பிக்குக்களின் அரசியல்

Barack Obama

- நிலாந்தன்

ட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. பொலிசாரின் முன்னிலையில் மேற்படி விகாராதிபதி தமிழ் அரச ஊழியரை இனரீதியில் கீழ்மைப்படுத்தும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார்.

Nilanthanஅங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முற்படவில்லை. மாறாக அவரை சமாதானப்படுத்துவதற்கு முற்படுகிறார்கள். ஒரு பிக்கு இனங்களுக்கிடையிலான பகையை தூண்டும் வார்த்தைகளைப் பகிரங்கமாகப் பயன்படுத்தி ஒரு அரச ஊழியரைக் கீழ்மைப்படுத்தும் போது சட்டம் ஒழுக்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் அதைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ முயலவில்லை. அவர்கள் அந்த பிக்குவுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவே காட்சியளிக்கிறார்கள். பிக்கு அவர்களை விட உயர்ந்தவராகவும், அவர்களுடைய அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவராகவும்; காட்சியளிக்கிறார்.

அந்த பிக்கு இப்படி சர்ச்சைக்குள்ளாவது இதுதான் முதற்தடவையல்ல. இணையத்தில் பரவி வரும் மற்றொரு வீடியோவில் அவர் ஒரு பெண் பொலிசாரை துரத்தித் துரத்தி அடிக்க முற்படுகிறார். அங்கேயும் பொலிஸ் உயரதிகாரிகள் அவரைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ முற்படவில்லை. மாறாக அவரை அமைதிப்படுத்தவே முயல்கிறார்கள்.

மேற்படி பிக்குவின் நடவடிக்கைகள் இனரீதியிலானவை என்றும், நல்லாட்சியின் கீழும் இனவாதம் அதன் கூர் கெடாமல் அப்படியே இருப்பதை அது காட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரச ஊழியர்களை ஒரு விகாராதிபதி இனரீதியாக அவமானப்படுத்துவது என்பது முழுக்க முழுக்க அரசியல் பரிமாணத்தைக் கொண்ட ஒரு விவகாரம் தான் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

ஆனால் வேறொரு தரப்பினர் அப்படிப் பார்க்கக் கூடாது என்று கூறுகிறார்கள். அந்த பிக்கு ஒரு வில்லங்கமான ஆள்தான் என்றும் அவர் ஏற்கெனவே சர்ச்சைக்குரிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டும் அவர்கள், அவர் பொலிசாரை மட்டுமல்ல நாட்டின் தலைவரான ஜனாதிபதியையும் மதிக்காத ஒருவர்தான் என்று கூறுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு அவருடைய குறுகிய கால அழைப்பை ஏற்று ஜனாதிபதி வருகை தரவில்லை என்பதற்காக ஜனாதிபதியால் திரை நீக்கம் செய்யப்படவிருந்த நினைவுப்படிகத்தை ஒரு சுத்தியலால் உடைத்தவர் இந்த பிக்கு என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள், அதோடு மின்சார சபை ஊழியரைத் தாக்கியது, காணி தொடர்பான செயலமர்வைக் குழப்பியது, நிருபர்களுக்குக் கல் எறிந்தது போன்ற குற்றச் சாட்டுக்களும் அவர்மீது உண்டு.

எனவே மேற்படி பிக்குவின் நடவடிக்கைகளை இனரீதியாகப் பொதுமைப் படுத்திப் பார்க்கக் கூடாது என்றும் அவர் ஒருவருக்காக எல்லாப் பிக்குகளும் அவரைப் போன்றவர்கள்தான் என்று கூறிவிட முடியாது என்றும் வாதிடுபவர்கள் அண்மையில் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி நடந்த ஒரு போராட்டத்தில் ஒரு பிக்கு சுலோக அட்டையுடன் காணப்பட்டதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

உண்மைதான். அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஒரு பிக்கு போராட்டத்தில் பங்குபற்றியது ஒரு நல்ல முன்னுதாரணம்தான். அவரைப் போலவும் சோபித தேரரைப் போலவும் சில பல பிக்குகள் தென்னிலங்கையில் இருக்கிறார்கள்;தான். ஆனால் அவர்கள் மிகமிகச் சிறுபான்மையினரே. ஒரு விதத்தில் அவர்களை புறநடை என்றே அழைக்க வேண்டும். அவர்கள் பெரும்போக்கிற்கு எதிரானவர்கள். ஆனால் பலமாகவும் நிறுவனமயப்பட்டும் கருத்துருவாக்கும் சக்தியோடும் காணப்படும் பல தசாப்தகாலப் பெரும்போக்கொன்றின் மூர்க்க முனைகள்தான் மேற்படி பிக்குவும் பொதுபலசேனவும்.

