அபிவிருத்தியை விளித்து நிற்கும் நெடுந்தீவு!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

லகத்திலேயே நாம் வாழும் இலங்கைத்திருநாடு ஒரு அழகிய ஆச்சரியத்துக்குரிய தீவு. பல வகையான உயிரினங்களையும் தாவர பல்வகைத்தன்மையையும் கொண்ட ஒரு புண்ணிய பூமி. இந்த அழகிய தீவில் பல வகையான சிறிய தீவுகளும் அமைந்திருக்கின்றன. இத்தகையதொரு அழகிய தேசம் எங்கிருக்கும். ஆனால் கடந்த காலங்களில் ஆண்ட போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோரினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும் அதன் பின்னராக நடைபெற்ற ஆட்சி மாற்றங்களும் இன்னும் போர்களும் இந்த அழகிய தீவில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. வளங்கள் பல அழிந்தும் அவற்றை வினைத்திறனாக பயன்படுத்தாமலும் அதனால் மக்கள் இடம்பெயர்ந்தும் வாழும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு நிலைதான் நெடுந்தீவுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு அழகியதீவு அபிவிருத்தியை விளித்து காத்திருக்கின்றது. அதற்கான கதவுகள் அகலத் திறக்குமா?

Prof.G.Mikunthanஒரு காலத்தில் விவசாயத்தில் களைகட்டிய பொன்விளைந்த பூமி வரண்டு உவர்நீராகி பயிர்ச்செய்கையே செய்ய முடியாமல் தவிக்க விடப்பட்டிருக்கின்றது. மக்களுக்கான ஆட்சிகள் மாறியென்ன அங்கு பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள்வளமாக வாழ வழிசெய்யப்படவில்லையே என்னும் ஆதங்கம் அங்கிருக்கும் எம்மினிய உறவுகள் அனைவருக்குள்ளும் உள்ளார்ந்து இருப்பதனை உணர முடிந்தது. அந்த மக்களை இடம்பெயர வைத்து பல இடங்களில் பூமியே வெளிச்சோடிக் கிடப்பதையும் பல இடங்களில் ஊடுபுகுந்துள்ள களைகள், அந்த நிலத்தில் பாரம்பரியமாக வளராத பயிர்கள் தற்போது குடியேறி பரவலாக இருப்பதனையும் காண முடிகின்றது. எப்படியிருப்பினும் தற்போது வாழும் மக்களுக்கான வசதி வாய்ப்புக்களை இன்னமும் அதிகரித்து அவர்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தால் நெடுந்தீவு போன்ற பல தீவுகள் உள்ளிட்ட பல கிராமங்கள் தங்களது அபிவிருத்தியை மேலுயர்த்தி தாமே எதிர்பார்த்த மாற்றத்தினுள் உட்புக முயற்சி செய்யும். மக்கள் மயப்பட்ட மக்களால் மட்டுமே இத்தகைய அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதற்காக வாய்ப்புக்களை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த நிலை அனைத்து பகுதியிலும் உணரப்பட்டால் எமது நாடும் இன்னும் வளம்பெறும் முழுமையாக அபிவிருத்தியடையும். இந்த அபிவிருத்தியில் அனைவரினதும் பங்களிப்பு அவசியம். யாரோ ஒருவர் ஏதோ செய்கின்றார் என்றில்லாமல் துறை சார்ந்தவர்கள்; அனைவரும் இணைந்த கூட்டுமுயற்சியின் அவசியத்தை இங்குணர்கின்றோம்.

நெடுந்தீவு தன்னகத்தே கொண்டிருக்கின்ற வளங்களை ஒருமுகப்படுத்தினால் அதிலுள்ள வளங்களை வினைத்திறனாக பயன்படுத்தி அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழில்விருத்தியையும் கவனத்திற்கொண்டு அபிவிருத்திக்கான வரைபினை மேற்கொண்டால் நெடுந்தீவின் வளர்ச்சியின் படிநிலைகளை ஒவ்வொன்றாக கூட்டிச்செல்லலாம். நெடுந்தீவில் இருக்கின்ற மக்களமைப்புக்களை வினைத்திறனாக செயற்பட வைத்தல் முக்கியமானது. மகளிர் அமைப்புக்கள், கிராமிய அபிவிருத்தி அமைப்புக்கள், இன்னும் கமக்கார அமைப்புக்கள் என்பன முழுமையாக இயங்காதநிலை காணப்படுகின்றது. மக்களாகவே மக்களுக்காக என்னும் நிலைக்கு அவர்களை திசைமுகப்படுத்தல் வேண்டும். இவ்வமைப்புக்கள் மூலம் அவர்களுக்குள் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு உருவாக்கி அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவது முக்கியமானதாகும். மகளிர் அமைப்புக்களின் மூலம் மகளிருக்கான பயிற்சிகளை முன்னெடுப்பதும் அதன்மூலம் அவர்கள் தங்களது வீடுகளிலிருந்து கொண்டே வருமான மீ;ட்டக்கூடியவர்களாக மாற்றியமைக்கலாம். அவர்களின் மனைகளிலிருந்து உருவாகும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தால் அவர்களுக்கிருக்கின்ற சந்தை வாய்ப்பு பிரச்சனையை தீர்க்க முடியும்.

