புனரமைக்கப்பட்ட குளங்கள் விவசாயிகளிடம் கையளிப்பு

Barack Obama

ஒட்டுசுட்டானில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட இரண்டு நீர்ப்பாசனக் குளங்களை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்ச்சி நேற்று 16.01.2017 திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு விவசாய அமைப்புகளின் தலைவர்களிடம் துருசுக் கதவுகளின் சாவிகளைச் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தார்.

ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள வெளிவயல் குளம் மற்றும் துவரமோட்டைக் குளம் ஆகிய இரண்டு குளங்களே இவ்வாறு புனரமைக்கப்பட்ட குளங்கள் ஆகும். இவற்றில் வெளிவயல் குளம் 3.3 மில்லியன் ரூபா செலவிலும், துவரமோட்டைக் குளம் 4.6 மில்லியன் ரூபா செலவிலும் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்நிதியை மத்திய விவசாயத் திணைக்களம் வழங்கியுள்ளது.

நீண்ட காலமாகப் புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்த இக்குளங்கள் விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்துத் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. கடும் வறட்சி காரணமாகக் குளங்களில் நீர்வரத்து இல்லாமல் இருந்தபோதும் விவசாயிகள் உணர்வுபூர்வமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். பாரம்பரிய வழக்கப்படி குளக்கட்டில் இவர்கள் பொங்கிப் படையல் செய்த பின்னரே குளச் சாவிகளைக் கையளிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் முல்லை மாவட்ட உதவி ஆணையாளர் செ.புனிதகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் க.சிவநேசன், ஆ.புவனேஸ்வரன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

03 04 09

Related posts

*

*

Top