முள்ளிவாய்க்கால் இப்பொழுதும் தலைவர்களுக்குச் சோதனைக் களமா?

– நிலாந்தன்

முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ‘குழப்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாதது அவரது தகுதிக்கும், உயர்த்திக்கும் பொருத்தமானதாகத் தெரியவில்லை’. என்று மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது முகநூல்க் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார்.

Nilanthanவிக்னேஸ்வரன் நினைத்திருந்தால் குழப்பத்தை தடுத்திருக்கலாம் என்று அவர் நம்புவதாகத் தெரிகின்றது. அன்றைய நாளில் எடுக்கப்பட்ட கானொளிகளை உற்றுக் கவனித்தால் ஒரு விடயத்தைக் கண்டுபிடிக்கலாம். சம்பந்தர் உரையாற்ற முன்னரே பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள். உரை நிகழ்த்தும் இடத்திற்கு தலைவர்கள் நடந்து வந்த பொழுது சம்பந்தரை பேசவிடக்கூடாது என்று பாதிக்கப்;பட்ட பெண்னொருவர் விக்கினேஸ்வரனை வேண்டுவதைக் காணலாம். அது மட்டுமல்ல அவரும் உட்பட மேலும் சில பெண்கள் விக்கினேஸ்வரனின் காலில் விழுவதையும் காணலாம். இவ்வாறு விக்கினேஸ்வரனின் காலில் விழுவதன் மூலம் அந்தப் பெண்கள் அவரை எவ்வளவிற்கு நம்புகிறார்கள் என்பது தெரிய வருகிறது. அதே சமயம் அவர்கள் எந்தளவிற்கு தன்னம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதும் காலில் விழுமளவிற்கு நிலைகுலைந்து போய்விட்டார்கள் என்பதும் தெரிய வருகிறது.

இக்கட்டுரையானது தமிழ்மக்கள் யாருடைய காலிலும் விழுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள் இவர்கள். நவீன தமிழில் தோன்றிய வீர யுகம் ஒன்றின் மாந்தர் இவர்கள். வளைவதை விட முறிவதே சிறந்தது என்று முடிவெடுத்துப் போராடிய ஓர் ஆயுதப் போராட்டத்தில் தமது உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் இன்று தலைவர்களின் கால்களில் விழும் நிலைக்கு வந்து விட்டார்கள். அல்லது தலைவர்கள் இந்த மக்களை காலில் விழுந்து நீதி கேட்கும் நிலைக்கு கொண்டுவந்து சேர்த்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

