பூச்சி வேளாண்மையிலிருந்து புரத உணவும் எதிர்பார்ப்புக்களும்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

ம்முறை என்ன இது தலைப்பு? எதனைச் சொல்லவருகின்றது? அதென்ன பூச்சி வேளாண்மை? பயிர்வேளாண்மை, கால்நடை வேளாண்மை இவை போல பூச்சி வேளாண்மை என்பதாக பொருள்படுகின்றது. இதை புதுமையை புகுத்துவதாக எண்ணிவிட வேண்டாம், மாறாக உலக உணவு தாபனம் பல விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வின் முடிவுகளாக பூச்சி வேளாண்மை என்பதனை சிறந்த மாற்றீடாக 2050இல் உலகமக்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குவதற்கு பரிந்துரைத்திருக்கின்றார்கள். அதாவது வாசிக்கவே ஏதோ செய்வது போல இருந்தாலும் நாளடைவில் பழக்கப்படும்போது அதனை இந்தளவுக்கு அருவருப்பூட்டும் விடயமாக நாம் கண்டுகொள்ள மாட்டோம். பூச்சிவேளாண்மை என்பது பூச்சிகளை வளர்த்து அவற்றை நாம் குறிப்பாக உணவாக பயன்படுத்துவது என்பதாகும். இது ஒன்றும் புதுமையான விடயமல்ல என்றாலும் இப்படியான பரிந்துரைகளை உடனடியாக எமது மனம் ஏற்றுக்கொள்ள முடியாதென்பது அனைவரும் அறிந்ததே இருப்பினும் வேறுவழியின்றி சிறந்த மாற்றுத்திட்டமாக இதனை உலகளாவிய ரீதியில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.

Prof.G.Mikunthanசாதாரணமாக நாம் உட்கொள்ளும் தேன் தேனீக்களால் ஒவ்வொரு பூவாக பூவின் சாறு சேகரிக்கப்பட்டு அவற்றை தமது வாய்க்குழிக்குள் வைத்து உமிழ்நீரினால்; ஒன்றுகலக்கப்பட்டு; தேனாக மாற்றப்பட்டு தேனீக்களின் வதைகளுக்குள் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆகமொத்தத்தில் தேனீக்களின் உணவை நாம் திருடி உண்ணுகின்றோம் என பொருள். தேனீக்களினால் சேகரிக்கப்பட்ட மகரந்த மணிகள் மற்றும் பூக்களிலிருந்து பெறப்பட்ட தேன்சுரப்புக்கள் என்பனவற்றை சேகரித்து தேனாக, இராணித்தேனிக்குரிய சிறப்பான உணவான (றோயல் ஜெலியாக) இளம்பருவங்களுக்கு தேவையான மகரந்த மணிகள் என்பன உள்ளடங்கிய உணவாக தேனீக்களின் வதைகளில் சேமிக்கப்படும். இதனையே நாம் சுவைத்து உண்ணுகின்றோம். அதாவது பூச்சிகளின் உணவை நாம் ஏற்கெனவே உண்ணுவதனை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.

இந்த செய்திக்கு தற்போது முக்கியத்துவம் கொடுப்பதற்கான அவசியமென்ன? அதாவது 2050ம் ஆண்டளவில் உலகசனத்தொகை 9 பில்லியனாக பாரியளவில் உயர்ந்துவிடும். இந்த சனத்தொகைக்கு உணவளிக்க உலகம் திண்டாடப்போகின்றது என்பதனை விஞ்ஞானிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரித்த உலக சனத்தொகையை சமாளிக்க மாற்றுவழிகளை தற்போதய விஞ்ஞானிகள் தேடியபோது கிடைத்ததே பூச்சியுணவு. பூச்சிகளை உணவாக நாமும் உண்ணுகின்றோம் ஆனால் எமக்கு தெரியாமல் பலவற்றை செய்கின்றோம். அதிலொன்று இந்த பூச்சிகளை உணவாக உட்கொள்வது. தேனை சுவைப்பது போல தேனீக்கள் சேகரித்த அந்த இராணிக்கான றோயல்ஜெல்லியை எம்மவர்கள் எடுத்து உண்பதால் சிவப்பு நிறத்துடன் மிகவும் கவர்ச்சியாக இளமையாக காணப்படுவர் என்னும் கூற்றும் பரவலாக உண்டு. இவ்வளவு பெறுமதியும் கொண்ட பூச்சிகணை உணவாக கொள்ளமுடியுமா என்பதற்கப்பால் உணவாக உட்;கொள்ளுவதனால் என்ன இலாபம் எனப் பார்ப்போம்.

