ஒரு விநாடி தாமதமாக பிறக்கிறது புத்தாண்டு

இம்முறை புதுவருடம் ஒரு விநாடி தாமதமாக பிறக்க உள்ளதாக சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. அது மிகவும் துல்லியமானதாகும். தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேர வகையீடு நிர்ணயிக்கப்படுகிறது.

பூமியானது ஒரே வேகத்தில் சுழல்வது இல்லை. நிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் சுற்றுகிறது.

இதனால் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வானியல் நேரத்துக்கும் அணுகடிகாரத்தின் நேரத்துக்கும் நூலிழை வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது.

இதனால் 500 முதல் 750 நாட்கள் வரை வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையில் ஒரு விநாடி வேறுபாடு ஏற்படுகிறது.

அதை ஈடுசெய்ய உலகின் அணு கடிகாரங்களில் அவ்வப்போது ஒரு விநாடி கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. அதைத்தான் லீப் விநாடி என்று அழைக்கின்றோம். அது வருடத்தின் ஜூன் 30 அல்லது டிசம்பர் 31-ம் திகதிகளில் லீப் விநாடியாக சேர்க்கப்படும்.

லீப் விநாடி முறையானது 1972ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. உலகில் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி லீப் விநாடி சேர்க்கப்படுகிறது. எனவே எதிர்வரும் 2017 புத்தாண்டு பிறப்பதற்கு கூடுதலாக ஒரு விநாடி எடுக்கும் என சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு (ஐநுசுளு) அறிவித்துள்ளது.

லீப் விநாடி குழப்பத்தை தவிர்க்க கூகுள் நிறுவனம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி கூகுளின் சர்வர்கடிகாரம் ஒரு விநாடியை ஈடுகட்ட 20 மணி நேரம் சற்று மெதுவாகச் சுற்றும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top