சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்…

– பேராசிரியா் கு.மிகுந்தன்

னிதனின் அத்தியாவசிய தேவைகளுள் முக்கியமானது உணவும் நீரும் உறையுளும் மட்டுமே. உணவின்றி எந்த உயிரினத்திலும் அசைவேது. உணவின்றி பட்டினியால் இறக்கும் மக்கள்கூட்டத்தை இவ்வுலகில் நாம் அறியக்கிடைத்தாலும் அந்த பட்டினிக்கு தீனிபோடும் பொறுப்பு ஒவ்வொருவரையும் சார்ந்தது. உழவுத்தொழிலுக்கு உரமிடாது விட்டால் எதுவிருந்தும் இறுதியில் உண்பதற்கு எனஎதுவுமிருக்காது. இங்கே உரமிடுதல் என்பது வெளிநாட்டு அசேதன இரசாயனப் பொருட்களை திணிப்பதல்ல. மாறாக உழவுத்தொழிலை சமகால விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் உள்வாங்கி அதனை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லல் என்பதாகும். உழவுத்தொழிலில் அக்கறை காட்டுகின்ற இளையவர் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது என பலதரப்பட்ட தரவுகள் எடுத்துக்கூறுவதிலிருந்து அதற்கான முக்கியத்துவம் நலிவடைந்து வருகின்றது என்பதுதானே பொருள். இதனை அபிவிருத்தியினை நோக்காகக்கொண்டு திட்டமிடும் வல்லுனர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே கட்டடங்களும் எமக்கொவ்வாத தொழில்நுட்பமும் எந்தவிதத்திலும் எமக்கு அபிவிருத்தியை தந்துவிடாது.

Prof.G.Mikunthanவடமாகாணத்து அபிவிருத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமானளவுக்கு குறைவாகவே காணப்படுகின்றது. எமது மொத்த உள்நாட்டு (வடமாகாண) உற்பத்தி GDP (Gross Domestic Product)  என்பது 3-4 சதவீதமாக இருக்கும் அதேநேரத்தில் தென்பகுதியிலுள்ள மற்றைய மாகாணங்களின் GDP மிகவும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கான காரணத்தை நாம் கண்டறிந்து கொண்டால் எமது பகுதியிலிருந்து உற்பத்தியாகிப் பொருட்கள் உலக சந்தைக்கு செல்லாததே காரணமாகும். எமது மாகாணத்தின் உற்பத்தி ஒருபுறமிருக்க அதனை தரமாக அதுவும் உலகத்தரம் வாய்ந்த அந்நிய செலாவாணியை பெறக்கூடியதாக உருவாக்கி உலகச்சந்தைக்கு எடுத்துச் சென்றாலன்றி இதனை நாம் உயர்த்திக் கொள்ளமுடியாது. சுருக்கிச்கூறினால் ஒரு தேசத்தின் சிறப்புத்தன்மையை அல்லது ஆரோக்கியத்தை கட்டியங்கூறும் சுட்டியாகவே மொத்த உள்ளுர் உற்பத்தி அமைந்திருக்கின்றது. ஆதலினால் வடமாகாணத்தின் ஆரோக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இந்தச்சுட்டியின் அதிகரிப்பை நோக்கிய அபிவிருத்தி அமைய வேண்டும்.

தரமான உற்பத்தி மற்றும் மதிப்பேற்றஞ்செய்த பொருட்கள் உலகச்சந்தையை எட்டிப்பார்ப்பதற்கான உலகத்தரத்தை கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்தும் உள்ளூர்ச்சந்தையை நம்பி எமது அபிவிருத்தியை குறிப்பாக உற்பத்தியை நாம் நகர்த்தக்கூடாது. மாறாக வடபகுதிப் பொருட்களுக்கு நல்லதொரு சந்தை வாய்ப்பை தென்பகுதியும் தரமுடியாது. ஆதலினால் உலகச்சந்தைக்கான தரத்துடன் கூடிய சிறந்த உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும், பொதி செய்யும் வழிவகைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தால் இத்தேசம் விடிவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். வாய்ப்புக்களை பலவகைகளிலும் உருவாக்கிக் கொடுத்தாலன்றி இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களும் அரிதாகவே காணப்படுகின்றன. சுயதொழில் முயற்சித்திட்டங்கள் இன்னும் பலமாக உருவாக்கப்பட வேண்டும். அதிலொன்றாகவே சுற்றுலாத்துறையை இனங்காண்கின்றனர். ஆனாலும் இவையனைத்தும் இருந்தாலும் இளையவர்கள் விவசாயத்தொழிலில் காட்டும் அக்கறை மகிழ்ச்சி தருவதாக இல்லை.

இது விவசாய நாடான எமக்கும் விவசாயத்தில் ஒருகாலம் கொடிகட்டிப் பறந்த எமது மாகாணத்திற்கும் ஒரு நல்ல செய்தியாக இல்லை. வசதிகள் அதிகமாக இல்லாத காலங்களில் சிறப்பாக செய்யப்பட்ட விவசாயம் தற்போது மந்தநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணமாக காலநிலை மாற்றத்தை நாம் முன்வைத்தாலும் இவையனைத்தையும் இருக்கின்ற விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றியமைக்க முடியும் என பிறதேசங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் கட்டியங்கூறி நிற்கின்றன. வறண்ட பாலைவனங்களை பசுமையாக்க முடியுமானால் எமது பிரதேசத்தை ஏன் நாம் மாற்றிக்காட்ட முடியாது. இதற்கான ஊக்குவிப்பு எதிர்பார்த்தளவில் இல்லையென நாம் எடுத்த மாத்திரத்தில் எவரையும் குறைகூற முடியாது. அனைவரதும் பங்களிப்பு அவசியமாகின்றது என்றதனை நாம் இன்னும் கவனத்திற் கொள்ளவில்லை.

