என் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை!

ஈழத்தின் கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் பிறந்தவர், கவிஞர், கட்டுரையாளர், பத்தி எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியளாளர் என பன்முகங்கள் கொண்டவர் தீபச்செல்வன். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப்போர், இனப்படுகொலைக்குப் பிறகு பௌத்த சிங்கள இனவெறி இராணுவம் அரங்கேறிய பல்வேறு நிகழ்வுகளைத் தம் உயிரையும் பொருட்படுத்தாது உலகறியச் செய்தவர். 2009 இல் யாழ் பல்கலையில் மாணவர் ஒன்றிய பொதுச்செயலாளராய் இருந்தபோதும் சரி, எழுத்துலகில் எழுத நுழைந்தபோதும் சரி தமக்குள் சமரசமில்லாமல் களபோராளிக்கு நிகராக தீவிரமாய் இயங்கியவர் – இயங்கி வருபவர். அந்தவகையில் இவரின் ‘பதுக்குக்குழியில் பிறந்த குழந்தை’ கவிதைத் தொகுப்பு அனைவரிடமும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய ஒன்று. அதனைத் தொடர்ந்து கவிதை, கட்டுரை, நேர்காணல் என பத்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகான ஈழம் பற்றியே பேசுபொருளாகக் கொண்டவை.

பெரும்பாலும் கவிஞராகவே அறியப்படும் இவர், 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பேரா.கைலாசபதியின் நினைவாக இலங்கை பத்திரிக்கை நிறுவனத்;தின் சிறந்த ஊடக வியலாளருக்கான இரு விருதுகள், 2010 –ஆம் ஆண்டில் சிறந்த கவிஞருக்கான ‘கணையாழி ஆண்டாள் நினைவு விருது’, 2010 –ஆம் ஆண்டில் இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் சிறந்த புகைப்பட ஊடகவியலாளருக்கான விருதும் பெற்றார். இன்று ‘உலகத் தரமான ஓர் உன்னதக் கவிஞனாய்’ நம்மிடையே விளங்கும் தீபச்செல்வனைப் பற்றிய நூலுக்காக மின்னஞ்சலினூடாக எடுக்கப்பட்ட நேர்க்காணலே இது.

நேர்கண்டவர் : மா.அருள்மணி, தமிழகத்தின் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முனைவர்பட்ட ஆய்வினைச் மேற்கொண்டு வருகிறார்.

1. ஈழப்போராட்டச் சூழலில் வாழ்ந்த தாங்கள் படைப்பு ஆயுதம் – கருவி ஆயுதம். இவ்விரண்டில்; ஏன் முதலாவதான படைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை விளக்குங்களேன்?
ஆயதப்போராட்டத்தை நேசித்த ஆயுதம் ஏந்திப் போராடியிராத பலரை குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி இது. அதேவேளை ஆயதம் ஏந்திய போராட்டத்தில் ஆயதம் ஏந்தாமலும் பலர் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். என்னுடைய அண்ணா துப்பாக்கியை ஏந்தி வீரமரணம் அடைந்தபோதுதான் நான் எனது தேசம் குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். போராட்டம் குறித்து ஈடுபாடு ஏற்பட்டது. எங்கள் விடுதலைக்காக உரிமைக்காக நான் எழுத்தை கையில் எடுத்தேன். துப்பாக்கியை விடவும் வலிமையான ஆயுதம் எழுத்து. அதனால்தான் துப்hக்கியை ஏந்திப் போரிட்ட ஈழப்போராளிகள் எழுத்து என்ற ஆயதத்தையும் கையில் எடுத்தனர். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபாடு இருந்தபோதும் என்னுடைய சூழ்நிலை எழுத்தை நோக்கியே நிர்பந்தித்தது. எழுத்துக்கும் அப்பால் போராட்டத்திற்கான பணிகளையும் செய்திருக்கிறேன் என்பதே ஆயதம் ஏந்திப் போராட தவறிய குற்ற உணர்விலிருந்து விடுபட உதவுகிறது.