மட்டக்களப்பு பிக்குவும், ஞானசாரதேரரும் தான் பிரச்சினை என்று கூறுபவர்கள். பிரச்சினையின் அரசியல் சமூக நிறுவனப்பரிமாணங்களை பார்க்கத் தவறுகிறார்கள் அல்லது பார்க்கத் தயாரில்லை. ஒரு மட்டக்களப்பு பிக்குவும் ஒரு ஞான சார தேரரும் மட்டும்தானா பிரச்சினை?

இல்லை. அவர்கள் நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு சிந்தனையின் இரு வேறு பிரதிபலிப்புக்கள்தான். மட்டக்களப்புச் சம்பவம் தொடர்பில் முக நூலில் இடம்பெற்று வரும் உரையாடல்களின் போது வேறு ஒரு பிக்குவின் பெயரும் அடிபட்டது. அவர் நயினாதீவில் இருக்கிறார்.சின்ன சாது என்று அழைக்கப்படுகிறார். மிகவும் வளமாக இருக்கிறார்.

நயினாதீவில் உள்ள மிகவும் சக்தியுள்ள நபர் அவர் என்று கூறப்படுகிறது. நயினாதீவுக்குப் போகும் குறிகட்டுவான் துறைமுகத்தின் மீதும் அவருடைய அதிகாரம் செல்லுபடியாகிறது என்றும் கூறப்படுகிறது. நயினாதீவுக்குப் போகும் படகுகளில் ஒன்று அவருடைய கட்டுப்பாட்டிலிருப்பதாகவும் அது மிகவும் வசதி கூடிய ஒரு படகு என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனைய பயணிகளுக்குரிய படகுகளுடன் ஒப்பிடுகையில் அந்தப்படகு ஒரு சொகுசுப் படகுபோல காட்சியளிக்கிறது என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. அந்த பிக்கு ஒரு முறை தனது படகுக்கு துறைமுகத்தில் இடம் தரவில்லை என்பதற்காக ஒரு பயணிகள் படகின் ஓட்டியைத் தாக்கியதாக ஒரு தகவல் உண்டு.

அந்த பிக்கு ஒரு வெளிப்படையான மகிந்த ஆதரவாளர். ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அவர் மகிந்தவின் படத்தை பகிரங்கமாக்க கொழுவி வைத்திருந்ததை ஊரார்; கண்டிருக்கிறார்கள். அந்த பிக்குவிடம் ஒரு பஜீரோ வாகனம் உண்டு. அது போன்ற வாகனங்களை இலங்கைத் தீவில் உள்ள மிகச்சில பெரிய புள்ளிகளே வைத்திருப்பதாக தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிற்சங்க வாதி கூறினார்.

புத்தபகவான் சொத்து சுகங்களைத் துறந்து சன்னியாசம் பூண்டவர். ஆனால் இலங்கைத் தீவின் தேரவாத பிக்குகளோ பஜிரோ வைத்திருக்கிறார்கள். சொகுசுப்படகு வைத்திருக்கிறார்கள். கட்சி வைத்திருக்கிறார்கள், தேர்தல் கேட்கிறார்கள்,சினந்து பேசுகிறார்கள். துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள்.சண்டித்தனம் செய்கிறார்கள் இன்னும் என்னவெல்லாமோ செய்கிறார்கள். அவர்கள் ஏறக்குறைய இலங்கைத் தீவின் மிக ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வகுப்பினராகக் காட்சியளிக்கிறார்கள். புதிய அரசியல் அமைப்பிலும் அவர்களுக்குரிய அந்த அந்தஸ்து பாதுகாக்கப்படும் என்று ரணிலும் கூறுகின்றார், மைத்திரியும் கூறுகின்றார். நல்லாட்சி அரசாங்கமும் அந்தப் பாரம்பரியத்தின் கைதிதான்.

மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வாக்குறுதிகளில் ஒன்று தலதா மாளிகைக்கு முன்னால் செல்லும் வீதியைத் திறப்பது ஆகும். புலிகள் இயக்கத்தின் தாக்குதலுக்கு பின் இந்த வீதி மூடப்பட்டது. புனித பிரதேசத்திற்கு ஊடாகச் செல்லும் இவ் வீதி இப்பொழுதும் மூடப்பட்டிருக்கிறது. இவ்வீதி மூடப்பட்டிருப்பதனால் கண்டி நகருக்கான போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக மாறி இருக்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பாடசாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் வருவோர் இவ் வீதி மூடப்பட்டிருப்பதனால் அதிகம் சிரமப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

சிங்கள மக்களின் பண்பாட்டுத் தலைநகரில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக இருக்கும் இவ் வீதித் தடையை அகற்றுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஒரு புறம் போக்குவரத்து நெரிசல் இன்னொரு புறம் அதனால் ஏற்படும் சூழல் மாசாக்கம். இவை இரண்டையும் கவனத்தில் எடுத்து சிறிசேன அந்த வீதியை மறுபடியும் திறப்பதாக தனது நூறு நாள் வாக்குறுதிகளில் உறுதியளித்திருந்தார். ஆனால் அவரால் அதை இன்று வரையிலும் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் மகா சங்கத்தின் ஒரு பிரிவினர் அந்த வீதி திறக்கப்படுவதை எதிர்க்கிறார்களாம். ஒரு புனித பிரதேசத்திற்கு ஊடாக பொதுப் போக்குவரத்து வீதி ஒன்று செல்வதை அவர்கள் விரும்பவில்லையாம். மூடியது மூடியபடியே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்கிறார்களாம். ஆனால் ஒரு காலம் அது திறக்கப்பட்டுத்தானே இருந்தது என்பதும் அதனால் அதன் புனிதத்திற்கு எந்தப் பங்கமும் நேரவில்லை என்பதையும் மற்றத் தரப்பினர் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது தான் வாக்குறுதியளித்தபடி மகாசங்கத்தை மீறி ஒரு வீதியைக்கூடத் திறக்கமுடியாதிருக்கிறார் நாட்டின் அரசுத்தலைவர்.

இவ்வாறான ஒரு அரசியல், சமூக, மத வரலாற்றுப் பின்னணிக்குள் மட்டக்களப்புச் சம்பவத்தை ஓர் உதிரிச்சம்பவம் என்று கூறிப் புறக்கணித்துவிட முடியாது. பல நூற்றாண்டு காலமாக இறுகிக் கட்டிபத்தி நிறுவனமயப்பட்டுள்ள ஒரு மனோநிலையின் வெளிப்பாடே அது. இறக்காமம்-மாணிக்க மடுவில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்;டதையும், கிண்ணியா பாலத்திற்கு அருகே மிதவைப் பாதை இருந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டிருப்பதையும் தமிழ்ப் பகுதிகளில் இவ்வாறு வைக்கப்பட்டு வரும் புத்தர் சிலைகளையும் மேற்படி மனோநிலையின் பின்னணியில் வைத்தே பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த மாதம் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணியச் செயற்பாட்டாளர் அயலில் உள்ள ஒரு பன்சலையைச் சேர்ந்தவர்களால் மிரட்டப்பட்ட சம்பவத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். பன்சலைக்குரிய ஒலிபெருக்கி ஒன்று அவருடைய வீட்டை நோக்கிப் பொருத்தப்பட்டிருந்ததாம். அந்த ஒலிபெருக்கி தனக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் அதன் சத்தத்தை குறைக்குமாறும் அவர் குறிப்பிட்ட பன்சலையைச் சேர்ந்தவர்களிடம் முறையிட்ட பொழுது அவர்களால் மிகவும் கேவலமாக மிரட்டப்பட்டிருக்கிறார்.பலர் அவரைச் சூழ்ந்து நின்று அச்சுறுத்தியுள்ளார்கள். அதன் பின் அவருடைய வீட்டிற்கு விகாராதிபதியும் விகாரையைச் சேர்ந்தவர்களும் பொலிசாருடன் வந்திருக்கிறார்கள். விகாராhதிபதிக்கு அடித்தாகக் குற்;றம் சாட்டப்பட்டுள்ளது. விகாராhதிபதியியிடம் மன்னிப்புக் கேட்குமாறும் அச்சுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்புச் சம்பவம் தொடர்பாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய அமைச்சர் மனோ கணேசன் மேற்படி சம்பவத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கும் மட்டக்களப்பில் அந்த விகாராதிபதி பயன்படுத்திய வார்த்தைகளுக்கும் அடித்தளமாகவுள்ள மனோநிலை ஒன்றுதான்.