அபிவிருத்தியை விளித்து நிற்கும் நெடுந்தீவு (2)

நெடுந்தீவில் அதிகளவிலான சேதன பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக பனை மற்றும் ஏனைய தாவரங்களிலிருந்து விழுந்து மனித பாவனையற்று சேதன பொருட்கள் நிறைந்திருக்கின்றதனை நாம் எமக்கு இயற்கையால் கிடைத்திருக்கும் வாய்ப்பாக மாற்றிக்கொண்டால் அதிலிருந்து சிறந்த சேதன உரத்தை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். இந்த சேதன உரத்தை தரநிர்ணயத்திற்கேற்ப இன்னும் மெருகேற்றிக்கொண்டால் நெடுந்தீவில் செய்கை பண்ணப்படும். பயிர்களுக்கு வேண்டிய உரத்தையும் இன்னும் மீதியானதை யாழ்ப்பாணத்திற்கும் ஏற்றுமதி செய்யலாம். இதற்காக இயந்திரங்களின் உதவியுடனான சேதனக்கழிவை சிறந்த உக்கும் பொருளாக மாற்றுவதற்கு முயற்சிக்கலாம். சிறந்த சேதன கூட்டுரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை திட்டமிட்டு ஆரம்பிப்பது சிறந்தது. பலவிதமாக சேதனப் பொருட்களுடன் நெடுந்தீவில் அதிகளவில் கிடைக்கும் கால்நடைகளின் சாணம் என்பனவற்றை பயன்படுத்தி கழிவுகளை மீழ்சுழற்சியி;ல் பயன்படுத்துவதற்கு கவனஞ்செலுத்தலாம். இந்த கூட்டுரம் தயாரிப்பதற்காக அதுசார்ந்த தொழிற்சாலையின் உருவாக்கமும் பயனளிக்கும். இதற்கு மக்களின் ஒற்றுமையும் அவர்களின் இணைந்த செயற்பாடும் மிகமிக முக்கியமானதாகும். மேலும் மக்களிடையே கூட்டுறவை இன்னும் மேம்படுத்த வேண்டும். இதற்கான சமிக்கைகள் மக்களிடம் வெளிப்படுத்தப்பட்டிருப்பது இன்னும் அவர்களின் விருப்பத்தையும் எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

நெடுந்தீவில் பலவகையான மூலிகைத்தாவரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றினை முதலாக்கி தொழிற்றுறையாக்கும் திட்டங்கள் வரையப்படுதல் வேண்டும். கற்பூமியாக காணப்படும் இடங்களில் பிள்ளைக் கற்றாளை சிறப்பாக அதிகமாக வளர்ந்து காணப்படுகின்றன. ஆனால் அவற்றை தொழிற்றுறைக்கு பயன்படும் வகையில் திட்டம் வரையப்பட்டு அங்குள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டால் நெடுந்தீவு செல்வம் கொழிக்கும் பூமியாகும்.

அபிவிருத்தியை விளித்து நிற்கும் நெடுந்தீவு (1)

நெடுந்தீவில் வாழுக்கின்ற மக்களுக்கு தண்ணீர்ப்பிரச்சனை இருப்பதாக அறியப்பட்டது. ஆனால் அங்கே இருக்கின்ற குளம் உவர்நீராக காணப்படுகின்றது. கடலிலிருந்து நீர் உட்புகுவதனால் வெட்டுக்களிக்குளம் உவர்நீராக காணப்படுவதாகவும் நீர்வரண்டு போகும் போது அதிலுள்ள மண் காற்றில் கிளம்பி அருகிலுள்ள பாடசாலை மற்றும் தாவரங்களை மண்துணிக்கைகளால் நிறைத்து விடுகின்றது. குளத்துமண் வெளிக்கிளம்பாது குளத்தைச் சுற்றி தாவர அரணணைப்பதும் அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து கடல்நீர் உட்புகாது பாதுகாப்பதும் நெடுந்தீவின் நீர் வளத்தை பேணிப்பாதுகாப்பதும் அதனை மக்கள் பயன்படுத்துவதற்குமாக மாற்றியமைக்கலாம். இங்கு உல்லாச பயணத்துறைக்கான அபிவிருத்திகளையும் முன்னெடுக்க வேண்டும்.