2. உங்களுக்குள் கவிதை உருவாகும் தருணம் எப்படி? ஒரு கவிதையை எழுத எவ்வளவு காலம் எடுப்பீர்கள்?
எழுதத் தொடங்கிய காலத்தில் ஒரு நாளில் ஒரு கவிதையை எழுதிவிடுவேன். சில மணிநேரங்களில்கூட எழுதிவிடுவேன். ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் ஒரே தடைவையில் எழுதியவை. 2009இல் செம்மை செய்யக்கூட முடியாத உயிர் அச்சுறுத்தல் நாட்களில் எழுதியவை. கவிதையை எழுதிய உடனே வலைப்பதிவில் பதிவேற்றி விடுவேன். ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற காலம் அது.

இப்போது ஒரு கவிதையை ஒர வருடமாக செம்மைப்படுத்தியதும் உண்டு. நான் ஸ்ரீலங்கன் இல்லை கவிதை எழுதி வருடத்தின் பின்னரே வெளியிட்டேன். ஆறுமாதம், மூன்று மாதம் என்று கவிதைகளுடன் வாழ வேண்டியுள்ளது. ஏதோ ஒரு தாக்கமடையும் தருணத்தில்தான் கவிதை பிறக்கிறது. அப்பொழுது எழுதப்படும் கவிதையை பின்னர் மெல்ல மெல்ல செம்மைப்படுத்துவேன். கவிதை வடிவத்தில் சிறியது என்பதால் அதை குறுகிய காலத்தில் எழுதிவிடலாம் என்று சொல்ல இயலாது. கவிதையைத்தான் நுட்பமாக அவதானமாக எழுத வேண்டும். நமக்கு ஏற்படும் தாக்கத்தை வாசகர் உணரவேண்டும். சிறிய வடிவம்தான். ஆனால் ஆழமாகவும் கூர்மையாகவும் இருக்க வேண்டும். வாழ்வின் எல்லாக் காலங்களிலும் கவிதையோடு இருக்கும் வாழ்வைத்தான் நான் மிகவும் விரும்புகிறேன்.

14628098_1086516274759011_2015693140_n (1)

3. நான் ஸ்ரீலங்கன் இல்லை கவிதை பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே? அது குறித்து சொல்லுங்கள்.
எங்களுடைய தாயகப் பிரதேசம் அந்நியரால் சிலோன் என்ற பெயரில் சிங்கள பிரதேசத்துடன் இணைக்கப்பட்டு, பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றபோது, சிங்கள கடும்போக்கு ஆட்சியாளர்களிடம் எங்களின் அடையாளத்தை தொலைத்த வாழ்வே இந்தக் கவிதை. உலகில் தன்னாட்சிப் பிரதேசங்கள் இணைக்கப்பட்டு நாடுகள் உருவாக்கப்படுவது புதிதல்ல. ஆனால், சமத்துவமற்று, உரிமைகளற்று, புறக்கணிப்புக்களுடன் நாங்கள் சிங்கள தேசத்துடன் இணைக்கப்பட்டோம். அத்துடன் வரலாறு முழுவதும் அவர்கள் எங்களை புறக்கணித்தனர். கல்வி, தொழில், பதவி, அரசியல் என பலவற்றினால் பின்தள்ளப்பட்டோம். மேலாதிக்கப் போக்கினால் வரலாறு முழுவதும் அழிக்கப்பட்டோம். இத்தகைய நிலமை உள்ள நாட்டின் தேசிய அடையாளங்கள் எங்களை பிரதிபதிக்கும் என எதிர்பார்க்க முடியாது. இலங்கையின் தேசியத்தில் மறைக்கப்பட்ட நாட்டின், அடையாளம் இழந்த எங்கள் நிலைதான் அக் கவிதை.

இக் கவிதை ஆங்கிலம், சிங்களம், நோர்வேஜியன், பிரெஞ்சு, டொச்சு, பாரசீகம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரசீக மொழியில் ஈரானிய கவிஞர் ஒருவர் மொழிபெயர்த்துள்ளார். பாரசீக மொழிக்கு முகப்புத்தகத்தில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக பாரசீக மொழிபேசும் பலர் தொடர்பு கொண்டு வருகிறார்கள். உலக அளவில் எங்களை புரிந்து கொள்ள வேண்டும் அதன் ஊடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. இந்தக் கவிதையும் அதில் பங்களிப்பது ஆறுதல் தருகின்ற விடயமே.

4. நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற இந்தக் கவிதையை எப்படி சிங்களத்தில் மொழிபெயர்த்தார்கள்? அதற்கு எதிர்ப்பு வரவில்லையா?
இந்தக் கவிதையை சிங்களத்தில் மொழிபெயர்கக வேண்டும் என தமிழ் தெரிந்த சில சிங்கள கவிஞர்கள், நண்பர்கள் முயன்றார்கள். பாசண அபேவர்த்தன தமிழ் இனப்படுகொலை ஆதாரங்களை உலகிற்கு வழங்கியவர்களில் ஒருவரான எங்கள் மதிப்பு மிகு படைப்பாளி. அவரே இக் கவிதையை சிங்களத்தில் அஜித் சி ஹேரத் என்ற சிங்கள படைப்பாளியை வைத்து மொழிபெயர்த்து அவர்களின் இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கான இணையதளத்தில் வெளியிட்டார்.

பெரும்பான்மையான சிங்களவர்கள் இங்கு நடந்த போரை இனப்படுகொலைப் போர் என ஏற்கமாட்டார்கள். அதனை பயங்கரவாதிகளுக்கு எதிரான புனிதப் போர் என்றே சொல்வார்கள். உண்மையில் தமிழினப்படுகொலையாக நடந்த போரை அப்படி சிங்கள மக்கள் பார்ப்பதே இரு இனங்களுக்கும் இடையிலான தற்போதைய இடைவெளி. அந்த இடைவெளியை இல்லாமல் செய்யபவர்களில் பாசன அபேவர்த்தன போன்றவர்கள் முக்கியமானவர்கள். அத்துடன் அக் கவிதையை பல சிங்கள இணையதங்களும் ராவய என்ற சிங்களப் பத்திரிகையும்கூட வெளியிட்டது.

அத்துடன் இனப்படுகொலைப் போர் நடைபெற்றது, தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்க வேண்டும் என்று சொல்லும் வெகுசில சிங்களவர்கள்கூட எங்களை ஸ்ரீலங்கன் என்ற அடையாளத்தை விட்டு வெளியில் செல்ல விடாமல் அதற்குள் அடக்க நினைப்பார்கள். எங்களது வாழ்வும் அடையாளமும் சரித்திரமும் ஸ்ரீலங்கன் என்ற அடையாளத்திற்கு வெளியில்தான். இக் கவிதை மொழியாக்கம் என்பது எங்களது தேசத்திற்கான அங்கீகாரம். எங்களது அடையாளமற்ற வாழ்வை புரிந்துகொள்ளும் நிலை. நிறைய சிங்கள கவிஞர்கள், நண்பர்கள் லதா ராமகிருஷ்ணன் மேற்கொண்ட கவிதையின் ஆங்கிலமொழியாக்கத்தையே பாராட்டினார்கள். அதன் பின்னர் மொழிபெயர்க்கப்பட்ட சிங்கள மொழியாக்கத்தையும் பல சிங்கள படைப்பாளிகள், நண்பர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். போலி நல்லிணக்கத்திற்கு எதிரான பிரகடனமே இக் கவிதை என்று கவிதையை சிங்களத்தில் மொழிபெயர்த்த படைப்பாளி குறிப்பிட்டுள்ளார். உண்மையில் மிகவும் ஆறுதலும் மகிழச்சியும் அடைகிறேன். இத்தகைய அங்கீகாரமும் அணுகுமுறையும்தான் தமிழ் மக்களிடம் சிங்களவர்கள் குறித்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.

