கணனி தொழில்நுட்பத் தொழிலிலிருந்து விடுபட்டு விவசாய பண்ணை நோக்கி!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

ற்சமயம் எங்கும் தொழில்தாருங்கள் என்னும் கோரிக்கைகளே பரவலாக முன்னெழுந்துள்ளதனை அவதானிக்கலாம். இதற்குப் பல காரணங்கள் தரப்பட்டாலும் அனைவருக்குமான தொழில்தருவதற்கான முன்னேற்பாடுகள் மூன்றாம் உலக நாட்டின் அரசகொள்கை வகுப்பாளர்களிடம் இல்லாதிருப்பதும் அனைவருக்கும் அரச தொழில் கொடுப்பதென்பதற்கான சாத்தியம் குறைவென்பதுமாகும். ஆனாலும் க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சிறப்பாக பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்; பலத்த கனவுகளுடன் தம்;குடும்பச்சுமைகளையும் சுமந்தபடி பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டம் பெற்றபின் அடுத்தது என்ன எனத்தீர்மானிக்க முடியாதபடி ஆகிவிடுகின்றார்கள். வெளிநாடுகளில் தங்களது வேலையை பெறுவதற்கு பலருக்கு ஆர்வமிருந்தும் அவர்களிடம் போதியளவு நிதியின்மையும் இன்னல்களுக்குள்ளான குடும்பநிலைமையும் இன்னும் அவர்களுக்கு சுயமான தொழில்செய்வதற்கான ஆளுமையின்மையும் காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு பட்டப்படிப்பிற்கும் கற்றவர்களுக்கான தொழில்பெறுதலுக்கான வாய்ப்புக்கள் மற்றும் மேற்படிப்பிற்கான வசதிவாய்ப்புக்கள் என்பனவற்றினை ஆராய்ந்து தான் அந்தந்த கற்கைநெறியினை கற்பிக்கின்றார்கள். இதில் கற்கைக்கான திட்டமிடலில் மாணவர்களது அறிவு விருத்திக்கு அப்பால் ஆளுமையினையும் திறன்களின் விருத்தியும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. கற்றபின் தமது திறன்விருத்திக்கேற்ப வேலையை பெற்றுக்கொள்வர் என்னும் எதிர்பார்ப்புடனும் அனுபவத்திற்கூடாக ஆளுமையினை வளர்த்துக்கொள்ளவும் அதற்காக தொழில்சார் பயிற்சிகள் கற்றல் காலங்களிலேயே வழங்கப்படுவதும் என இக்கற்கைநெறிகள் மீளவும் நெறிப்படுத்தப்;பட்டு உலகவங்கி அனுசரணையுடனான திட்டங்களுக்கூடாக நடைபெறுகின்றன. ஆனால் அனைவரும் எதிர்பார்த்தளவு அடைவு இத்திட்டங்களினால் கிடைக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

Prof.G.Mikunthanஅளவுக்கதிகமான மாணவர்கள் குறிப்பிட்ட பிரிவு அல்லது துறைசார்ந்த பட்டப்படிப்பிற்குள் உள்வாங்கப்படும் போது அவர்கள் கற்று வெளியேறும் காலத்தில் அங்கொரு தொழில்ரீதியான தேக்கநிலை வழமையாகக் காணப்படுகின்றது. இந்த தேக்கநிலை வருடாவருடம் பல்கலைக்கழகங்களுக்கு உட்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இன்னும் அதிகரித்துக்கொண்டு செல்வதனையும் அவதானிக்கலாம். குறிப்பாக கலை மற்றும் விஞ்ஞான பட்டதாரிகளின் வேலைவாய்ப்பென்பது விசேடமாக கருத்தில் கொள்ளப்படவேண்டியதாகும். இவர்களின் வேலைவாய்ப்பென்பது அதிகமாக உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப உருவாக்கப்படாது விட்டால் இவ்வாறான பிரச்சனைகளுக்கு வருடாவருடம் முகங்கொடுக்க வேண்டியிருக்கும். மாறாக இந்த எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே தொழில்நுட்ப பட்டப்படிப்பு இலங்கையெங்கும் பலபல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டு அதற்காக விசேடமாக க.பொ.த உயர்தரத்திலிருந்து தொழில்நுட்பபிரிவு மாணவர்களும் உள்வாங்கப்பட்டு தற்போது அவர்களது பட்டப்படிப்பு கற்கைநெறி தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறாக உள்வாங்கப்படும் மாணவர்கள் பட்டதாரிகளாக வெளிவரும் போது அவர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கம் பற்றிய செயற்பாடு அதிகமாக நடைபெறுவதாக அறியமுடியவில்லை. இது தனியார் தொழிற்றுறை விருத்தியை மையப்படுத்தியதாக இல்லாது விட்டால் இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கவே செய்யும்.

