ஒருவித்திலையினதும் இருவித்திலையினதும் இணைவுதரும் அர்த்தங்கள் பல!

Barack Obama

- பேராசிரியா் கு.மிகுந்தன்

யிர்ச்செய்கையில் தனியான பயிராக (Mono crop) பயிர்செய்யப்படுவது வழமை. காலங்காலமாக தனிப்பயிரை பயிர்செய்வது எம்மவர்களின் தெரிவாகவும் இருந்து வருகின்றது. இதற்கான காரணமாக தனித்துவமாக எதனையும் சுட்டிக்கூற முடியாதிருப்பினும் தனிப்பயிரினால் ஆதாயம் அதிகமென எம்மவர்கள் காரணமாகக் கூறுவர். அதனை முழுமையாக நியாயப்படுத்த முடியவில்லையாயினும் அது பணப்பயிராக (Cash crop) அதிலும் அதிகூடிய வருவாய்தரும் பயிராக இருந்தால் இந்த நியாயப்படுத்தலுக்கு அது வலிமை சேர்ப்பதாக இருக்கும். ஆக மொத்தத்தில் தனிப்பயிராக பயிர்செய்வதால் ஆதாயம் அதிகமென வாதாடுபவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அந்த பயிரில் எந்தவிதமான பீடை பிரச்சனைகளும் இல்லாதவிடத்து இதனை ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் நாம் பயிரிடும் பயிர்களின் பீடைப்பிரச்சனை பாரிய பிரச்சனையாக முன்னெழுந்துள்ளதனை உணர்ந்தால் நாம் எமது முடிவினை மாற்றவேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படுகின்றோம். தனிப்பயிராக பயிர்செய்வதனால் ஏற்படும் பீடைப்பிரச்சனையிலிருந்து தீர்வாக எதனை சிந்திக்கலாம் என்பதற்கான விடையே இன்றைய தலைப்பு.

Prof.G.Mikunthanஅதென்ன ஒருவித்திலையும் இருவித்திலையும்? சாதாரண மக்களுக்கு இது எவ்வாறு விளங்கும் என நீங்கள் கேட்பது எழுதும் இக்கைகளுக்கும் கேட்கின்றது. அது ஒன்றும் பெரியவிடயமல்லவே. நெல், சோளம், இறுங்கு, குரக்கன், தினை, வரகு, சாமை, வெங்காயம், இஞ்சி, மஞ்சள், வாழை, கரும்பு, தென்னை, பனை, கமுகு, மற்றும் புற்கள் என ஒருவித்திலைத் தாவரங்கள் பலவுண்டு. இவற்றின் நீளமான இலையை வைத்துக்கொண்டும் இலைகளிலுள்ள நரம்புகளின் அமைப்பை வைத்துக்கொண்டும் நீங்கள் அவற்றை ஒருவித்திலை என கண்டுபிடித்து விடலாம். மாறாக இருவித்திலை தாவரங்கள் எனப்படுபவை நாம் வழமையாக பயிரிடும் கத்தரி தக்காளி மிளகாயிலிருந்து அவரைப் பயிர்கள்மற்றும் பல்லாண்டு தாவரங்களான பப்பாசி, மா, பலா, என பலவும் இதனுள் அடங்கும். சரி இங்கே ஒருவித்திலைத் தாவரங்களுக்கும் இருவித்திலைத் தாவரங்களுக்குமான முக்கியமான வேறுபாடுகளை வரிசைப்படுத்தினால் இவை இரண்டும் அடிப்படையில் அமைப்பில் வித்தியாசமானவை. அத்துடன் இவற்றின் தோற்றமும் வித்தியாசமானது. மேலும் இவற்றின் இழையவியல் அமைப்பிலும் வேறுபாடுகள் காணப்படும். இவற்றுடன் முக்கியமானது என்னவெனில் இவ்விரண்டினதும் தேவைகள் வேறுவேறானவை. அதாவது இவற்றினது ஊட்டச்சத்து தேவை வித்தியாசமானதாக இருப்பதனால் ஓரிடத்தில் ஒருவித்திலையையும் இருவித்திலையையும் வளர்க்கும்போது இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டிபோடாது வளர்ந்திருப்பதை நாம் காணமுடியும்.