விக்கினேஸ்வரனின் காலில் பெண்கள் விழுந்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை தனது ஆசிரியத் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியிருந்தது. அந்தப் பெண்கள் விக்கினேஸ்வரனை எந்தளவிற்கு நம்புகிறார்கள் என்பதை அது காட்டுகிறது என்றும் அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டும் என்ற தொனிப்படவும் அந்த ஆசிரியத் தலையங்கம் அமைந்திருந்தது……….’முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த தாய்மார் தங்கள் காலைப் பிடித்து அழுத காட்சி கண்டோம். இதயம் நெகிழ்ந்து போயிற்று. ஒருபுறம் எங்கள் அன்னையர்களின் துன்பம். மறுபுறம் தங்கள் மீது எங்கள் தமிழ் மக்கள் கொண்ட நம்பிக்கை…….இந்த நம்பிக்கைக்கூடாக உண்மையையும் நேர்மையையும் விசுவாசத்தையும் எங்கள் மக்கள் எந்தளவு தூரம் மதிக்கின்றனர் என்ற மெய்யுணர்வு…… எனவே இந்த இடத்தில் நாம் தங்களுக்குச் சொல்லக்கூடியது தமிழ் மக்கள் உங்களைத் தங்களின் ஆபத்பாந்தவனாகப் பார்க்கின்றனர். உங்கள் வார்த்தைகள் தங்கள் வலிக்கு ஒத்தடம் என்று நம்புகின்றனர்….. எனவே நீங்கள் தமிழ் மக்களின் தனித்துவமான நம்பிக்கைக்குரிய அப்பழுக்கற்ற தலைவராக இருக்கிறீர்கள் …….’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதாவது பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விக்கினேஸ்வரன் எழுச்சி பெற்றிருக்கிறார் என்பதை அது காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? ஈழத்தமிழ்ப்பரப்பில் மிகக் குறுகிய காலத்திற்குள் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக எழுச்சி பெற்றவர் விக்கினேஸ்வரன் எனலாம். அவர் கீழிருந்து மேல் நோக்கி வளர்ந்து வந்த ஒரு தலைவர் அல்ல. மேலிருந்து கீழ் நோக்கி பரசூட் மூலம் இறக்கப்பட்ட ஒரு தலைவர். அவருடைய தாடியும், குங்குமப்பொட்டும் மடமடப்பான மாறுகரை வேட்டியும் சால்வையும் அவருடைய தோற்றத்தைக் கட்டியெழுப்பின. அதில் மத அடையாளம் உண்டு. அவர் அண்மையில் வழங்கிய ஒரு பேட்டி அந்த மத அடையாளத்தை எதிர்மறையாக விமர்சிக்கும் ஒரு வளர்ச்சிக்கு இட்டுச் சென்றதை இங்கு சுட்டிக் காட்டவேண்டும். எனினும் அவருடைய தோற்றம் அவர் முன்பு வகித்த பதவி அவர் இப்பொழுது எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு ஆகிய மூன்றும் இணைந்து அவரை நவீன தமிழ்த் தலைவர்களில் முற்றிலும் வித்தியாசமான ஒரு தலைவராக எழுச்சி பெற வைத்து விட்டன. அவர் முதலமைச்சராக வந்த பின் முதன் முதலாக தமிழகத்திற்குச் சென்று உரையாற்றிய நிகழ்வில் பங்குபற்றிய ஒரு செயற்பாட்டாளர் பின்வருமாறு சொன்னார். ‘அவர் என்ன சொல்லப் போகிறார்? என்று முழு அரங்குமே நிசப்தமாகக் காத்துக்கொண்டிருந்தது. அவரோ கண்களை மூடி ஒரு கையை மார்பில் வைத்து ஓர் ஆன்மீகவாதியைப் போல குரு வணக்கம் செய்தார். எங்களில் கொஞ்சப் பேருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது’ என்று.

அதே சமயம் வலிகாமம் பகுதியிலுள்ள ஒரு பாடசாலை அதிபர் ஒரு அரசியல்கட்சித் தலைவரிடம் சொன்னாராம் விக்கினேஸ்வரனைப் பார்க்கும் பொழுது ஆறுமுகநாவலரின் நினைவு வருகிறது என்று. இவ்வாறாக ஒருவித மத அடையாளத்தோடு காட்சியளித்த போதிலும் கூட கடந்த எட்டாண்டுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் அதிகம் ஜனவசியம் மிக்க ஒருவராக விக்கினேஸ்வரன் எழுச்சி பெற்றிருக்கிறார். அவரை வைத்துத்தான் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கலாம் என்று கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் நம்புமளவிற்கு அவர் மேலெழுந்து விட்டார்.

ஆனால் ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்கக்கூடும் என்று எதிர்பார்ப்பிற்கு அவர் இன்று வரையிலும் உறுதியான பதில் எதையும் கூறியிருக்கவில்லை. எனது கட்டுரைகளில் ஏற்கெனவே குறிப்பிட்டது போல அவர் கதைப்பது சில சமயங்களில் ரஜனிகாந்தை ஞாபகப்படுத்துகிறது. அண்மையில் கூட ரஜனிகாந் அவ்வாறு வழுவழுத்துக் கதைத்திருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். விக்னேஸ்வரன் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்குவது தொடர்பில் இன்று வரையிலும் துலக்கமான சமிக்ஞைகளை காட்டாதது ஏன்?