இலங்கையில் வருடாவருடம் கிட்டத்தட்ட 2000-3000 வரையான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் அதிகரித்த எண்ணிக்கையில் உள்வாங்கப்படுகின்றனர். இதற்காக புதிய கற்கைநெறிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்குள் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் வேலைவாய்ப்பென்பது அரசதொழிலை மட்டும் நம்பியிருக்காது நாடெங்கும் தனியார் தொழிற்றுறைகளின் உருவாக்கத்திலும் தங்கியிருக்கின்றது. அரசஇயந்திரத்தினால் எத்தனை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஒரேநேரத்தில் பெற்றுக்கொடுக்க முடியும்? மாறாக அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு எதுவிதத்திலும் சம்பந்தமேயில்லாத பட்டதாரி தொழில் பயிற்றுனராக (Graduate Trainees) அமர்த்திவிட்டு பின்னர் அந்ததொழிலும் வழங்கப்படும் குறைந்தசம்பளமும் அவர்களுக்கு மனநிறைவையும் அவர்களது அன்றாடத்தேவையையும் பூர்த்தி செய்யாதபோது தாமாகவே அதனை விட்டு வெளியேறி வேறு தொழில்தேடி செல்லும் நிலையையும் அவதானிக்க முடிகின்றது. பட்டத்தைப் பெற்றபின் எதுவித தொழில்வாய்ப்பும் இல்லாது வழிதெரியாது நிற்கும் பட்டதாரிகளுக்கு அதனை பெற்றுத்தருவது யார் என்னும் பலத்த கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.

இவற்றுடன் வேலைவழங்கப்படும் போது எதிர்பார்த்தளவில் வேலை செய்யப்படுவதில்லை என்னும் முறைப்பாடுகளும் வேலை தருபவர்களாலும் முன்வைக்கப்படுகின்றது. குறிப்பிட்ட வேலையில் ஈடுபாடுகாட்டாததும்இ தரப்பட்ட வேலையினை வினைத்திறனாக செய்ய எத்தனிக்காமையும் வெறுமனே வேலை என்பதனை தமக்கொரு அரணாக பயன்படுத்துவதும் பொதுவான குறைகளாக இருந்தாலும் வேலை தருபவர்களது எதிர்பார்ப்பை வளருஞ்சந்ததி பூர்த்தி செய்வதில் மந்தநிலையிருப்பதாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்தநிலை எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணங்களும் இனங்காணப்படவேண்டும். வளர்ந்துவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அனுசரணை தொழில்கொள்வோரிடமும் தொழிலாளர்களிடமும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றது என்பது நிதர்சனமே. வாழ்க்கையை சுகமான வாழ்க்கையாக வேலைப்பழுவற்று பொழுதுபோக்குகளில் விருப்புக்கொள்ளும் போக்குக்குள் தற்போது இளையசமுதாயம் மாறியிருப்பது கவலைக்குரியதாகின்றது. இது பலஆண்டுகாலமாக போர்ச்சூழலில் சிறைப்பட்டிருந்த சமூகத்தில் அனைத்தும் கிடைக்கக்கூடியதாக ஆகியிருக்கும் போது அதற்குள்ளான உள்ளீர்;ப்பாக இருப்பது தவிர்க்கமுடியாததாயினும் அவர்கள் தம்நிலையை கருத்தில் கொண்டு தமக்கொரு வேலையை உருவாக்கிக்கொள்ளும் நிலைக்குள் வரவிரும்பாததும் இன்னொரு காரணமாக கருதப்படுகின்றது. மாறாக சுயமாகவேலையை செய்ய நினைக்கும் ஒருவருக்கான உதவிகளும் ஊக்குவிப்பும் இத்தேசத்தில் அரிதாகவே கிடைப்பதும்; கிடைப்பதை பயன்படுத்துவதில் காட்டும் ஈடுபாடு புதுமைகளை உருவாக்குவதில் இல்லாதிருப்பதுவும்இவற்றுக்குக் காரணமாக கொள்ளமுடியும்.

