பட்டினி கொடுமையும் குப்பைமேடு சரிந்த இடரும்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

லக உணவு தாபனத்தின் (Food and Agriculture Organization)  கடைசியாக நடைபெற்ற கவுன்சிலில் உரத்துக்கூறப்பட்ட செய்தியாக பட்டினியை நோக்கி உலகம் என பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 20 மில்லியன் மக்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் பட்டினியால் இறக்கப் போகின்றனர் என கட்டியங் கூறியிருக்கின்றார்கள். இது வெறும் செய்தியல்ல.  உலக நடப்பினைப்  பார்க்கும்போதும் காலநிலையின் கடினத்தை உணர்ந்தபோதும் இது சாத்தியமாகும் என நம்பித்தான்ஆக வேண்டியிருக்கின்றது. உலகில் குறிப்பிட்ட தொகை மக்களுக்கு உணவில்லை என்பதும் அதனால் பட்டினிச்சாவை தடுக்க முடியாதிருக்கும் என்னும்போது உள்ளார்ந்து ஒரு நெருடல் உருக்கொள்கின்றது பாருங்கள். இது மனிதகுலத்திற்கான சாபம் என்பதனைத்தவிர வேறென்பது?. தனிமனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினையே அழித்து விடுவோம் என்ற அறைகூவல் ஓய முன்பு உணவில்லையென்றாலும் ஜெகத்தினை அழித்தே தீருவோம் என்றாகியிருக்கின்ற ஓர்மம் மனித அவலமாக ஏவிளம்பியில் நடக்கின்றது. வெறுனே கலியுக காலமிது அதனால் நடக்கின்றது என வாளாவெட்டியாக நாமும் இருக்கப் பழகிவிட்டோம்.

Prof.G.Mikunthanஒரு பக்கம் பட்டினிச்சாவை முழுமையாக தடுக்க வேண்டுமென பலவிதமான திட்டங்களை உலக தாபனங்களும் பல நாடுகளின் அரசாங்கங்களும் முனைப்புடன் செயற்பட முனைந்தாலும் நாம் எதிர்பார்க்கின்ற உணவுற்பத்தி முழுமையாக சாத்தியமா என்பதனை நாம் சற்றேனும் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். எங்கும் பகையுணர்வும், அரசியல்மயமும், போர்ச்சூழலும், அதற்கான முன்னேற்பாடுகளும் என உலகத்தின் நடப்புக்கள் அழிவை நோக்கியே விரிந்து செல்கின்றன. அழிவுக்கான முனைப்பை காட்டுகின்றதிலேயே பல நாடுகள் இருப்பதுவும் சமாதானம், புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு என்பன எம்மை விட்டு விலகியே நிற்பதுவும் இவ்யுகத்தில் பட்டினிச்சாவுக்கு காரணமாக இருக்கின்றது. சந்திரனுக்கு நீர் தேடிச்சென்ற விஞ்ஞானத்தினால் இங்கே குடிப்பதற்கு நீரைக்கொடுக்க முடியாதிருக்கின்றது.

சோமாலியா, வடகிழக்கு நைஜீரியா, தென்சூடான், யேமன் ஆகிய நாடுகளில் தற்போது கொடூரமான பட்டினி தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. அந்த நாடுகளிலுள்ள மக்கள் உண்ண உணவின்றி அதிலும் போசாக்கான உணவின்றி தினந்தினம் இறந்து கொண்டிருக்கும் செய்தி அனைவரையும் உலுக்கி விட்டிருக்கின்றது. மழலைகள், வயதானோர், பெண்கள் என பாகுபாடின்றி அனைவரும் உணவுப்பற்றாக்குறைக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் போதுமான உணவுற்பத்தி செய்யப்பட்டு தமது தேவைக்கதிகமானதை வர்த்தகத்தில் அதுவும் உலக நாடுகளில் அவற்றுக்கான விலையில் வீழ்ச்சியேற்படாத வண்ணம் கடலில்கொட்டும் நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் நிதியென்றும் கடனென்றும் வளர்முக நாடுகளுக்கு தருவதாகவும் பிச்சையிடுவதாகவும் கூறிக்கொள்ளும் மேலைத்தேயம் மறுபக்கத்தில் அன்றாட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையினை வீழ்ச்சியடையாது பார்த்துக் கொண்டும் இருக்கின்றன என்றால் பாருங்களேன். இந்த இராஜதந்திரத்தில் அடிபட்டுப்போன மூன்றாம் உலகநாடுகள் மீளவும் முடியாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியாமல் சிக்கித்தவித்து சின்னாபின்னமாகி விடுவதையும் அவதானிக்கலாம். பெருவளர்ச்சி கண்டிருக்கும் விஞ்ஞான தொழில்நுட்பத்தினால் இந்த பஞ்சம் பசி பட்டினியைத் தீர்க்கமுடியாதென்றா நினைக்கின்றீர்கள். முடியும் ஆனால் அவரவர்கள் மனது வைத்தால்தானே இவையெல்லாம் சாத்தியம். விஞ்ஞானம் நினைத்தாலும் மனிதன் நினைக்க வேண்டுமே! போருக்காக மனிதனை அவர்களின் உடைமைகளை அழிப்பதற்காக செலவிடப்படும் பணத்தை ஒன்று சேர்த்தால் உலகில் உற்பத்தியாகும் உணவினை அனைவருக்கும் கிடைக்கச் செய்தால் பஞ்சமும் பட்டினியும் ஒரு பொருட்டல்ல. மேலைத்தேய நாடுகளின் சட்டவரைபுகள் மற்றைய நாடுகளினை அடிமைப்படுத்துவதிலும் அவர்களினை சுயமாக இயங்க அனுமதிக்காமையும் சொல்கேட்டு நடக்கும் செல்லப்பிள்ளைகளாக வைத்திருப்பதிலும் அக்கறைகாட்டுவதனால் இத்தகைய எதிலும் தங்கியிருக்கும் நாடுகள் தம்மால் ஒரு நிலைக்குமேல் எதுவும் செய்யமுடியாது இருக்கின்றன.

