ஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்

ஈழத்தின் மூத்த இசையாளர் சங்கீதபூஷணம் வே.பாலசிங்கம் ஆசிரியர் நேற்று 27.06.2017 செவ்வாய்கிழமை அரியாலை புங்கன்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 15.09.1929 இல் பிறந்த அவருக்கு வயது 87.
இவர் ஈழத்தின் முன்னணி மிருதங்க வித்துவான் நல்லை கண்ணதாசனின் மாமனார் என்பதுவும் நடன ஆசிரியை பாலினி கண்ணதாசனின் தந்தை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

அவரது இறுதிக் கிரியைகள் இன்று 28.06.2017 புதன்கிழமை புங்கன்குளத்து இல்லத்தில் அவரது விருப்பப்படி திருமுறை பாராயணத்துடன் இடம்பெறவுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைப் பட்டதாரியாகிய அவர் இலங்கையில் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தை பொறுப்பேற்றுச் செயற்படுத்தியோருள் முக்கியமானவர் ஆவார். 1959இல் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சங்கீத பூஷணங்களின் சங்கமமாக வி.நமசிவாயம் என்பவரால் அமைக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் அம்மன்றத்தின் செயலராகப் பொறுப்பேற்ற அதனைச் சிறப்புற நடத்தினார். வருடாவருடம் இசை விழாக்களையும் முன்னெடுத்தார்.

இலங்கை வானொலியின் வாய்ப்பாட்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட அதியுயர் வகுதிக் கலைஞர்களுள் ஒருவராகவும் எஸ். பாலசிங்கம் அவர்கள் விளங்கினார்.

தனது குலதெய்வமாகிய பிரப்பங்குளம் மாரியம்மன் மீது பல கீர்த்தனைகளை இயற்றியவர் அவர்.

ஈழத்தின் இசை முகவரியாகத் தன்னை அடையாளம் காட்டிய இசையாளர் எஸ்.பாலசிங்கம் அவர்களின் பங்கும் பணியும் இந்த மண்ணின் இசை வரலாற்றில் என்றும் அழியாத எழுத்துக்களால் வரையப்பட்டிருக்கும்.

Related posts

*

*

Top