அவர் ஒரு தொழில்சார் அரசியல்வாதி இல்லை என்பது ஒரு காரணம். இரண்டாவது காரணம் அவருடைய தலைமைத்துவத்தில் நெளிவு சுழிவு குறைவு என்பது. கடந்த மூன்றாண்டுகளிற்குள் குறைந்தபட்சம் மாகாண சபைக்குட் கூட தமக்குச்சாதகமான ஒரு விசுவாசிகளின் அணியை அவரால் உருவாக்க முடியவில்லை. மூன்றாவது காரணம்-அவருடைய அரசியல் பாரம்பரியம் புரட்சிகரமானது அல்ல என்பது. அவர் ஒரு மிதவாதப் பாரம்பரியத்திற்கு உரியவர். அதிரடியாக கலகத்தனமான முடிவுகளை எடுக்கும் ஒரு பாரம்பரியத்துக்கு உரியவர் அல்ல. அவர் மெல்ல மெல்லத்தான் வளைவார். ஒரேயடியாக வளைய மாட்டார். நாலாவது காரணம் – சம்பந்தரே அவரை அரசியலுக்குள் கொண்டு வந்தார். சம்பந்தரை மேவி எழ அவர் தயங்குகிறார். சம்பந்தரை முறித்துக் கொண்டு ஒரு மாற்று அணிக்குத் தலைமை தாங்க சம்பந்தருக்கும் அவருக்கும் உள்ள வர்க்க உறவு தடையாக உள்ளது. ஐந்தாவது காரணம் -அவர் கடந்த மூன்றாண்டுகளாக முன்னெடுத்து வரும் அரசியல் எனப்படுவது பெருமளவிற்கு கற்றலின் அடிப்படையிலானது. அவர் அடிக்கடி கூறுவது போல கொழும்பு மையத்தில் வாழ்ந்த அவர் வடக்கு மையத்தில் அரசியல் செய்ய வந்தபொழுது கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையிலேயே தனது முடிவுகளை எடுக்கின்றார். அந்த முடிவுகளை அவற்றுக்குரிய கோட்பாட்டு விளக்கங்களோடு அவர் எடுக்கிறாரா? என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

ஆறாவது காரணம் – அப்படியொரு மாற்று அணியை உருவாக்கினாலும் அதை வைத்து அடுத்த கட்ட அரசியலை எப்படி நகர்த்துவது என்பது தொடர்பில் துலக்கமான அரசியல் தரிசனம், வழிவரைபடம் எதுவும் அவரிடம் இல்லாமல் இருக்கலாம். ஒரு மாற்று அணி ஏன் தேவை? என்பதற்கு இப்பொழுது பல பொருத்தமான விடைகள் உண்டு. ஆனால் ஒரு மாற்று அணி என்ன செய்யப் போகிறது? என்பது தொடர்பில் பொருத்தமான கோட்பாட்டு விவாதங்கள் எதுவும் இன்று வரையிலும் தமிழ்ப்பரப்பில் நடக்கவேயில்லை. அதாவது 2009 மேக்குப் பின்னரான ஒரு புதிய தமிழ் மிதவாதத்தைக் குறித்து கோட்பாட்டு அடிப்படையிலான விவாதங்கள் இனிமேல்தான் நடக்கவேண்டியுள்ளது.

மேற்சொன்ன காரணங்களை விட வேறு உப காரணங்களும் இருக்க முடியும். ஆனால் சம்பந்தர் அணிக்கு எதிரான ஒரு மாற்று அணியை உருவாக்க முடியாமல் இருப்பதற்குரிய பிரதான காரணங்களில் ஒன்று விக்கினேஸ்வரன் இது தொடர்பில் இன்று வரையிலும் வெளிப்படையாக முடிவுகளை அறிவிக்கத் தவறியமைதான். ஒரு மாற்று அணியைக் குறித்து அதிகரித்த எதிர்பார்ப்புக்கள் கட்டியெழுப்பப்படுவதற்கு அவரே காரணமாக இருந்தார். ஆனால் அப்படியொரு அணி இன்று வரையிலும் உருவாகாமல் இருப்பதற்கும் அவரே காரணமாக இருக்கிறார்.