சோமாலியா, வடகிழக்கு நைஜீரியா, தென்சூடான், யேமன் நாடுகளுட்பட பல நாடுகனில் உள்நாட்டு கலவரங்களினாலும் போர்களினாலும் அந்தந்த நாடுகளின் பொருளாதார வளங்கள் அழிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கின்ற காரணத்தினால் இந்த நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவற்றுடன் சேர்ந்து காலநிலை காரணிகளும் வரட்சியையும், பூமியதிர்ச்சியுடனான வெள்ள அனர்த்தத்தையும் இன்னும் சூறாவளியையும் தோற்றுவிப்பதனால் மேலும் பிரச்சனைகள் பூதாகாரமாக பெருகி விட்டிருக்கின்றன.

2016ஆம் ஆண்டு தகவலின்படி யேமனில் 14.1 மில்லியன், ஆப்கானிஸ்தானில் 8.5 மில்லியன், வடக்கு நைஜீரியாவில் 8.1 மில்லியன், சிரியாவில் 7.1 மில்லியன் மற்றும் தெற்கு சூடானில் 4.4 மில்லியன் மக்களும் நடைபெறும் போரின் காரணமாக இடம்பெயர்ந்திருப்பதாக உலக உணவு தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இயற்கை அனர்த்தத்தின் காரணமாக எதியோப்பியாவில் 9.7 மில்லியன், மலாவியில் 6.7 மில்லியன், சிம்பாப்வேயில் 4.1 மில்லியன், கெய்ற்றியில் 1.5 மில்லியன் மற்றும் மொசாம்பிக்கில் 1.1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு மிருக்கின்றார்கள். இந்த தகவல்கள் பாரியளவில் நடைபெற்ற பாதிப்புக்களை காட்டி நிற்பினும் மற்றைய நாடுகளிலும் இடப்பெயர்வுகள் பலவும் போரினாலும் இயற்கையனர்த்தங்களினாலும் நடைபெற்றிருக்கின்றன.