5. விமர்சனத்துறை மீதான ஈடுபாடு குறித்து கூறுங்களேன்?
சில காலத்தில் அல்லது சில விடயங்கள் குறித்து எழுத்துக்கு அப்பால் உரையாட முடியாது. எழுத்தே ஒரு உரையாடல் வடிவம்தான். நான் அதிகமும் எனது எழுத்துக்கள் வாயிலாக உரையாட விரும்புகிறேன். எழுதத் தொடங்கிய ஆரம்பகாலங்களில் விமர்சனக் குறிப்புக்கள் சிலவற்றை எழுதியிருக்கிறேன். தமிழ்ச் சூழலில் விமர்சனங்கள் என்பது குழநிலை மற்றும் அரசியல் சார்பு நிலையிலிருந்தே முன்வைக்கப்படுகின்றது என்று கருதுகிறேன். தமிழில் முக்கியமான விமர்சகர்கள் என்றும் பெரிய எழுத்தாளர்கள் எனப்படுவர்களின் விமர்சனம் என்ற செயற்பாடும் இப்படியே இருக்கிறது. ஆழமான நேர்மையான விமசர்சனம் என்பது படைப்புக்கு அவசியமானது. அதனை சார்ப்பு நிலையோடும் எதிர்ப்பு நிலையும் விளம்பரப்படுத்தல் நிலையோடும்தான் பெரும்பாலானவர்கள் அணுகுகின்றனர். ஒரு படைப்பை நேர்மையோடு அணுகினால் இந்த நிலை ஏற்படாது.

விமர்சனம் என்பது வாசகர்களிடமிருந்தும் விமர்சனத்தை முதன்மையாக கொண்டு விமர்சனத்துறையில் இயங்குபவர்களிடமிருந்தும் வரவேண்டும் என்பதே எனது அபிப்பிராயம்.

6.உங்கள் வளர்ச்சியில் யார் யார் முக்கியமானவர்கள் என்று கருதுகிறீர்கள்?
இதை வளர்ச்சி என்று கூற இயலாது. எழுதும் செயற்பாடு ஈழத்தைப் பொறுத்தவரையில் ஒரு விளைவே. 2004க்குப் பின்னர் எழுதத் தொடங்கியபோது என்னை செம்மைப்படுத்தியவர்கள் என்று சிலரை குறிப்பிடலாம். நிலாந்தன், கருணாகரன், வ.ஐ.ச ஜெயபாலன், பொன்.காந்தன் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். இதில் ஜெயபாலன் மிகவும் முக்கியமானவர். எழுத தொடங்குபவர்களை ஊக்குவிப்பார். கவிதைச் செயற்பாடு குறித்த உரையாடல்களை நேர்மையாக முன்வைப்பார். கவிதை துறையில் இயங்குபவர்கள் சிலர் அதிகாரத்துவமாகவும் குழுமனநிலையோடும் இயங்கும் நிலையில்தான் எனக்கு ஜெயபாலனது இயல்பு மிகுந்த மதிப்பை ஏற்படுத்தியது. ஜெயபாலன் மிகவும் நெருக்கத்தை தோழமையை உணர்த்தும் கவிஞர். எனக்கு அவரது வாழ்வுமீது நேர்மை மீதும் மிக மதிப்பு இருக்கிறது.

இதற்கு அப்பாலும் என்னோடு பல நண்பர்கள் இருக்கின்றனர். என் பள்ளிக்கால நண்பர்கள், என் பல்கலைக்கழக நண்பர்கள், சென்னைப் பல்கலைக்கழக நண்பர்கள் என்று பலர் எனது வாழ்வில் முக்கியமானவர்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நண்பர்கள் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் எனக்கு அடிப்படையாய் இருந்தவர்கள். என் வாழ்வில் மிகவும் முக்கியமானவர்கள்.

7. உங்களது ஆளுமை வளர்ச்சியில் தங்களது ஆசிரியர்கள் பெறும் இடம் யாது?
எனது ஆசிரியர்களும் என் வாழ்வியல் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறார்கள். குறிப்பாக என் பள்ளி வகுப்பாசிரியை சசிந்தா என்னை வழி நடத்தியவர். போரால் பாதிக்கப்ட்ட மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தை சேர்ந்த என்னை கல்வி கற்பித்து உயர்தரத்தில் சித்தி எய்த வைத்ததில் அவருக்கு மிக முக்கிய பங்குண்டு. பாடசாலை கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் அவர் எனக்கு பல வித்திலும் அடிப்படையாய் இருந்தார். தாய்மையும் ஊக்கமும் மிகுந்த அவரது வழிகாட்டல் எனக்கு அக்காலத்தில் நம்பிக்கையை ஊட்டியது.