எனினும் ஆகக்கூடிய பட்சம் பதினேழு மாதங்களுக்கே அவர் அவ்வாறு முடிவெடுப்பதை ஒத்தி வைக்கலாம். ஏனெனில் அடுத்த மாகாணசபை தேர்தல் வரும்பொழுது அவரை நிறுத்துவதா? இல்லையா? என்பதை சம்பந்தர் முடிவெடுக்க வேண்டியிருக்கும். தென்னிலங்கையில் தேர்தல்கள் நடக்குமோ இல்லையோ வடக்கு கிழக்கில் குறிப்பாக மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தக்கூடும். கடந்த மேதினக் கூட்டங்களின் பின் அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு ஒன்றுக்குப்பல தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மகிந்தவின் செல்வாக்கு வலயத்திற்கு வெளியே காணப்படும் வடக்கு கிழக்கில் தேர்தல்களை நடாத்தலாம். வடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகள் அநேகமாக மகிந்தவிற்கு எதிரானவைதான். முஸ்லீம் வாக்குகளும் அப்படித்தான். பொதுபலசேனா புதிதாக உருவாக்கியிருக்கும் ஓர் அரசியற் சூழலில் முஸ்லீம் வாக்குகள் ரணில் மைத்திரி அணியை நோக்கியே அதிகமாக விழும். எனவே மகிந்தவின் பலப்பரீட்சைக்குரிய ஒரு களமாகக் காணப்படாத வடக்கு கிழக்கில் அரசாங்கம் தேர்தல்களை வைக்கலாம். இதை முன்னுணர்ந்த காரணத்தினால்தான் தமிழ் அரசியல்வாதிகள் அவசர அவசரமாக போராட்டக்களங்களிலும், நினைவுகூரல் களங்களிலும் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நினைவுகூர்தலில் சம்பந்தருக்கு ஏற்பட்ட அவமதிப்பு தேர்தல்களில் கூட்டமைப்பிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகளில் எதிரொலிக்குமா? சம்பந்தர் இவ்வாறு அவமானப்பட்டது இதுதான் முதற்தடவையல்ல. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வந்த பொழுது யாழ் நூலகத்தை அண்மித்த சாலைகளில் சம்பந்தர் அவமதிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின்னர் நடந்த இரண்டு தேர்தல்களிலும் கூட்டமைப்பே வென்றது. ஆனால் இனிவரும் தேர்தல்களின் போது பல புதிய வளர்ச்சிகளையும் கவனத்தில் எடுத்தே முடிவிற்கு வரவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சி இரண்டு எழுக தமிழ்கள் தலைவர்களை பின்தள்ளிவிட்டு போராடும் மக்கள் விக்னேஸ்வரனுக்கு அதிகரித்துவரும் ஜனவசியம் முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு ஏற்பட்ட அவமதிப்பு போன்ற பல புதிய வளர்ச்சிகளினதும் திரண்ட விளைவாகவே வாக்களார்கள் சிந்திக்கக்கூடும்.