இவையொரு பக்கம் இருக்க இனியொரு பசுமைப்புரட்சியில் உலகம் என்ன செய்யப்போகின்றது என்னும் வினா நிச்சயமாக உங்கள்முன் எழுந்திருக்கும். 60களில் நடைபெற்ற பசுமைப்புரட்சியின் தாக்கம் இன்னும் எமது தேசத்தில் உணவுற்பத்திக்கு உயிர்கொடுத்திருந்தாலும் எமது சூழலை வெகுவாகவே பாதித்திருக்கின்றது. மேலைத்தேயத்தின் சிந்தனைகளுக்குட்பட்டு எமது வளத்தை நாம் வினைத்திறனாக பயன்படுத்தத் தவறியதும் எமது சூழலை மாசுபடுத்தும் காரணிகளுக்கு நாம் அடிமையானதையும் தவிர வேறு எதனையும் நாம் புதிதாக உண்டு பண்ணவில்லை. அதிகரித்துவரும் சுகாதார சீர்கேடுகள் இவற்றை கட்டியங்கூறி நிற்பதனை நாம் கண்ணூடாக காணலாம். எமது நாட்டில் அண்மையில் நடைபெற்ற குப்பைமேடு சரிவும் அதனால் காவுகொள்ளப்பட்ட உயிர்களும் எமது கவலையீனமே தவிர வேறெதுவுமில்லை. குப்பைகளை வினைத்திறனாக மீள்சுழற்சி செய்யும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமையளிக்காமையும் புத்தாக்கங்களை அத்துறைசார்ந்து முன்நகர்த்தாததுமே இவ்வாறான பிரச்சனைகளை முன்கூட்டியே எதிர்கொள்ள திராணியற்று இருக்க வைத்துள்ளது. உருவாகும் கழிவுகளில் ஏறக்குறைய 80-85 சதவீதம் சேதனக்கழிவுகளாகவும் ஏனையவற்றில் விரைந்து உக்காதனவும்இ கண்ணாடிஇ உலோகம் மற்றும் பிளாஸ்ரிக் என்பனவும் காணப்படுகின்றன. சேதனக்கழிவுகளை இத்தேசம் முழுவதுமாக மீள்சுழற்சி செய்யும் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால் அநேகமாக கழிவுகள் கூட்டுரமாக மாற்றப்பட்டு மீற்சுழற்சி முறையில் பயிர்ச்செய்கைக்கு பயன்பட்டிருக்கும். ஆனால் எமது கவலையீனம் இங்கும்; உயிர்களைக்காவு கொள்வதில் இருந்திருக்கின்றது.

மேலைநாடுகளில் சூழலை மாசுபடுத்தும் காரணிகளின் செயன்முறைகளுக்கு எதிராக இறுக்கமான சட்டதிட்டங்கள் வரையப்பட்டு அவை அமுல்படுத்தப்பட்டும் வருகின்றன. இதனை எமது நாட்டில் ஏன் செய்ய முடியவில்லை? இவையெல்லாம் எமது நாட்டில் அமுலிலிருக்கும் கோவைகளின் இறுக்கமற்ற தன்மையையும் அவற்றை முறையாக அமுல்படுத்தாத மக்கள் மயப்பட்ட சபைகளுமாகும். நாட்டின் சட்டதிட்டங்கள் வரையப்படுவதும் அவற்றை அங்கீகரிப்பதும் முறையாக அவற்றை நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியிருக்கின்றது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா என கண்காணிப்பதும் அவற்றிலுள்ள தடைகளை நீக்கி முறையான செம்மையான நடைமுறைகளை உருவாக்கிக் கொடுப்பதும் அத்துறை சார்ந்த அதிகாரிகளின் கடமையாகும். அனைத்தையும் அரசியல்மயமாக்கி சட்டமும் திட்டங்களும் அரசியல் செல்வாக்கினுள் சிறைபட்டிருப்பதனால் இவற்றுக்கு என்றுமே தீர்வு கிடைக்காது என்றாகி விட்டது.

உலக நாடுகளில் பசிபட்டினி என நாம் பேசிக்கொண்டாலும் எமது நாட்டிலும் இதற்கான சூழ்நிலைகள் இல்லையென்று நாம் வாளாதிருக்கலாகாது. அன்றாடம் வேலைசெய்து அந்த ஊதியத்தில் வாழ்க்கை நடாத்துபவர்களுக்கு இத்தகைய பட்டினியின் தாக்கம் அதிகம். இன்றும் பலருக்கு ஒருவேளை உணவு கூட கிடைக்கவில்லை என்பதும் உண்ணும் உணவு சமநிலையுணவாக இருக்காதிருப்பதும் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதும் எமக்கான எதிர்கால சவால்களாகும். ஊட்டச்சத்து குறைபாடு தனிமனித சுகாதார சீர்குலைவுக்கு வழிகோலும். பட்டினியை போக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் அதேநேரத்தில் சுகாதாரமான உணவினை உற்பத்தி செய்வதற்கும் அதனை மக்கள் இலகுவாக பெறுவதற்கும் வழிவகை செய்தல் வேண்டும். கழிவு முகாமைத்துவத்திற்கு முக்கியத்துவமளித்து அதனை முழுவதுமாக மீள்சுழற்சி செய்து சேதன விவசாயத்திற்கு உரமூட்டுவது இன்றைய சிந்தனைக்கும் நாளைய நல்வாழ்வுக்குமானதாகும். இது அனைவருக்குமான மே தினச்செய்தியாக வெறும் அரசியல் வார்த்தை ஜாலமாக இருந்து விடாது அனைவரும் இணைந்து செயலாற்றும் செயற்பாடாக மாற்றம்பெற வேண்டும்.

Related posts

*

*

Top