பாடசாலைக்கு வெளியில் லோகேஸ்வரன் ஆசிரியர் என்ற ஆசிரியரிடம் தமிழ் படித்தேன். நான் தமிழுக்கு அப்பால் பள்ளிப் படிப்பில் வெற்றிபெரும் உபாயங்களையும் அவரிடமிருந்து கற்றேன். அக் காலத்தில் எனக்குள் எழுந்த பல்வேறு விதமான கேள்விகளுக்கும் சிந்தனைகளுக்குள் அவரது தமிழ் கற்பித்தல் செயற்பாடு அடிப்படையாயிருந்தது. அது என் இலக்கிய ஈடுபாட்டை விரிவுபடுத்துவதிலும் பங்களித்தது. பழந்தமிழ் இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அவர் கற்பித்த விதங்கள் எனது தமிழ் படிப்புக்கு முன்னோட்டமானது. நான் பல்லைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கல்வியை பயிலை அவரே எனக்கு தூண்டுதலாக இருந்தார்.

அதைப்போல பள்ளியில் வசந்தி ஆசிரியையும் முக்கியமானவர். சிவஞானம், கனைக்ஸ் போன்ற ஆசிரியர்களிடம் இந்துநாகரிகம் கற்றேன். அந்தப் பாடத்தில் ஈர்ப்பு ஏற்பட அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இதைப்போல பல ஆசிரியர்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவர்கள். விக்கி ரீச்சர் நான் சிறுவயதில் படித்த ஆசிரியை. போரால் இடம்பெயர்ந்த காலத்தில் மிகவும். பாடசாலைக்கு நான் செல்வதே குறைவு. என் திறமைகளை வகுப்பில் உற்சாகப்படுத்தி என்னை தொடர்ந்து பள்ளிக்கு வர காரணமாக இருந்தவர் விக்கிரீச்சர். உயர்தரப்பரீட்சையில் சித்தி எய்தியபோது அவரை சென்று பார்த்து நன்றி கூறினேன். அதைப்போல இன்னொரு ஆசிரியர் கேதீஸ், எனக்கு கணித பாடத்தில் ஈடுபாடே இல்லை. கேதீஸ் ஆசிரியர் கணிதபடம் கற்பித்து என்னை அப் பாடத்தில் அதி திறமை சித்தியடை செய்தவர்.

எனது சிறுவயது காலம் மிகவும் போராட்டம் நிறைந்தது. வறுமை, போர், குடும்ப நிலமை இவைகளால் எனது சிறுபராயமே போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. நிலக்கடலை விற்றல், பயிர்கன்றுகள் விற்றல் என்று சிறுவயதில் வியாபாரங்களில் ஈடுபட்டே குடும்பத்தை சுமக்க நேரிட்டது. விடுதலைப் புலிகளின் பாடசாலை மீள் இணைப்பு திட்டத்திலேயே நான் மீண்டும் பாடசாலையில் இணைக்கப்பட்டேன். என்னை எழுத்தையும் எனக்கான கருத்தையும் நோக்கி நகர்த்தியதில் போராட்டம் நிறைந்த வாழ்வுக்கு பெரும் பங்கிருக்கிறது என்றே கருதுகிறேன்.

file40

8. உங்களது குடும்ப குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு?
நான் எழுதும் பெரும்பாலான விடயங்களை அம்மா அறிவதில்லை. என் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை. எனது நாட்டின் நிலமை அப்படி. நான் எழுதக்கூடிய சில விடயங்களை அம்மாவுக்கு தங்கச்சி படித்துக் காட்டியபோது அவர் மிகவும் அச்சமடைந்தாராம். இலங்கை அரச படைகளின் அச்சுறுத்தலே அதற்குக் காரணம். எங்களுடைய கவிதைகள் ஒரு தாய் பார்த்து மகிழ்ச்சியடையும் கவிதைகள் அல்ல. பெரும்பாலும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் தெரியாமலே எனது எழுத்தை – புத்தகங்களை வைத்திருக்கிறேன். அவர்கள் அதனை வாசிக்க வேண்டியதொரு தேவையுமில்லை. ஏனெனில் எனது எழுத்துக்கள் அம்மாவை, தங்கிச்சியை போன்றவர்களைப் பற்றியதுதானே? எழுத்தை நான் ஒரு விளைவாகவே கருதுகிறேன். அதனை பாராட்டுப் பொறுவதற்கான வழியாக நினைக்கவில்லை.