மாறாக அரச தொழிலல்லாது தனியார் தொழிற்றுறையும் வடபகுதியைப் பொறுத்தவரை எதிர்பார்த்தளவில் இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை அள்ளித் தந்துவிடவில்லை என்னும் பொதுப்படையான உறுமல்களும் ஆங்காங்கே கேட்கவே செய்கின்றது. போர்நடைபெற்ற காலங்களில் தனியார்தொழில் என்பதற்கான வாய்ப்புக்கள் எதுவுமற்றதாக இருந்தது. அதன்பின்னர் மத்தியவங்கியின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து முதலீடுசெய்து தனியார் தொழிற்றுறையை விருத்திசெய்ய ஆர்வம் கொண்டிருந்தாலும் நாட்டின் நிலைமை அவர்களுக்கு சாதகமாக தெரியவில்லை. இந்த நிலையில் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அவர்களின் தொழிற்றுறை விருத்திக்கு வழிசமைப்பதும் அவசியமாகின்றது. ஆனால் இந்த முதலீடுகள் இங்குள்ள மக்களின் வேலைப்பிரச்சனைக்கு வழிகோலுவதாக இருக்கவேண்டுமே தவிர பிறஇடங்களிலிருந்து மக்களை வரவழைத்து வேலைகொடுப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் தென்பகுதியிலிருந்து தருவிக்கப்படும் வேலையாட்கள் சிறப்பாக இன்னும் எதிர்பார்க்கும் வேலைகளை கலைநுட்பத்துடன் வினைத்திறனாக செய்வதாக தொழிற்றுறையாளர்கள் தெரிவிப்பதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

கணணி தொழிலில் ஈடுபட்டுள்ள படித்த இளைஞர்களில் திடீர் மாற்றம்:
அது இவ்வாறிருக்க தமிழ்நாட்டில் ஒரு அதிசயம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கணனி தொழிற்றுறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் பட்டதாரிகள் ஏறக்குறைய மாதமொன்றிற்கு ஒன்றிலிருந்து இரண்டு லட்சங்கள் வரை பெறும் சம்பளத்துடனான வேலையை ராஜினாமா செய்து விட்டு தற்போது பண்ணையாளர்களாக மாறி விவசாயசெய்கையில் ஈடுபட்டுவருவதனை அறியமுடிகின்றது. இதற்காக அவர்கள் தரும் விளக்கம் விசித்திரமானதாகவும் பலருடைய கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் விடைதருவதாகவும் அமைந்திருக்கின்றது. கணனி தொழில்நுட்பத்தில் பணிபுரியும் ஒருபட்டதாரி கிடைக்கும் அதிகூடிய சம்பளத்தில் தமது வாழ்க்கை தரத்தை இயன்றளவுக்கு உயர்த்திக்கொள்ளுவதும் அதற்காக புதிய வசதிவாய்ப்புக்களை தேடும் போது பலஆண்டுகளுக்கான கடன்களை பெறவேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பெறும் கடன்களை அடைப்பதற்காக தம்மை குறிப்பிட்ட கணனி நிறுவனத்துடன் வேறுவழியின்றி பிணைமுறியுடனான பந்தத்தில் இணைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறான நிறுவனங்களில் இடைவிடாது தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டுமென்றும் இதனால் பலர் இனந்தெரியாத மனவுளைச்சல்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர். உயர்ந்த சம்பளத்தில் வேலை என்னும் போது வேலையின் தரமும் அளவும் அதிகமாகவே இருக்கவேண்டும் என வேலைதரும் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதில் தப்பேதுமிருப்பதாக தெரியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக இடைவிடாது வேலைக்குள் திணிக்கப்படும்போது தமது சந்தோசத்தைஇ இல்லத்தின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என பலர் இப்போது நினைக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். கற்றலும் தொழில்செய்வதும் ஓடியோடி உழைப்பதும் அவரவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேயன்றி வேறெதற்கு. ஆனால் அந்த மகிழ்ச்சியே கேள்விக்குறியாகி நிறுவனமொன்றிற்கு அடிமையாக வாழ்வதனை இளையசமுதாயம் விரும்பவில்லையென்றே நினைக்கின்றது.

