்து குடிமக்களும் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வங்கிகளில் போட்டு வைத்து செலவு செய்வது வழக்கம்.

இதன் காரணமாக அமெரிக்க வங்கிகளில் பணத்தின் புழக்கம் அதிகமாகி அதன் வழி சந்தையில் பணத்தின் புழக்கம் அதிகமாகி அதன் வழி பொருட்களின் விலை அதிகமாகி இறுதியில் அதன் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. இது பேங்கிங் சிஸ்டத்தின் பாதக அம்சம். அது எப்படி பொருட்களின் விலை அதிகமானால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். வங்கிகளில் அதிக பணம் புழக்கத்தில் இருப்பதால் அமெரிக்க வங்கிகள் இஷ்டத்திற்கு லோன்கள் கொடுக்க தொடங்கின. அனைத்திற்கும் லோன்கள்தான். வீடு, கார், சொத்து, தனி நபர் கடன் இப்படி இஷ்டத்திற்கு லோன்களை அமெரிக்க வங்கிகள் மக்களிடம் தண்ணீராக வாறி இறைத்தன.

நன்றாக கவனியுங்கள் அமெரிக்க வங்கிகள் தொட்டதெற்கெல்லாம் லோன்கள் என்று வாறி இறைத்தவைகள் மக்களின் பணம். அதாவது மக்கள் உழைத்து சம்பாதித்து ஈட்டிய பணத்தை தங்களின் கைகளில் சேர்த்து வைத்துக்கொள்ளாமல் (அதாவது புளி, உப்பு, அரிசி, சக்கரை என்று வீடுகளில் சேர்த்து வைக்காமல்) வங்களில் போட்டு பிளாஸ்டிக் மணி மூலம் (டெபிட் மற்றும் கிரேடிட் கார்ட்) செலவு செய்ய வைத்திருந்த பணம். வங்கிகள் லோன் கொடுக்கிறது என்றால் அந்த லோனிற்கு கண்டிப்பாக இன்டிரஸ்ட் திரும்ப கேட்கும்தானே. அப்படித்தான் அமெரிக்க வங்கிகளும் தண்ணீராக வாறி இறைத்த லோன் பணத்திற்கு திரும்ப வட்டியும் கேட்கத் தொடங்கின. இதை ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம். ஜான் என்கிற அமெரிக்கர் அந்த நாட்டின் வங்கியில் இஷ்டத்திற்கு லோன்கள் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதாவது கார் லோன், வீட்டு லோன், பெர்சனல் லோன் இப்படி. அவர் கண்டிப்பாக இத்தனை லோன்களுக்கும் திருப்பி மாத மாதம் வட்டி கட்டியாக வேண்டும் மேலும் அசல் பணத்தையும் திருப்பி செலுத்தியாக வேண்டும். சரிதானே. இங்கே மீண்டும் நன்றாக ஒரு விசயத்தை கவனிக்கவேண்டும். ஜான் வாங்கியிருக்கும் அனைத்து லோன் பணமும் அவரைப் போல சக பிரஜைகள் அவர்களின் சம்பள மற்றும் சேமிப்பு பணத்தை வங்கிகளில் போட்டு வைத்திருந்த பணம்தான்.

ஜான் வாங்கிய லோனுக்கு திருப்பி வட்டியை கட்டிவிட்டுப்போகிறார் என்று நாம் நினைக்கலாம் ஆனால் நடந்தது என்னவென்றால் ஜான் வட்டி கட்ட வேண்டிய தொகை அதிகமான அளவிற்கு அவருக்கு சம்பள வருமானம் இல்லை. அதாவது ஜான் வாங்கிய லோனின் வட்டி தொகை மாதத்திற்கு மாதம் அதிகமாகி கொண்டே போக ஜானின் சம்பளம் மாத்திரம் உயராமலேயே பல ஆண்டுகள் அப்படியே இருந்தது. அப்படி இருந்தால் என்னவாகும். ஜானால் வாங்கிய லோன்களுக்கு வட்டி கட்ட முடியவில்லை. வட்டியே கட்ட முடியாது ஜான் எங்கிருந்து அசலை திருப்பி வங்கிக்கு தருவது. ஜான் மஞ்சள் கடுதாசி கொடுத்து விடுகிறார். அதாவது ஜானுக்கு கொடுக்கப்பட்ட லோன்கள் திரும்ப வராத காரணத்தால் அவருக்கு லோன்கள் கொடுத்த வங்கி அவருக்கு கொடுத்த லோன்களின் தொகையை வாரா கடனாக அறிவித்து விடுகிறது. அதாவது ஜானைப் போன்ற மற்ற பிரஜைகளின் சேமிப்பு பணத்தின் ஒரு சதவிகிதமும் இந்த வாராக் கடனில் போய்விட்டது. இப்படி ஒரு ஜான் இல்லை பலபேர் வாங்கிய லோன்களுக்கு வட்டியும் கட்ட முடியாமல் அசலையும் திரும்ப தர முடியாமல் வங்கிகளுக்கு மஞ்ச கடுதாசி கொடுத்துவிட வங்கிகள் வாராக் கடனால் திவாலாகி விட்டன. அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்து விட்டது.

அடுத்த பாகத்திலும் தொடரும்…

Related posts

*

*

Top