9. தமிழ்நாட்டில் படித்த அனுபவம், இந்திய – தமிழகக் கல்விச் சூழல் குறித்து கூறுங்களேன்?
2011இல் சுந்திரராமசாமி கன்னியாக்குமாரிக்கு காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் அழைத்தார். அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு நான் முதன் முதலில் வந்தேன். சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் இரவீந்திரன் பேராசிரியர் அவர்களை சந்தித்து அங்கு முதகலை கல்வி கற்கும் விருப்பத்தை தெரிவித்தேன். ஈழ மாணவன் என்பதால் இலகுவாக ஆசனம் கிடைத்தது. சென்னையில் மரீனாவில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக விடுதியில்தான் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்தேன்.

பத்திரிகைக்குள்ளால், திரைப்படங்களுக்குள்ளால், இணையங்களுக்குள்ளால் பார்த்த தமிழ்நாட்டை நேரடியாக பார்க்கும்போது, வாழும்போது அதன் உண்மை நிலையை உணர முடிந்தது. தமிழகத்தின் அரசியல், சமூகப் பிரச்சினைகளை மிகவும் நுட்பமாக காணமுடிந்தது. என் பல்கலைக்கழகத்தில் சாதி சான்றிதழ் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மாணவன் என்ன சாதி என்பதற்கான சான்றிதழை கொடுக்க நேரிடும் ஒரு சூழல் ஏன் ஏற்பட்டது போன்ற கேள்விகள் எழுந்தன. இந்தியா என்பதும் தமிழகம் என்பதும் வேறுபாடுகளால் சிதறுண்டுள்ளன.

நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கல்வி கற்றதனால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பு புதியதொரு படிப்பாகவே இருந்தது. நான் ஒரு இதழியலானகாவும் செயற்பட்டுக்கொண்டிருந்தமையால் எனக்கு அப் பாடத்தில் ஈடுபடும் அதிகம். தமிழகத்தில் மருத்துவம், இதழியல், பொறியில், கலைகள் முதலிய துறைகளில் கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சி தமிழ்துறையில் ஏற்படவில்லை. தமிழ்நாட்டிலே ஏன் இந்த வளர்ச்சி ஏற்படவில்லை என்பது ஆராயப்படவேண்டியது. ஒரு காலத்தில் நாட்டாரியல் துறையில் இருந்த பேராசிரியர் வானமாமலை போன்ற ஆளமையை இப்போது தமிழில் காணமுடியவில்லை. தொ.பாரமசிவம் பண்பாட்டுதறையிலும் பத்தவக்லபாரதி மனுடவியல்துறையிலும் மிக்க ஆளமைகள். ஆவர்களைப் போன்றவர்கள் தமிழில் இல்லை. ஈழத்தில் உருவாகிய வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை போன்ற ஆளுமைகளுக்கு ஈடாக தமிழகத்தில் ஆளமைகள் இல்லை.

10. பொது வாழ்க்கையில் நீங்கள் செய்த பங்களிப்பு, கலை இலக்கிய உலகில் உங்களுடைய ஆளுமை வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியது?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தபோது இறுதி வருடத்தில் மாணவர் ஒன்றிய பொதுச் செயலாளராக பதவி வகித்தேன். அப்போது போர் நடந்து கொண்டிருந்தது. போருக்கு எதிராக குரல் கொடுத்தமையால் இராணுவத்தால் கடுமையான எச்சரிக்கைக்கு உள்ளானேன். அந்தக் காலகட்டத்தில் நான் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பதை இராணுவம் அறிந்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் மாணவர்களுக்காக பல்வேறு மரண அச்சுறுத்தல்களின் மத்தியில் செயற்பட்ட அனுபவங்கள் எனக்கு பல்கலைக்கழக மட்டத்தில் பெரும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. உயிரை பணயம் வைத்து இயங்கிய காலம். நான் இராணுவத்தால் கொல்லப்பட்டுவிடுவேன் என்றே நினைத்திருந்தேன். எனது மாணவர்கள், நண்பர்கள் எனக்கு அரணாகவும் இருந்தார்கள். இந்தக் காலத்தில் எனது கவிதைகள் இரகசியமாக இருந்தன. இரகசியமாக எழுதி இரகசியாக வெளிவந்தன. பாழ் நகரத்தின் பொழுது கவிதை தொகுப்பு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இந்தக் காலகட்டத்து அனுபவங்களே.