இதனால் அவர்கள் எடுத்துக்கொண்ட முடிவு பலரையும் ஆச்சரியத்திற்குள் உள்ளாக்கியிருக்கின்றது. தாம் செய்து வந்த அதிகூடிய லட்சங்களை வழங்கும் வேலையை இராஜினாமா செய்து விட்டு தமக்கென நிலங்களை வாங்கி அனைவரும் விவசாயம் செய்ய தொடங்கிவிட்டார்கள். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? தமது நிலங்களில் தொழில்நுட்பத்தினை உள்வாங்கிய பண்ணைகளை அமைத்து அதிலிருந்து ஆகக்குறைந்தது மாதமொன்றுக்கு இந்திய ரூபாவில் அறுபதினாயிரம் வரை பெறக்கூடியதாக இருப்பதாகவும் தற்போது தாம் முன்பிருந்ததை விட மிகவும் மகிழ்ச்சியாகவும் குடும்பத்துடன் குதூகலித்தும் இருப்பதாக கூறும் இவர்கள் எந்தவித பிணைமுறிகளும் இல்லாது மனம் அமைதியாகவும் நீண்ட நேரத்தை குடும்பத்துடன் கழிப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள். தமது பண்ணைகளில் சேதன முறைமூலமாக பயிர்களை உற்பத்தி செய்ய முடிவதாகவும் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதில் தாம் பெருமைப்படுவதாகவும் தெரிவிக்கும் இவர்கள் அளவாக தமது பண்ணையை தாம் நடாத்துவதாகவும் அதில் எந்தவித பிரச்சனைகளையும் தீர்க்கமுடிவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கிராமத்திலிருந்து நகரத்தைநோக்கி இளைய சமுதாயம் நகர்வதற்கு முக்கியமான காரணமாக நகரத்திலிருக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகளாகும். இந்த வசதிகளை கிராமத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்தால் நிச்சயமாக மேலே தெரிவித்த அதிசயங்கள் நம்நாட்டிலும் நடக்கும். கிராமத்து அபிவருத்தி என்பது அந்த கிராமத்திலுள்ள வளங்களுக்கேற்ப தொழிற்றுறைகளை உருவாக்குவதும் அதற்கான விஞ்ஞான தொழில்நுட்ப அறிவினை உட்புகுத்துவதுமாகும். இவ்வாறு செய்தால் கிராமத்திலேயே அனைவருக்கும் தேவையான உணவும் அவற்றின் மதிப்பேற்றப்பட்ட பொருட்களும் எம்மவர் தரம்மிக்க பொருட்களாக எமது சந்தைக்கும் உலக சந்தைக்கும் கிடைக்கும். தரக்கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் உருவாக்கமும் பொருட்களை மதிப்பேற்றஞ் செய்து சந்தைவாய்ப்பை அதிகரிக்கும் வழிவகைகளும் கிடைக்கப்பெறும் போது இவையனைத்தும் சாத்தியமே. மேலும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி இங்கே முக்கியமாக கவனிக்கப்படுதல் வேண்டும். சுற்றுலாத்துறையின் வளர்;ச்சியுடன் அது சார்ந்த சேவைகளின் தேவையும் அவற்றின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது வேலையில்லாப் பிரச்சனைக்கு முடிந்தளவு தீர்வையும் அதற்கிணையான தொழிற்றுறை வளர்ச்சிக்கு வாய்ப்பையும் அதிகரிக்கும். விவசாயசெய்கையில் படித்த இளைய சமுதாயம் மீண்டும் ஆர்வம் கொண்டிருப்பது இனியொரு பசுமைப்புரட்சியில் பலநல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பலாம். இதுவொரு நல்ல சகுனமாகவே கருதப்படவேண்டியதாகும்.

Related posts

*

*

Top