இலங்கையில் தொடரும் வறட்சி: 5 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக 5 லட்சத்து 22 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 18 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மத்தியில் பாதிக்கப்பட்டிருந்த குடும்பங்களின் எண்ணிக்கையுடன் ஓப்பிடும் போது வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையில் 42 சதவீத அதிகரிப்பு காணப்படுகின்றது.

கடந்த ஜுன் மாத தரவுகளின் அடிப்படையில் பேரிடர் முகாமைத்துவ அமைச்சில் 11 மாவட்டங்களில், 2,44,857 குடும்பங்களை 8,49,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 20 மாவட்டங்களை சேர்ந்த 5,22,790 குடும்பங்களை கொண்ட 18,09,549-ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மொனாறாகல மாவட்டத்திலே அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதாவது 1,10,140 குடும்பங்களை சேர்ந்த 4,08.083 பேர் என பேரிடர் முகாமைத்துவ அமைச்சகம் கூறுகின்றது.

மொனறாகலை மாவட்டத்தில் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் வட மேல் மாகாணத்திலுள்ள குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள்தான் கடும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிக்கின்றார். குருநாகல் மாவட்டம் – 78,026 குடும்பங்களை கொண்ட 2,56,542 பேர் புத்தளம் மாவட்டம் – 68,786 குடும்பங்களை சேர்ந்த 2,18,000 பேர் என இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் 1,57,567 குடும்பங்களை கொண்ட 5,84,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் 40,154 குடும்பங்களை கொண்ட 1,34,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை பொறுத்தவரை அநேகமான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அந்த பகுதி மக்களால் எதிர் கொள்ளப்படும் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்கு நீர் வழங்கல் வாரியம் மற்றும் உள்ளுராட்சி சபைகள் மூலம் குடி நீர் விநியோகம் நடைபெற்று வந்தாலும் அது மக்களின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என கூறப்படுகின்றது. வறட்சி காரணமாக கால்நடைகளும் வன விலங்குகளும் நீர் தேடி அலைகின்றன. நீர் இன்றி செத்து மடிந்துள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதேவேளையில்இ வறட்சியினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பயிர் செய்கையாளர்கள் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு ரூபாய் 5000 பெறுமதியான உணவு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. வேலைக்கு நிவாராணம் என்ற திட்டத்தின் கீழ் சிரமதான பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு இந்நிவாரணம் வழங்கப்படுகின்றது.

Related posts

*

*

Top