இதற்குப் பின்னர் நிலப் போராட்டங்களின்போது களத்தில் நின்று மக்களுக்காக எழுதியபோது ஏற்பட்ட அனுபவங்களும் என் பிந்தைய கவிதைகளுக்கு அடிப்படையாய் இருந்தன. பெருநிலம் கவிதை தொகுப்பு இவ்வாறே எழுதப்பட்டது.

IMG_3848

11. தங்களது படைப்புகளில் கவிதை பேசப்பட்ட அளவிற்கு கட்டுரை போன்றவை பேசப்படவில்லையே அது பற்றி தங்கள் கருத்து?
அப்படி சொல்லமாட்டேன். கட்டுரைக்கும் அதிகமான வாசகர்கள் உண்டு. குறிப்பாக தமிழக இலக்கிய இதழ்களில் எழுதும் கட்டுரை எனக்கு நிறைந்த வாசகர்களை தந்திருக்கிறது. தமிழகத்தில் சில நிகழ்வுகளுக்குப் போகும்போது அந்த வாசகர்களை சந்தித்திருக்கிறேன்.

12. ஈழ விடுதலையில் ஆயுத போராட்ட அளவிற்கு தத்துவார்த்த ரீதியானவை முன்னெடுக்கப்பட்டவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே அதை தாங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தோல்வி ஏற்பட்டு விட்டது என்று கருதினால் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கலாம். தத்துவார்த்தமான – கொள்கை ரீதியாக செம்மையான ஒரு போராட்டம் என்பதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உன்னதமான எடுத்துக்காட்டு. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அபாரமான வளர்ச்சி, உலக நாடுகளை ஈர்த்த விதம் போன்றவை சீரிய கொள்கையுள்ள ஒரு அமைப்பால் மாத்திரமே எட்டமுடியும். விடுதலைப் போராட்டம் உலகை பாதிக்கத்தக்க ஈர்க்கத்தக்க ஒரு போராட்டமாக இருந்தது. அப்படியொரு போராட்டத்தை உலகம் விரும்பாது. அதனாலேயே எங்கள் போராட்டத்தை உலகமே சேர்ந்து நசுக்கியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போராட்டம் முடிவற்றது. ஒடுக்குமறை உள்ளவரை தொடரும் என்றே கருதுகிறேன். எப்போது என்ன வடிவத்தில் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும். சீரிய தத்துவார்த்தமான போராட்டம் ஒன்றினாலே இது சாத்தியமானது.

13. தங்களது கவிதைகளானது காட்சி வர்ணனையாகவும் கவிதை நகல்களாகவும் கட்டுரைகள் செய்தியாகவும் மட்டுமே இருகிறது என்றும் அவ்வாறு இருப்பதே உங்களது படைப்பின் வெற்றி என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறதே அது பற்றி தங்கள் கருத்து?
கவிதையின் அடிப்படை காட்சிதானே. சங்க காலத்திலிருந்து கவிதைகளுக்கு காட்சிப்படுத்தல்தானே முக்கியத்துவமாக இருக்கிறது. கவிதையில் படிமக் கவிதைதானே செறிவானது. நான் கவிதையில் பல்வேறு விடயங்களை பதிவு செய்ய வேண்டிய தேவையிருந்தமையால் அதிகமும் காட்சிப்படுத்தலில் ஈடுபட்டிருக்கிறேன். இதுகூட என்னை அறியாமல் ஏற்பட்ட கவிதை செயல்தான். அழிந்துபோகக்கூடிய காட்சிகளை பதிவு செய்யுமொரு ஈடுபாடு இருந்திருப்பதை உணர்கின்றேன். கட்டுரைகளில் நான் அரசியல் ஊகங்களை செய்வதில்லை. பெரும்பாலும் மக்களின் நிலைசார்ந்த கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள் அவைகளின் விளைவுகள் தொடர்பாகவே எழுதுகிறேன். ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை எடுத்துரைப்பதே என் கட்டுரைகளின் நோக்கம். அவைகளே வாசகர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