எமது அண்டை நாடான இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல வகையான இலகு தொழில்நுட்பங்கள் தினமும் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கான ஒன்றிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டு அங்கே விவசாய உற்பத்திகள், மதிப்பேற்றஞ் செய்த பொருட்கள், சிறந்த பண்ணை முறைகள்இ தனியார் தொழில் மையங்கள் என்பன சிறப்பாகவும் இத்தொழில்களை செய்வதற்கான ஆலோசனை மையங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி மையங்கள் என பலவும் அமைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனை நாம் கண்கூடாக காணமுடிகின்றது. குறிப்பாக பல தரப்பட்ட வீட்டு உபகரணங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதனை நாம் இன்னுமேன் கவனிக்கவில்லை. பலவகையான ஆய்வுகூட உபகரணங்கள் மலிவானமுறையில் இலகு தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வளரும் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு விற்கப்படுகின்றன. இந்த வகையில் அங்கே உற்பத்திக்கான சந்தைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உற்பத்திப் பொருட்கள் அதன் தேவைக்காக உற்பத்தியாவதாலும் ஏற்றுமதி செய்யப்படுவதனாலும் அங்கே தொழிற்றுறையின் விருத்தியென்பது இமாலய சாதனையாக பதியப் பட்டிருக்கின்றது. இதற்காக தமிழ்நாட்டிலுள்ள தொழிற்றுறைகளில் எமது இளைய சமூகத்தை பயிற்றுவித்தால் குறிப்பாக அங்கு நடைபெறுகின்ற தொழில்விருத்தி பற்றி நேரில் கண்டும்கேட்டும் அனுபவப்படவும் வாய்ப்புக்கிட்டினால் சுயமாக பலவகைத் தொழிற்றுறைகளை இங்கே செய்வதற்கு தேவையான உந்துதல் கிடைக்கும்.

புதிய தொழிற்றுறைகளுக்கான நிதியை வங்கிகள் மூலமாகவும் ஏனைய நிதி நிறுவனங்கள் மூலமாகவும் கடனாகவாவது கிடைக்க வழிசெய்தால் இத்தகைய மாற்றங்களை ஓரளவுக்கேனும் ஏற்படுத்தலாம். குறிப்பாக நிதியை கடனாகப்பெற்று அதனை அடைக்க முடியாதபோது அவற்றை வட்டியுடன் திருப்பிச்செலுத்த வழிவகைகளையும் கண்டறிய வேண்டும்.

இதேபோன்றதொரு வளர்ச்சி எமது தேசத்திலும் வேண்டும்! அதனை சாத்தியப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் புலமையாளர்களும் கல்வி நிறுவனங்களும் குறிப்பாக ஆய்வுசெய்யும் நிறுவனங்களும் அத்துடன் ஊடகங்களும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். போரின் கிடுக்குப்பிடிக்குள் சிக்கியிருந்த தேசம் மெல்லமெல்ல வளர்ச்சி காணும் நிலைக்குள் வந்திருக்கும் இந்நேரத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து அதற்கான வளர்ச்சிப்பாதைக்கும் எமது இளைய சமூகத்தை இட்டுச்செல்வதற்கான வழிவகைகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். வடமாகாணத்தின் மொத்த உள்ளூர்உற்பத்தியின் பெறுபேறு சிறப்புறும்போது மற்றைய மாகாணங்களும் ஒன்றிணைந்தால் எமது நாடு முன்னேறும், மக்கள் அனைவரும் பயனடைவர். சரி இந்தப் பூனைக்கு மணி கட்டுபவர் யார் என்னும் இடர்ப்பாட்டிலேயே நாம் சிக்கிசிதைந்து கொண்டிருக்கின்றோமே தவிர ஆக்கபூர்வமான செயலில் இறங்குவது எப்போது?. விவசாயச்செய்கையை முழுமையாக கைவிட்டு எந்த அபிவிருத்தியையுமே நாம் மகிழ்ச்சியாக அடைந்திட முடியாது. ஆதனால் விவசாயச் செய்கைக்கான முக்கியத்துவத்தில் எந்தவித விழுக்காடும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதுடன் விவசாயச் செய்கையின் பரிமாணத்தை ஏனைய தொழிற்றுறையின் விருத்தியுடன் இணைத்துக் கொண்டால் பலவிதமான நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிடலாம்.

சுகமாக இருந்து சீவிக்க முடியாது என பெரியவர் சொன்ன கருத்துக்கள் பொன்மொழிகளாகவே இன்றும் இருக்கின்றன. பலவகைகளிலும் வழியைத் தேடுபவர், வளரத்துடிப்பவர்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இந்த வளர்ச்சிப்பாதை தேச ஆரோக்கியத்திற்கு வழிகோலுவதாக அமைய வேண்டும். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்பதிலிருந்து உழவுத்தொழிலுக்கு அதாவது விவசாய உற்பத்திக்கு எந்தவித பங்கமுமில்லாது தொழிற்றுறையை விருத்தி செய்ய வேண்டும். விவசாயத்தொழிலின் முன்னேற்றமின்றேல் அது எமக்கான குழியை நாமே தேடிக்கொண்டதாகவே முடியும்.

Related posts

*

*

Top