வடமாகாணத்து அபிவிருத்தியை மையப்படுத்திய ஆய்வுகள்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

நாம் வாழும்காலம் எமது பிரதேசத்து வளர்ச்சியில் மிக முக்கியமானது. நீண்டதொரு போர்ச்சூழலில் சிக்கி சின்னாபின்னப்பட்ட பிரதேசம் மீண்டெழ முனையும்போது அதற்கு தேவையான புலமையாளர்களின் ஆலோசனையும் திட்டமுன்மொழிவுகளும் இன்னும் தனியார்துறை வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பும் வேலைத்திட்டங்களும் வலிந்து உருவாக்கப்பட வேண்டியதாயிருக்கின்றது. போர்முடிந்த பின் 7 வருடங்கள் கழிந்த நிலையில் தனியார் துறையின் விருத்தி நாம் எதிர்பார்த்தவாறு இருக்கவில்லை. இதற்கு காரணங்கள் பலவாயினும் அபிவிருத்தித் திட்டங்களில் துறைசார் புலமையாளர்களின் உள்வாங்கல் போதாமை என உணர முடிகின்றது.

Prof.G.Mikunthanயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தார்மீக கடமையொன்றுண்டு. தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்புக்கான உயர்பட்டப்படிப்புக்கான கல்வியைப் போதிக்கும் அதேநேரத்தில் தேசியமட்டப் பிரச்சனைகளையும் மாகாணமட்ட பிரச்சனைகளுக்கும் ஆய்வுரீதியாக தமது புலமைசார்ந்து ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும் என்பதுதான். தேசிய மட்டத்து பிரச்சனைகளை முகங்கொடுக்க அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து முன்வரும்போது மாகாணமட்ட பிரச்சனைகளை அபிவிருத்தி சார்ந்த திட்டவரைபுளை உருவாக்குவதற்கும் அதன்மூலம் இங்குள்ள இளைய சமுதாயத்திற்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான உத்திகளை வரைவதற்கும் புலமைசார் நிபுணர்களின் தேவை அவசியமாகின்றது.

புலமைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுவிட்டு பின்னர் அவர்களை விமர்சிக்கும்போக்கும் இப்போது உருவாகி வருகின்றது. கல்வியியலாளர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு தமது புலமைசார்ந்து ஆலோசனைகளை வழங்க அனுமதிக்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்ததற்கு முக்கிய காரணங்களுள் இப்பிரதேசத்து வளர்ச்சியில் அங்குள்ள புலமைசார் நிபுணர்களின் பங்களிப்பும் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தித்திட்டங்கள் தீட்டப்பட்டு அதன்மூலம் கிடைக்கின்ற நிதியை முழுவதுமாக மக்கள் பயன்பெறும் வண்ணம் பயன்படுத்த உதவ வேண்டும். அதைவிடுத்து வெளிநாட்டு நிறுவனங்களின் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் நிதியை நாம் பெறுவதற்கான தகுந்த அபிவிருத்தி திட்டங்களை புலமைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெறாது விடுவதனால் அவை எமக்கு கிடைக்காமலும் நிதிக்காக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அதனை முழுவதுமாக பயன்படுத்தாமலும் போகின்ற நிலையை அவதானிக்க முடிகின்றது. இதற்காக வெறுமனே மாகாணசபையையோ அல்லது புலமையாளர்களையோ குறைகூறாது எமது தேசத்தின் அபிவிருத்திக்கான பணியில் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்த பணியாற்ற முன்வர வேண்டும்.

வடமாகாண அபிவிருத்தி திட்டங்களை வரைவதற்கான அனைத்து புள்ளிவிபரங்களும் திரட்டப்பட்டால் அவற்றை வைத்துக்கொண்டு மக்கள் நன்மையடையும் பல திட்டங்களை உருவாக்க முடிவதுடன் அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டையும் பெறுவதற்கும் உதவ முடியும். இதற்காக மாகாண அபிவிருத்தி திட்டங்கள் சார்ந்து இன்னும் தனியார் தொழிற்றுறையினை உருவாக்குவதற்கு திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இளைய சமுதாயத்தின் வேலையில்லா திண்டாட்டத்தினை தீர்ப்பதற்கான வழிவகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளையும் உருவாக்க வேண்டும்.

வடமாகாணத்து அபிவிருத்தியை மையப்படுத்திய ஆய்வுகளுக்கு பல்கலைக்கழகத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். எமது பிரதேசத்திற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான ஆய்வுகள் முடுக்கிவிடப்படல் வேண்டும். அனைத்து துறைசார்ந்த நிபுணர்களின் உதவியுடன் சமகால பிரச்சனைகளை ஆராய்ந்து தனியார் தொழிற்றுறையை ஊக்குவிப்பதற்கான வழிவகைகளை பரிந்துரைக்க பல்கலைக்கழக நிபுணர்கள் சமூகம் முன்வரல் வேண்டும். அதற்காக பல்துறை ஆய்வுகளை அனைத்து துறைகளிலும் முடுக்கிவிட்டு வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கும் குறிப்பாக சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கும் அத்துறை சார்ந்த சேவைகளை வழங்கும் துறைகளை இன்னும் அபிவிருத்திக்குள் உள்வாங்கி வடபுலத்து மக்களுக்கு வேலைவாய்ப்பினை கிடைக்கக் கூடியதாக செய்தல் வேண்டும்.

வடமாகாணத்தின் அபிவிருத்தி என்பது தனிநபர் உருவாக்கமோ அல்லது ஒரு குழுவின் செயற்பாடோ அல்ல. இது மக்கள் மயப்படுத்த அபிவிருத்தி திட்டமாக பரிணமிக்கும்போது அனைத்து மக்களுக்கும் அவரவர் தேவைக்கேற்ப வேலைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். ஆராய்ச்சியில் இருக்கின்ற வளங்கள் சார்ந்து அவற்றை வினைத்திறனாக பயன்படுத்துவது பற்றி இன்னும் மதிப்பேற்றஞ்செய்த பொருட்களை சந்தைப்படுத்தல் சார்ந்து அனைத்து துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆய்வரங்காக மாற்றி அனைத்து துறை நிபுணர்களையும் ஒருங்கிணைத்து இத்திட்டங்களை வரைந்து அதனை செயற்படுத்துவதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இதில் மாணவர்களையும் ஒன்றிணைப்பது இன்னும் நன்மைதரும். மாணவர்களின் சமூக கடப்பாடு இத்தகைய திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தும்போது இன்னும் மேன்மை பெறும்.

பல்கலைக்கழகமும் சமூகமும் இணைந்த ஆய்வரங்கை நடாத்துவதற்கு திட்டங்கள் தீட்டப்படுவதும் அதன் மூலம் வடமாகாணத்திற்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை வரைவதும் அவற்றை நடைமுறைப் படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும்.

Related posts

*

*

Top