14. 2010 ஆம் ஆண்டில் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபத்தின் சிறந்த ஊடாகவியலாளருக்கான இரு விருதுகளைப் பெற்றீhகள் அந்த பரிசு பற்றி, அப்போது தங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள் எவ்வாறிருந்தன?
அந்த விருதுகள் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு கிடைத்தன. இலங்கை அரசிடம் இதுவரையில் எந்த விருதும் வாங்கியதில்லை. எனக்கு விருது வழங்கிய நிறுவனம் ஒரு சுயாதீன கூட்டு நிறுவனம். விருதுக்காக நீண்ட நாட்களின் பின்னர் கொழும்பு சென்றேன். அந்த விருது வழங்கும் விழாவில் நிலத்திற்காக போராடும் ஈழ மக்கள் தொடர்பாக நான் எழுதிய கட்டுரைகளை திரையில் காண்பித்து விருதை அறிவித்தபோது மிகவும் ஆறுதல்பட்டேன். ஈழ நில ஆக்கிரமிப்புக்கு இன அழிப்பே காரணம் என்பதும் அதற்கு தீர்வு விடுதலையும் தனி ஈழமுமே என்று வலியுறுத்திய கட்டுரைகளும் உள்ளடங்கியிருந்தன. முடிவில் ஒரு சிங்கள தொலைக்காட்சி விருது பெற்ற அனுபவத்தை குறித்து கேட்டபோது எங்கள் மக்களின் மிக முக்கியமான பிரச்சினை ஒன்றுக்கு கிடைத்த கவனமாகவும் அங்கீகாரமாகவும் உணர்வதைப் பற்றி குறிப்பிட்டேன்.

15. இறுதிக்கட்ட போர், அதற்குப் பின்னாக நடக்கும் விடயங்கள் தொடர்பாக எழுதி வரும் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தாங்கள் எவ்வாறு வேறுபடுவதாக உணர்கிறீர்கள்?
இப்போதுதான் மிக நெருக்கடியான கால கட்டம். ஈழத்தில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படுகின்ற பல இன அழிப்புச் செயல்களுக்கு இலக்கியவாதிகளே துணைபோகின்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. புலிகள் இயக்கத்தை போஸ்மோட்டம் செய்ய வேண்டும் என்று கொச்சைப்படுத்துபவர்களை நான் எதிர்க்க தயங்குவதில்லை. ஆனால் அதிகார வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் இந்த எழுத்தாளர்களை எதிர்க்க பலருக்கும் பயம். அவர்களது அங்கீகாரம் தேவை என்பதும் அந்த பயத்திற்கு காரணம். எல்லாமும் சரியாகிவிட்டது என்று இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் நடவடிக்கையிலும் சில இலக்கியவாதிகள் ஈடுபடுகின்றனர். அவர்களை எதற்கும் அஞ்சாமல் எதிர்தரப்பில் நின்று எதிர்க்கிறேன். ஈழத்தில் மௌனமாய் வாழும் எழுத்தாளர் பலருண்டு. நான் மௌனமாய் மனச்சாட்யோடு வாழும் எழுத்தாளர்களின் பக்கம் இருக்கிறேன். விடுதலைக்காக தேசத்தின் விடியலுக்காக ஒடுக்கப்பட்ட எங்கள் சனங்களுக்காக எதையும் சுமக்கும் எதனையும் எதிர்கொள்ளும் எழுத்தாளர்களின் பக்கம் இருக்கிறேன்.

16. தங்களது அடுத்த கட்ட இலக்கிய நகர்வு பற்றிக் கூறுங்களேன்?
சில புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன. ‘I AM NOT A SRI LANKAN’ என்ற ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுதி ஒன்று வெளிவர இருக்கிறது. அத்துடன் நாவல் ஒன்று எழுதும் பணியிலும் இருக்கிறேன். அத்துடன் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ என்ற புதிய கவிதை தொகுதி ஒன்றை தொகுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறேன்.

நேர்காணல் : மா.அருள்மணி, பாரதியார் பல்கலைக்கழகம்

Related posts

*

*

Top