மேலும் மக்கள் விவசாயம் செய்வதற்காக கிழக்கு பகுதியிலிருந்து மண்ணை கொண்டுவந்து மேற்கு பக்கத்திலுள்ள தங்களது காணிகளில் நிறைத்து பயிர்செய்வதனை காண முடிகின்றது. நெடுந்தீவின் கிழக்கில் நல்ல மண் காணப்படுகின்றது ஆனால் அங்கே குடியிருப்புக்கள் குறைவு, அதேநேரத்தில் நெடுந்தீவின் மேற்குப்பக்கம் குடியிருப்புக்கள் அதிகமாக இருக்கின்ற போதும் கற்பூமியாக காணப்படுகின்றது. பயிர்ச்செய்கைக்கு தேவையான மண் இல்லை அதனால் விவசாயிகள் கிழக்குப்பகுதியிலிருந்து மண்ணைத்தருவித்து தங்களது விளைநிலத்தில் நிரப்பி பயிர் செய்கின்றனர். இவற்றுக்கும் மேலாக விளைநிலம் கற்பூமியாக காணப்பட்டாலும் அதில் பல வகையான தாவரங்கள் வளர்ந்திருப்பதனையும் காணலாம். மண்ணின் தன்மை பற்றியும் இந்த கற்பூமியில் பயிர்களை வளர்ப்பதற்கான வழிவகைகளையும் கண்டறிவது நெடுந்தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் வாழ்வு சிறப்பதற்கும் வழிவகுக்கும். நெடுந்தீவிலுள்ள பிரதேச செயலாளரும் பிரதேசசெயலகமும் தனது முழுமுயற்சிகளையும் உள்வாங்கி அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதும் அவர்களுக்கு முறையான திட்டங்கள் கொடுக்கப்பட்டால் நெடுந்தீவினை அபிவிருத்தி செய்வது சாத்தியமாகும். யாழ்ப்பாண அரச அதிபரின் எண்ணங்களை உள்வாங்கி இத்திட்டங்கள் தீட்டப்பட்டால் நெடுந்தீவினை விட்டு சென்ற மக்கள் மீண்டும் தங்கள் பூமிக்கு விரும்பி திரும்புவதற்கொரு வாய்ப்பு ஏற்படுவதோடு அதன் மூலம் நெடுந்தீவினை வரலாற்றில் அபிவிருத்திக்கான முன்னோடி இடமாக மாற்றுவதுடன் வடபகுதியில் உள்ள ஏனைய பிரதேசங்களுக்கு இதுவொரு முன்னுதாரணமாகவும் அமையும்.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கிராமசேவைப்பிரிவுகளில் முதலாறு கிராம சேவைப் பிரிவுகளும் அதாவது தொடக்கம் வரையான இலக்கங்களைக்கொண்ட கிராம சேவைப்பிரிவுகள் நெடுந்தீவிலேயே காணப்படுகின்றன. அந்த வகையில் நெடுந்தீவில் ஏற்படுத்தப்படும் அடிமட்ட அபிவிருத்தி உத்வேகமாகி ஏனைய கிராம சேவைப்பிரிவுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு வடமாகாணத்தின்  அபிவிருத்தியை முழுமையாக நாம் முன்னோக்கிப் பார்க்க முடியும்.

தொழிற்றுறை முன்னெடுக்கப்படும் போது அதற்கு தேவையான போக்குவரத்து வசதியகளும் இன்னும் சந்தைப்படுத்தல் உற்பத்திப்பொருட்களுக்கான மதிப்பேற்றஞ் செய்து நெடுந்தீவின் உற்பத்திகளாக உலக சந்தைக்கு எடுத்துச்செல்லும் போது நிச்சயம் நெடுந்தீவின் மகிமை வெளித்தெரியவரும். கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான வசதி வாய்ப்புக்களையும் சேர்த்தே பெருக்குதல் வேண்டும். மக்களுக்கான அடிப்படைக்கல்வியை அவசியம் கொடுக்கின்ற அதே நேரத்தில் அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டு அதனை தீர்த்து வைத்தல் வேண்டும். உங்கள் அனைவரதும் கவனம் நெடுந்தீவின் பால் நகர்ந்தால் மேற்கூறிய அனைத்தும் சாத்தியம். வாருங்கள் எங்கள் புனித பூமியில் ஒரு அதிசயத்தை அனைவரும் இணைந்து நடத்திக்காட்டலாம்.

Related posts

*

*

Top