எழுகதமிழ் ஏற்பாடுகளுக்காக கிராமங்கள் தோறும் மக்களைத் திரட்டிய செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி வடக்கு கிழக்கில் கூட்டமைப்பின் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. இது தவிர நிலைமாறுகால நீதி தொடர்பாகவும் நல்லிணக்கச் செய்முறைகள் தொடர்பாகவும் கிராம மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சந்திப்புக்களின் போது அடிமட்ட மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் கூட்டமைப்பிற்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வருவதை அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்கள் அவதானித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த அதிருப்திகளையும், வெறுப்பையும், கோபத்தையும் ஒருமுகப்படுத்தவல்ல ஒர் அணியோ அல்லது அமைப்போ அல்லது கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. தமிழ் மக்கள் பேரவைக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. அது ஒரு கட்சியாக மாறாது என்று விக்கினேஸ்வரன் அடிக்கடி கூறுகின்றார். இது முதலாவது. இரண்டாவது பேரவைக்குள் செல்வாக்கோடு இருக்கும் பிரதானிகள் பலரும் அரச ஊழியர்கள். அரச ஊழியர்களுக்கென்று அரசியலில் அடிப்படையான வரையறைகள் உண்டு. இவ்விரண்டு வரையறைகளுக்கூடாகப் பார்த்தால் பேரவையானது ஒரு முழு நிறைவான அரசியல் இயக்கமாக மேலெழுவதற்கு தடைகள் உண்டு. ஆனால் அதிருப்தியாளர்களும், செயற்பாட்டாளர்களும் ஒன்றுகூடிக் கதைப்பதற்குரிய ஒரு பொது அரங்கு அது. தமிழ்த் தேசிய அரசியலில் அப்படியொரு பொது அரங்கு இதற்கு முன் இருந்ததே இல்லை.

பேரவை ஓர் இறுக்கமான கட்டமைப்பு அல்ல. பேரவைக்குள் எடுக்கப்படும் பல முக்கிய தீர்மானங்களை அதில் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சிகளே முன்மொழிகின்றன. அல்லது முன்னெடுக்கின்றன. யாப்பு வரைவில் தொடங்கி எழுக தமிழ் வரையிலும் இதுதான் நிலமை. அரசியற்கட்சிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் பேரவை வேறொன்றாகவே இருக்கும். அதற்கு இப்போதிருக்கும் அடையாளமும் இருக்காது. பேரவைக்குள் இருக்கும் அரசியற் கட்சிகளுக்கும், விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான இடையூடாட்டமும் பலமானது அல்ல. பேரவைக் கூட்டங்களில் கூடிக்கதைப்பதற்குமப்பால் அதில் உள்ள அரசியற்கட்சித் தலைவர்களும், விக்கினேஸ்வரனும் இறுக்கமில்லாத மனம் விட்டுப் பேசும் சந்திப்புக்களில் ஈடுபடுவது மிகக் குறைவு என்றே கூறப்படுகின்றது. இதுவும் பேரவைக்குள் காணப்படும் ஒரு பலவீனம் தான்.

இத்தகையதோர் பின்னணியில் அரசாங்கம் தேர்தல்களை ஒத்தி வைக்கும் காலம் வரையிலும் விக்கினேஸ்வரனும் முடிவெடுப்பதை ஒத்தி வைக்கப் போகிறாரா? அல்லது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் கூறுவது போல ‘விக்கினேஸ்வரனும் சம்பந்தரும் ஒன்றுதான். இவர் ஒரு நாள் சால்வையை உதறி விட்டு கொழும்பிற்கு சென்று விடுவார். பேரவைக்குள் நிற்கும் ஏனைய கட்சித் தலைவர்கள் இருவரும் தெருவிற்கு வருவார்கள்’ என்பது சரியா? அதாவது அவர் தன்னியல்பில் என்னவாக இருக்கிறாரோ அதைவிட அதிகமாகத் தமிழ் மக்கள் அவரிடம் எதிர் பார்க்கிறார்களா? அல்லது தனது காலில் விழும் மக்களின் நம்பிக்கைகளுக்குத் தலைமை தாங்கி தமிழ்மக்கள் இனியெப்பொழுதும் யாருடைய கால்களிலும் விழத்தேவையில்லாத ஓர் அரசியலை அவர் முன்னெடுப்பாரா?

Related posts

*

*

Top