இதில் என்ன அதிசயமென்றால் ஒருவித்திலை பயிரிலும் இருவித்திலைப் பயிரிலும் தாக்கும் பீடைகள் வேறுபட்டவையாக இருப்பதுதான். இதுதான் இயற்கையின் நியதியோ என அதிசயிக்க வைத்திருக்கின்றது. அதனால் தனியாக ஒருவித்திலையையோ அல்லது இருவித்திலை பயிரையோ பயிர்செய்யாது இரண்டையும் கலந்து கலப்பு பயிராக பயிர்செய்தால் அவற்றில் ஏற்படும் பீடைப்பிரச்சனையை கணிசமான அளவு குறைத்து விடலாம். இதனை இப்படி கூறினால் எப்படி விளங்கும்? உதாரணத்துடன் தந்தால்தானே புரிந்துகொள்ள முடியும் என்றல்லவா கேட்கின்றீர்கள். சரி தொடர்ந்து உதாரணங்களைப் பார்ப்போம்.

மரக்கறிப்பயிர்களை நடவு செய்யும்போது குறிப்பாக மிளகாய் மற்றும் கத்தரிஇ தக்காளியை நடவு செய்யும்போது வெங்காயத்தை சேர்த்து நடவு செய்யலாம். ஏனெனில் மிளகாய் கத்தரி மற்றும் தக்காளி பயிர்களில் தாக்கும் பூச்சிபீடைகள் வெங்காயத்தில் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. அதேபோல வெங்காயப் பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிபீடைகள் மிளகாய், கத்தரி தக்காளியில் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. மேலும் ஒருவித்திலை பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிபீடைகள் இருவித்திலைக்களைகளில் தங்கி வாழமுடியாதன அதுபோல இருவித்திலைக்களைகளில் வாழும் பூச்சிபீடைகள் ஒருவித்திலை தாவரங்களில் சேதத்தை ஏற்படுத்த முடியாதனவாகும். இவ்வாறான இயற்கையின் நியதியை நாம் முழுமையாக புரிந்துகொண்டால் பூச்சிபீடைகளை கட்டுப்படுத்தவும் களைகளை கட்டுப்படுத்துவதில் கையாளும் யுக்திகளை இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவித்திலையையும் இருவித்திலையையும் ஒன்றாகக்காணும் பாக்கியம் ஏ9 பாதையில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும். பளைப்பகுதியைத் தாண்டி இயக்கச்சியை நோக்கி பயணிக்கும்போது பாதையின் இருமருங்கிலும் பனையைச்சுற்றி ஆல் அல்லது அரச மரம் வளர்ந்திருப்பதை காணலாம். இந்த காட்சி இயற்கையின் வெளிப்பாடு பலவற்றை அடித்துச் சொல்லியிருந்தாலும் சூழலியல் சார்ந்து குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லியிருக்கின்றது. அதாவது ஒருவித்திலையும் (பனையும்) இருவித்திலையும் (ஆல் மற்றும் அரசமரம்) ஒன்றாக வளர்ந்தால் ஒன்றுக்கொன்று போட்டியின்றி ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து வளரமுடியுமென்றும் ஒவ்வொன்றும் தங்களது தனித்துவத்தை பேணமுடியும் எனவும் காட்டியிருக்கின்றன. இங்கே பனை வடமாகாணத்தை பிரதிபலிப்பதையும் அங்குள்ள பெரும்மான்மையான மக்களான தமிழ்மக்களை அடையாளப்படுத்துவதனையும் அரசமரம் தென்பகுதியின் பெரும்பான்மை மக்களையும் குறிப்பிட்டு கூறினால் பௌத்த மக்களை அடையாளப் படுத்துவதையும் காணலாம். அதாவது இரண்டு மரங்களும் இரு இனங்களை அடையாளப்படுத்தும்போது இரண்டும் தனித்தனியாக வாழவல்லமையுள்ள மரங்களாயினும் தத்தமது மொழிஇ மதம்இ கலைகலாச்சாரம் என்பனவற்றை பேணிப்பாதுகாக்கும் அதேநேரத்தில் அவற்றுக்கான அடையாளங்கள் அங்கீகரிக்கப்படும்போது இரண்டும் ஒன்றாக குறுகிய இடத்தில் (ஒரு தீவில்) ஒற்றுமையாக வாழமுடியும் என்பதனை எடுத்துக் காட்டியிருக்கின்றன. இது இயற்கை நமக்கு காட்டியிருக்கும் உதாரணமாயினும் அதனையும் தாண்டி எமக்கான நடைமுறைச் சாத்தியமான விடயமாகவும் கருதமுடியும். ஒரு சூழல்தொகுதியில் தாவரங்கள் தாமாக வாழ்ந்து எமக்கு காட்டியிருக்கும் உதாரணத்தை நாம் உதாரணமாக அல்லாது அதனுள் பொதிந்திருக்கும் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளல் அவசியமாகின்றது அல்லவா.

One Comment;

  1. Sathiya moorthi.K said:

    ஒரு வித்திலை தாவரம் மற்றும் இரு வித்திலை தாவரம் வேறுபாடுகள் விளக்கமாக

*

*

Top