ஏவிளம்பிவருடம் புதியனபுகுதலில் புதுமைகள் செய்யட்டும்!

Barack Obama

- பேராசிரியா் கு.மிகுந்தன்

2017 சித்திரையில் நன்மைகள் பலகொண்டு சிங்கள தமிழ் புதுவருடம் இனிதாகவே பிறந்திருக்கின்றது. இப்புதுவருடத்தினை இம்முறை அமைதியாக அழகாக வெடிகளின் சத்தமின்றி மக்கள் வரவேற்றிருக்கின்றார்கள். புதுவருடம் பிறக்கும் போது இரவில் காதைப்பிளக்கும் வெடிச்சத்தங்களைக் கேட்டு மக்கள் வெறுப்படைந்ததும் பலர் சினந்து கொண்டதுமுண்டு. போர் நிகழ்ந்த மண்ணில் மீண்டும் வெடிச்சத்தங்களை விரும்பியும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பலவகை வெடிகளின் வியாபாரமும் அதன் வெடிச்சத்தமும் வழக்கமாக பலமாக இருக்கும் ஆனால் இம்முறை இந்த கொண்டாட்டத்தில் மக்கள் சாந்தமாக மற்றையவர்களை மதித்து கொண்டாடியிருப்பது மகிழ்வுக்குரியதாகின்றது. இதுவே வருடம் இனிதாக பிறந்ததற்கான அடையாளமாகும். இனங்களை மொழியினூடாக இணைக்கும் புதுவருடம் இது. இனங்களுக்கிடையே புரிந்துணர்வு மேன்மையுற்று பகையுணர்வு அற்றுப்போய் ஒருவரையொருவர் மதிக்கத்தக்கதான வாழ்க்கையை ஏவிளம்பி புதிய வருடம் கொண்டுவரும் என பிரார்த்திப்போம். எமது தேசத்திற்கென சிறப்பான புதுவருடமிது. இத்தீவில் நடைபெற்ற கலகம் நீங்கி மக்கள் ஜக்கியத்துடனும் சகல உரிமைகளுடனும் பாக்கியங்கள் அனைத்தும் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும் இந்நன்னாளில் அனைத்து மக்களும் இன்னல் தீர்ந்து சகல சௌபாக்கியங்களுடனும் வாழ வழி கிடைத்திட வேண்டும்.

Prof.G.Mikunthanஆனாலும் விவசாய பெருமக்களுக்கு மகிழ்ச்சியான தருணமிதுவல்ல. சுட்டெரிக்கும் வெய்யில் ஒருபுறம், மழையின்றி பயிர்கள் வாடுவது இன்னொருபுறம். இருப்பினும் ஆங்காங்கே ஒருசில இடங்களில் அதிசயமாக மழைகாற்றுடன் பெய்திருக்கின்றது. இந்த சூழலில் இனி எப்படி வாழப்போகின்றோம். ஒவ்வொருவரும் உஸ்ணம் தாங்காது செயற்கை குளிரூட்டிகளின் தேவையை தேடியோடுவதாக தெரிகின்றது. இயற்கையை செயற்கையாக்கி விட்டு செயற்கை குளிரூட்டிகளை வைத்துதான் வாழ்க்கை நடாத்தப்போகின்றோமா? அப்படியாயின் விவசாயிக்கும் விவசாயத் தொழிலுக்கும் செயற்கை குளிரூட்டி தேவைப்பட்டால் அதற்கான மொத்த சக்திக்கு எங்கு செல்வது?

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் ஊரில் (வீணே!) உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்’ என்பது எம்மினிய உறவுகளுக்கு அப்படியே பொருந்தியிருக்கின்றது பார்த்தீர்களா? உழவுத்தொழிலை கேவலமானதாக நினைத்து கழுத்துப்பட்டியும் கால்களுக்கு சப்பாத்தும் இடுப்பிலொரு அலைபேசியும் அவசரத்திற்கு அசைவதற்கொரு அப்பாச்சியும் தான் ஸ்ரைலான தொழிலென நம்மவர்கள் நினைத்திருப்பது மாத்திரமல்ல அந்த எடுப்புக்குள்ளேயே சிறைப்பட்டிருக்கின்றனர் என்பதனை இன்னும் நம்பாமலிருக்க முடியவில்லை. உலகம் போகின்ற போக்கில் நம்மவர்கள் விஞ்ஞானத்தின் கருவிகளை பயன்படுத்துபவர்களாக மட்டுமே இருக்கப்போகின்றார்கள் தவிர புத்தாக்கத்திற்குள்ளே உள்வாங்கப்பட முனையவில்லை.