மட்டக்களப்புப் பிக்கு நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு மதத்தின் அங்கத்தவர், அவருக்கு மேலே பொறுப்பில் பல பிக்குகள் உண்டு. இஸ்லாத்தைப் போல இலங்கைத் தீவின் தேரவாத பௌத்தமும் மிகவும் நிறுவனமயப்பட்டுள்ளது. எனவே ஒரு நிறுவனமயப்பட்ட மதத்தைச் சார்ந்த ஒருவர் விடும் தவறுகளுக்கு அந்த மதத்தின் உயர்பீடம் ஏதாவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய இனங்களை இழிவுபடுத்தும் ஒரு துறவிக்கு எதிராக இலங்கைத்தீவில் பௌத்த உயர் பீடங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன? நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு மதம் தனது விகாராதிபதி ஒருவரின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக இது வரையிலும் ஏதும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்? அந்த நிறுவனம் அதை ஒரு தகாத நடவடிக்கையாகக் கருதவில்லை என்று பொருள் கொள்ளலாமா? ஆயின் அந்த நிறுவனம் அந்தத் துறவியின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறது என்று விளங்கிக் கொள்ளலாமா?அல்லது அந்தப்பிக்குவிற்கு ஏதும் தன்னாட்சி அதிகாரம் உண்டா?இது முதலாவது.

இரண்டாவது, அந்த பிக்கு பொலிசாரின் முன்னிலையில்தான் அவ்வளவு அட்டகாசங்களையும் செய்கிறார். அதற்கெதிராக ஏன் இது வரையிலும் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? கிழக்கு மாகாண முதலமைச்சர் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அப்படியெந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படியென்றால், இலங்கைத் தீவின் பொலிஸ் மற்றும் நீதிபரிபாலனக் கட்டமைப்பு போன்றன மகா சங்கத்துக்குக் கீழானவைதானா? அல்லது மகாசங்கம் சட்டம் ஒழுங்கு தொடர்பிலான நடவடிக்கைகளுக்குள் கொண்டு வரப்பட முடியாத அளவுக்கு சக்திமிக்க ஒரு கட்டமைப்பா? அல்லது இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்களும் மறைமுகமாக மேற்படி தேரரை ஆதரிக்கின்றனவா? ஆயின் நிலைமாறுகால நீதிச் செய்முறைகளில் கூறப்படும் மீள நிகழாமை என்ற பொறிமுறை இலங்கைத்தீவுக்குப் பொருந்தாதா?

இது தொடர்பில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவரான நிர்மல் ரஞ்சித் தேவசிறி தனது முகநூல் பக்கத்தில் போட்டிருந்த குறிப்புடன் இக் கட்டுரையை முடிப்பது பொருத்தமாயிருக்கும்.

‘தமிழர்களுக்கு (மற்றும் சிங்கள பௌத்தர்கள் அல்லாத இனக் குழுமங்களுக்கும்) விசேட பிரச்சினைகள் உண்டு என்பதை சொல்ல எங்களைப் போன்றோர் எவ்வளவு முயற்சி செய்திருக்கிறோம். நாங்கள் மலையளவுநூல்கiள எழுதி தெளிவுபடுத்த முடியாத இந்த உண்மைகளை இந்த திமிரான பிக்கு எடுத்துரைப்பதைப் பாருங்கள். சட்டத்தைப் பாதுகாக்கும் அதிகாரிகளின் மத்தியில் பகிரங்கமாக இப்படி நடந்துகொள்வதற்கான வாய்ப்பு எப்படி கிடைக்கிறது?’.

Related posts

*

*

Top