முதலில் குறிப்பிட்டவாறு அதிகரிக்கும் சனத்தொகைக்கான உணவுஉற்பத்தி இருக்கின்ற விளைநிலங்களை வைத்துக்கொண்டு உற்பத்தி செய்ய முடியாது. மேலும் மாறிவரும் காலநிலையால் மாற்றங்கள் பல தோற்றம்பெற்றாலும் இறுதியில் காலநிலை மாற்றம் விவசாயத்தை கேள்விக்குறியாகவே வைத்திருக்க விரும்புகின்றது. அந்தவகையில் அதிகரித்த பயிர்ச்செய்கை மூலமான உணவுற்பத்தியென்பது சாத்தியப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவே. மாறாக கால்நடைவேளாண்மையின் மூலமாகவும் எதிர்பார்க்கின்ற அளவுக்கு உணவுற்பத்தியை அதிகரிக்க முடியாது. இதுவும் இல்லையென்றால் இனிவரும் சந்ததியைக் காப்பாற்ற மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய தேவையும் உணரப்பட்டுள்ள நிலையில் இனி பூச்சிகளினை உணவாக உட்கொள்வதற்கான பலவிதமான ஆய்வுகள் நடைபெற்ற நிலையில் தற்போது இதனை ஆபிரிக்காவிலுள்ள மக்கள் சராசரி தின உணவாக உட்கொள்ளுகின்றார்கள். அங்கே பூச்சிகள் விதம்விதமான தயாரிப்புக்கள் காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

fig 1

ஆபிரிக்க மக்கள் பூச்சிகளைக் கொண்டு விதம்விதமாக தயாரிக்கும் உணவுகளை பட்டியலிட்டிருக்கின்றார்கள். முட்டை, புழு, கூட்டுப்புடு, நிறைவுடலி மற்றும் அணங்கு போன்றனவற்றை வத்தல்போட்டு, காயவைத்து அவற்றை சேமித்து பல்வேறுவிதமான உணவுவகைகளைத் தயாரிக்கின்றனர். தாவரத்தில் சோயா அவரையிலேயே 40சதவீதமளவுக்கு புரதச்சத்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பூச்சிகளைப் பயன்படுத்தினால் அவற்றில் 60 சதவீதமானளவுக்கு புரதச்சத்து இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்த சக்தியை முறையாக கவனமாக பயன்படுத்தினால் உலகமக்களுக்கு தேவையான புரதச்சத்தையும் மேலும் தேவையான பல அரிய சத்துக்களையும் பயன்படுத்தி உணவு தயாரித்துக்கொள்ளலாம். நாம் தேனீவளர்ப்பு, ஒட்டுண்ணி வளர்ப்பு என்பனவற்றுடன்சோர்த்து பூச்சிவளர்ப்பு என தலைப்பை மாற்றிக்கொள்ளலாம். பசியாலும் பட்டினியாலும் தினந்தினம் மக்கள் துடித்துப்போவதை காணமுடிகின்றது. அவர்களுக்கான ஆறுதலைத்தரும் பதிலாக இது அமையலாம்.

Fig 2

பயிர்களில் விளைச்சலுக்கு குந்தகம் விளைவிப்பன பீடைகள். அவற்றுள் பூச்சிப்பீடைகளும் உள்ளடக்கம். இவ்வகையான பீடைகளைக் கட்டுப்படுத்த நாம் பீடைநாசினிகளை தொடர்ந்தும் விசிறிக்கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் பயிர்களில் வளரும் இப்பீடைகளை நாம் வளர்த்து அவற்றின் பயனைப் பெற்றால் அது இன்னும் முன்னேற்றகரமாக அமையும். அந்தவகையில் பீடைகளை நாம் வளரவிட்டால் அவற்றின் எண்ணிக்கை பெருகியவுடன் அவற்றை உணவாக ஆக்கிக்கொள்கின்றார்கள். இதன் மூலம் பூச்சிகளை வளர்ப்பதற்கும், பயிர்களுக்கு தெளிப்பதற்கும் நாம் அசேதன இரசாயனங்களை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் நாம் சுற்றுச்சூழலையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். இரசாயனப் பதார்த்தங்களற்ற பூச்சிவேளாண்மை மூலமாக புதிய அத்தியாயத்தை எழுதிட முடியும்.

Fig 3

பூச்சி உணவினூடாக எமக்கு தேவையான உணவினை நாம் தயாரிக்க முற்பட்டிருப்பது இனிவரும் காலத்தின் பதிவில் தான் தங்கியிருக்கின்றது. இந்த மாற்றத்தினை நோக்கிய முன்னகர்வு எமக்கான வழியை காட்டிநிற்கும் என்பதில் வேறுகருத்தேதுமில்லை. இதைப்பற்றி இன்னும் விளக்கமாக இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

Related posts

*

*

Top