புதுவருடம் என்னும்போது மக்களிடையே பலமான எதிர்பார்ப்புக்கள் உருவாகின்றன. இந்த அனைத்து எதிர்பார்ப்புக்களும் விரைந்து தீர்த்து வைக்கப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போமாக. மக்கள் தங்களது தேவை கருதி தாமாகவே வீதியில் இறங்கி போராட வேண்டிய காலகட்டத்தினுள் வந்திருக்கின்றார்கள். இவ்வாண்டில் மக்கள் அனைவருக்குமான தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என நம்புவோமாக. நம்பினார் கெடுவதில்லை என நான்கு மறைகளும் கூறிய பின்பு நாமாக முயற்சி செய்யாதிருக்கலாமா?

காலநிலையில் மாற்றமேற்பட்டிருக்கின்றதனை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வண்ணமாக வெய்யில் வழக்கத்திற்கு மாறாக கடுமையாக சுட்டெரிக்கின்றது. வரட்சியான காலநிலையில் காற்று வீச மறந்து போய்விட்டது. அப்படியிருந்தும் வரும் உஷ்ணக்காற்று மேலும் உடலை உலர வைத்து விடுகின்ற அசாதாரண காலநிலை நடந்து கொண்டிருக்கின்றது. காலபோகம் சிறுபோகம் அனைத்துமே மாற்றத்திற்குள் உள்ளார்ந்திருப்பதனாலேயே இனிவரும் விவசாயம் எதிர்பார்த்த பலனைத்தருவதற்கு வரப்போகும் பருவத்தே பயிர்செய்தல் வேண்டும். இங்கே பருவமென்பது விவசாயத்திற்கு சாதகமான காலமாகும். ஆனால் வழக்கமான காலபோகம் மற்றும் சிறுபோகம் என்பன எதிர்பார்த்த காலத்தில் எதிர்பார்த்த விளைச்சலைக் கொடுக்கவில்லை.

மக்களுக்கு காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை முழுமையாக விளங்கப்படுத்த தேவையான நடைமுறைகளை செய்தல் வேண்டும். காலநிலை மாற்றம் சார்ந்து பாடசாலை மட்டத்தில் மாணவருக்கு கொடுக்கப்படும் செய்திகள் மற்றும் பயிற்ச்சி வகுப்புக்கள் தங்குதடையின்றி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழிசெய்தல் வேண்டும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதற்கு ஊடகங்களின் அனுசரணை முழுமையாக தேவைப்படுகின்றது.

புதுப்பிக்கத்தகக் சக்தி என சூரிய ஒளியினைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். கடந்த வாரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் சன்பவர் நிறுவனத்தினால் சூரியசக்தியை பெறும் உபகரணங்கள் அங்குள்ள கட்டடத்தின் கூரையில் பொருத்தப்பட்டு கற்கைகளுக்காகவும் ஆய்வினை மேற்கொள்ளவும் தேவை கருதிய மக்களுக்கான ஆலோசனையை செய்யவும் வழிவகுத்திருக்கின்றார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு வடமாகாணமெங்கும் இச்சூரியசக்தியை பயன்படுத்தும் கருவிகளை நாம் மலிவான விலையில் பெற்று பயன்படுத்த வேண்டும். அதற்கான களம் விரைவில் திறக்கப்படும் என நம்பலாம்.

புதிய வருடம் அனைத்தையும் பயன்படுத்தும் வருடமாக இல்லாது புத்தாக்கங்களை ஊக்குவிக்கும் வருடமாக அமைதல் வேண்டும். பயனாளிகளாக என்றுமே இல்லாது படைப்பாளிகளாக நாம் மாறவேண்டும். இதற்காக மாணவர்களையும் இளையவர்களையும் ஊக்குவித்தல் வேண்டும். நல்லதே நடக்கும் என நம்புவோம். வருங்காலம் எமக்கானது. மற்றையவர்களை ஊக்குவித்து அவர்களை சிறப்பான வாழ்க்கையை வாழ எம்மாலான உதவிகளை செய்வோமாக. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானாகவே வளரும் என்பது உண்மை என அனுபவத்தில் எழுதும் இக்கைகளும் உணர்ந்திருக்கின்றன. வாழ்க நீவிர் பல்லாண்டு. மனிதம் இருப்பதை நாமும் வாழ்ந்து காட்டுவோம்.

Related posts

*

*

Top